தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : ப்ரச்சன ஜோதிடம்
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

ஜாதகம் எல்லோருக்கும் இருந்து விட்டால் எந்தப் பிரச்சனைக்கும் பதில் சொல்லி விடலாம். ஆனால் பலருக்கு ஜாதகமே இருப்பதில்லை; ஜாதகம் இருந்தாலும் அது சரியான ஜாதகம் தானா என்று தெரியாது.  ஏனெனில் அவர்கள் பிறந்த நேரம் அவர்களுக்கே சரியாகத் தெரியாது.  இந்த நிலையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எவ்வாறு ?

அதற்குத்தான் நமது பெரியவர்கள் "ப்ரச்சன ஜோதிடம்" என்று கையாண்டு வருகிறார்கள். அதாவது அப்போது உள்ள பிரச்சனைக்குத் தீர்வு காண்பது.  இது சரியாக வருமா என்றால், மிகச் சரியாக வரும்.  அந்த பிரச்சனையை மட்டும் கண்டு தீர்வு காண முடியும்.  இதில் பல வகை உண்டு.

ஒருவர் தனக்கு பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்று அறிய விரும்புகிறார் எனக்கொள்வோம்.  அவரிடம் ஜாதகம் இல்லை. அவர் ஜோதிடரிடம் செல்கிறார். ஜோதிடர் அவர் வரும் நேரத்திற்கு லக்கினம் அமைத்து மற்ற கிரகங்களையும் கட்டத்திற்குள் அடக்கி ஜாதகம் தயார் செய்கிறார். அந்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்வார். இது ஒரு முறை ஜோதிடம்.

இன்னும் சிலர் வேறு முறையைக் கையாள்வார்கள்.  ராசி மண்டலத்தில் மொத்தம் 108 நட்சத்திரப் பாதம் அல்லவா?  ஜோதிடம் கேட்க வந்தவரிடம் 108 - க்குள் ஒரு நம்பரை
சொல்லச் சொல்வார்கள்.  அவர் சொல்கிற எண்ணை லக்கினமாக வைத்து ராசிக் கட்டம் அமைத்து அந்த நேரத்திற்கு மற்ற கிரகங்களைப் போட்டு ஜாதகம் தயார் செய்வார்கள். அதன் மூலம் பலன்களைச் சொல்வார்கள். இது ஒரு வழி.

மறைந்த ஜோதிட மேதை திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் ராசி மண்டலத்தை 249 பகுதிகளாகப் பிரித்தார்கள்.  இந்த ஒவ்வொரு பகுதிக்கும் "Sub"  பெயரிட்டார்.  கேள்வி கேட்க வருபவரிடம் 249 - க்குள் ஒரு நம்பர் சொல்லச் சொல்வார்.  அந்த எண்ணை லக்கினமாக வைத்துக் கொண்டு அந்த நேரத்திற்குண்டான கிரக நிலைகளைக் கட்டத்திற்குள் அடைத்து ஜாதகம் தயாரித்தார்.  அதன் மூலம் பலன்களைத் துல்லியமாகக் கூறும் முறையைக் கண்டு பிடித்தார்.  இந்த முறையில் பலன்கள் மற்ற முறைகளைவிடத்
துல்லியமாகக் கிடைக்கின்றன.

ஜோதிடம் என்பது மிகப் பரந்த கடல் போன்றது. இதில் மூழ்கி முத்து எடுக்கத் தெரிந்தவர்கள் கெட்டிக்காரர்கள். முத்து எடுக்க நல்ல அனுபவம் வேண்டும். இல்லையென்றால் மூச்சுத் திண்றி திண்டாடும் நிலைதான்  ஏற்படும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors