தமிழோவியம்
டெலிவுட் : 1977 பாடல்கள்
- சில்லுண்டி

ஹி..ஹி.. வணக்கம்பா. எல்லாரும் எப்பிடி கீறீங்கோ? கொஞ்ச நாளா தலையை மறைச்சுக்கினு இருக்க வேண்டியதா போச்சு. அதான் வரமுடியலை. அதாகப்பட்டது அம்மா டிவியை கிண்டலடிச்சாலும் தப்பு அய்யா டிவியை கிண்டலடிச்சாலும் தப்புன்னா இன்னாதான் பண்ணமுடியும்?  சரி பாலிடிக்ஸ் மேட்டரெல்லாம் வேண்டாம்னு நினைச்சாலும் போரடிக்குதே. அதான் திரும்ப வந்தாச்சு!

சரி, ஒரு சூப்பர் மேட்டரோட ஸ்டார்ட் பண்ணுவோம். 'நீ மூணாம் கிளாஸ் படிக்கிறச்ச வந்த படம்டா இது'ன்னு யாராவது சொன்னா மனசுல கொஞ்சம் குளிர் அடிக்குமில்லியா.. அப்படியோரு ஜில் மேட்டர். 'ரெண்டு வயசா இருக்கும்போது வந்த சினிமாப்பா இது'ன்னு ஒரு பெரிசு சொன்னவுடன் பசக்குன்னு உட்கார்ந்துட்டேன். வெள்ளிக்கிழமை ராத்திரி சீரியல் தொல்லையெல்லாம் இல்லாத ஒரு சுபவேளை. பதினோரு மணிக்கு ஜெயா டிவியில 77 ஆம் வருஷம் வந்த பாட்டெல்லாம் வரிசையா எடுத்து வுட்டாங்க.....தூக்கம் போயோ போச்!

Sripriyaஎம்ஜிஆர், சிவாஜியில ஆரம்பிச்சு சின்ன பசங்க ரஜினி கமல் வரைக்கும் கிட்டதட்ட எல்லா ஆட்களுமே இந்த வருஷம் பட்டைய கிளப்பியிருக்காங்க வோய்....ஜெய்சங்கரை ஸ்ரீப்ரியா ராகிங் பண்றாங்க... இன்னொரு பாட்டுல சிவகுமார் சோகமா அழுதுட்டிருக்காரு. பாட்டுதான் புரியலை. ஆனா, பிளாக் அண்ட் ஒயிட்டுல ஸ்ரீப்ரியா செம ஹாட்டு மச்சி. இன்னொரு முக்கியமான பாட்டு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திலேர்ந்து. மேக்கப் போடாத லட்சுமி. பிளாக் ஒயிட் படங்களை பார்த்தா எல்லாருமே பார்க்குறதுக்கு அழகா இருக்காங்களே.. அது எப்பிடி?

பொங்கும் கடலோசைன்னு ஒரு அட்டகாசமான பாட்டு. படகுலேயே எம்ஜிஆர் டான்ஸ் ஆடறாரு. இன்னொரு பாட்டுல லதா ஆடிக்கிட்டே எம்ஜிஆரை சுத்திச்சுத்தி வர்றாங்க... இந்த வருஷம் மட்டும் எம்ஜிஆர் நடிச்ச ரெண்டு படம் ரிலீஸாகியிருக்குதாம். சிவாஜி கூட புன்னகை அரசி கூட டூயர் பாடறார். அன்பே வா எம்ஜிஆர் ஸ்டைல்ல சிவகுமார் செம்பட்டை மூடியோட சூட்கேஸ் தூக்கிட்டு மலையோரமா ஓடிவர்றார். சிவகுமாருக்கு பாலமுரளி கிருஷ்ணா குரலு கொடுக்கிறாரு. ஸ்ரீதேவி பாட்டுக்கேத்த மாதிரி தாவித்தாவி ஓடி வர்றாங்க. முத்துராமன் தொட்டில்ல குழந்தையை கொஞ்சறார். ஜெய்கணேஷ் கூட டூயட் பாடறார். படத்தோட டைட்டில்லாம் கூட வித்தியாசமா இருக்குது.  உதாரணத்துக்கு ஒரு படத்தோட டைட்டில் 'நல்லதுக்கு காலம் இல்லை'

1977 Hits1977 ஆம் வருஷம்னு சொல்லிட்டு 'பதினாறு வயதினிலே' போடாம இருப்பாங்களா? அதே செந்தூரப்பூவே... வேற பாட்டா இல்லை? ஆனாலும் இளையராஜா வருஷா வருஷம் மெகா ஹிட் ஒண்ணு கொடுத்திட்டு வந்திருக்காரு போலிருக்கு.  இந்த வருஷம் பதினாறு வயதினிலேன்னு சொன்னா அதுக்கு முந்தைய வருஷம் அன்னக்கிளி. எம்எஸ், இளையராஜா தவிர, சந்திரபோஸ், சங்கர் கணேஷ்ன்னு எல்லோரும் டிரம்ஸை தட்டியிருக்காங்க இந்த வருஷம். டைரக்டருங்களை பத்தி சொல்லணும்னா எம்ஜிஆர், சிவாஜி காலத்து ஆளுங்க எல்லாம் இந்த வருஷம்தான் ரிட்டையர்டு ஆகியிருக்காங்க. இந்த வருஷம் படமெடுத்தவங்க யாரும் இப்போ பீல்டுலேயே இல்லை.  புதுப்புது ஆளுங்க படமெடுக்க வந்திருக்காங்க. புரட்சியே நடந்திருக்குன்னு சொல்லலாமா?

அட்டகாசமான பிளாஷ்பேக் புரோகிராமம்தான். ஆனா இதையும் ரிலீஸ் தேதி வரிசைப்படி போட்டா நல்லா இருந்திருக்கும். பாட்டை எழுதி, இசையமைத்தவர் விபரத்தோட படத்தோட டைரக்டர், நடிகர்கள் பத்தியும் சொல்றாங்க. ஆனா, படத்தோடு ரிசல்ட் பத்தியும் சொன்னா இன்னும் நல்லா இருக்கும். வாரம் ஒரு வருஷம்னு எடுத்துக்கிட்டு கலக்குறாங்க... அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையாவது மறக்காம பாருங்க.

Copyright © 2005 Tamiloviam.com - Authors