தமிழோவியம்
கட்டுரை : குளிச்சா குற்றாலம் - 3
- திருமலை ராஜன்

(சென்ற வார தொடர்ச்சி)

நல்ல உயரத்தில் இருந்து கரிய நிறப் பாறைகளின் வழியாக எங்கிருந்தோ ஓடி வரும் நீர் தப தபவென விழுந்து கொண்டிருக்கிறது. சீசன் இல்லாத நாட்களில் அருவி அத்தனை பேர் தலைக்கும் போதாதுதான். காவல்ர்கள் ஆட்களை ஒழுங்கு படித்தி வரிசையில் விட்டுக் கொண்டும், தலையைக் காண்பித்தவர்களை திருப்பதி போல ஜருகண்டி ஜருகண்டி சொல்லித் தள்ளிக்கொண்டும் இருப்பார்கள்.  ஒருவழியாக அருவியை நெருங்க. வழக்கமாக இந்த அருவியில் தண்ணீர் லட்சகணக்கான ஊசிகள் ஒரு சேர விழுவது போல் விழுந்து தோளையும், தலையும் சாத்தி எடுக்கும். ஆனால் சீசன் இல்லாத நாளன்றோ வயற்காட்டில் இருக்கும் தண்ணீர் பம்பில் விழும் சக்தியுடனே சோகையாக விழுந்து கொண்டிருக்கும். அருவிக்கடியில் தலையைக் கொடுப்பதற்கே பலத்த பகீரதம் பண்ண வேண்டியிருக்கும். கூட்டம் முன்னாலும் பின்னாலும் நெட்டித் தள்ளியது. இருந்தாலும் கிடைத்த உடத்தில் உடலை நுழைத்துக்கொண்டு பாறையோடு பாறையாக ஒட்டிக் கொண்டால், தப தவவென தலையில் இடி போல் இறங்கும் குற்றால அருவி. முதலில் மூச்சு முட்ட, கொஞ்சமாக வெளியே வந்து
ஆசுவாசப் படுத்திக் கொண்டு மீண்டும் தலையைக் காண்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக அருவி ஆலிங்கனம் பண்ணிக் கொள்ளும். தண்ணிர் சற்றுக் குறைவாக இருந்தாலும் கூட தான் குற்றால அருவி என்பதை உரக்கவே சொல்லி உடம்பை மசாஜ் செய்து விடும் பழைய அருவி. தலைக்கு எண்ணெயும், உடலுக்குச் சோப்பும் போடாமல் குளிக்கப் போனவர்களுக்கு உடல் முழுக்க எண்ணெயையும், சோப்பையும் பூசி அனுப்பி விட்டனர் உடன் குளித்த புண்ணிவாளன்கள். அவர்கள் மேல் தடவிக் கொண்டு வந்த எண்ணெயை எடுக்கும் அளவிற்கு தண்ணீர் இல்லாததே காரணம். பலபேர் எண்ணை பிறர் மேலே.

Hot Spicy Milagai Bajjiபழைய குற்றாலத்தில் எண்ணெய் மசாஜ் பண்ணி விடுகிறார்கள். பலரும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு மசாஜ் பண்ணிக் கொள்வதற்காக பல வித கோலங்களில் தொந்தியைக் காண்பித்துக் கொண்டு உட்கார்ந்த வண்ணமும் படுத்த வண்ணமுமாய் ஒரு வித அவஸ்தையில் காத்துக் கொண்டிருந்தனர். பக்கத்தில் மிளகாய் பஜ்ஜி போட்டு சூடாக விற்கிறார்கள் மிளகாய் பஜ்ஜிக்குப் பக்கத்தில் நரிக்குறவர் ஒருவர் ஊசிமணி, பாசிமணி, நரிக்கொம்பு, தேன் எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார். நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆன நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம் என்ற எம்ஜியார் பாடல் நினைவுக்கு வந்தது. ஐயோ சாமி ஆவோதி ஷாமி நரிக் கொம்பிருக்கு வாங்கலையோ என்ற அருமையான பாடலும் கூடவே.

குற்றாலத்தில் எப்படிக் குளிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கூட்டம் கூட்டமாய் சோப்பும், ஷாம்புவும் போட்டு அருவி நீரை அசுத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். தண்ணீர் இல்லாத நேரத்தில் எண்ணெயும் தடவியிருக்கக் கூடாது, ஆனால் ஏதோ தீபாவளி எண்ணெய் குளியல் போல் ஆளாளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு இலவச எண்ணெய் அபிஷேகம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அருவி கீழே விழுந்து ஷாம்புவும் சோப்பும் கலந்து ஒருவித நுரையுடன், வெண்ணிறத்தில் மலையில் மேலிருந்து கீழே விழுகிறது. அந்த அசுத்த நீரில் குரங்குகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.

சீசன் இல்லாத நாட்களில் பழைய குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்தால் பெருமாள் கோவிலில் அர்ச்சகர் Oil Massage at Kutralamகொடுக்கும் தீர்த்தம் போல் ஆளுக்கு ஒரு கரண்டி நீர் கிடைத்திருக்கும், தலையில் தெளித்துக் கொள்ளலாம். நல்லதொரு சீசன் நாளில் அந்த மலையை மறைத்து அடர்ந்து நீர் பொழியும். கீழே நிற்பவர்களால் அதன் வலுவைத் தாங்க இயலாது. மலையில் கீழிறங்கி பசுமையான மரம் செடிகள் நடுவே வளைந்து சென்று புலியருவி என்ற அடுத்த அருவியை அடையலாம். புலியருவி என்றவுடன் ஏதோ புலிகள் குளிக்குமிடம் என்று நினைத்து விட வேண்டாம். குற்றால மலைகளில் இது வரை ஐந்து புலிகளை கணக்கெடுப்பதிருப்பதாக வன இலாகா கூறினாலும், மனுசப் புலிகளின் நடுவே காட்டுப் புலியெல்லாம் தைரியமாக வர வாய்ப்பே இல்லைதான். இந்த அருவி கருமுத்து தியாகராசர் செட்டியார் என்ற ஆலை அதிபரின் பங்களாவின் வளாகத்துக்குள்ளே இருக்கிறது. இவரைக் கலைத்தந்தை என்று அழைப்பார்கள், மதுரையில் தியாகராசர் கலை, பொறியியல் கல்லூரி எல்லாம் கட்டிய கல்வியாளர். இவரது கட்டிடங்களில் எல்லாம் கலை நுணுக்கத்துடன் பொம்மைகளையும் , பூங்காக்களையும் அமைத்திருப்பார். இவர் நிறுவனத்தின் கட்டிடங்களைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு விடலாம். இந்த பங்களா பூவாத் தலையா படத்தில் வரலட்சுமியின் பங்களாவாக நடித்திருக்கும்.

இதை அருவி என்று சொன்னால் குற்றாலத்தில் உள்ள மற்ற அருவிகள் எல்லாம் கோவித்துக் கொள்ளலாம். இதை புலியருவி என்று அழைப்பதற்குப் பதிலாக சந்தன அருவி என்று அழைக்கலாம்.  இந்த அருவியின் மேலே போய், இதன் நதி மூலத்தைப் பார்க்கலாமே என்று நதி வரும் பாதையில் மலை மீது ஏறிச் சென்றால். அந்த நீர்வழிப்பாதைதான் குற்றாலத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களின் மாபெரும் திறந்தவெளி கழிப்பறை என்பதைக் காணலாம். விரிசை, வரிசையாக காலை, மாலை, மதியக் கடன்களை சற்று முன் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜிகளின் உபயத்தில் அந்த அழகிய நதியில் கழித்துக் கொண்டிப்பார்கள். இதற்குத்தான் நதி மூலம் பார்க்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள் போலும்.  மற்ற அருவிகளிலும் இது நடக்கலாம் எனினும் இங்கு சந்தனமும் பன்னீரும் சூடாக நம் தலையில் உடனுக்குடன் வந்து ஐக்கியமாகும்
வாய்ய்புகள் மிக, மிக அதிகம். அதையெல்லாம் பற்றிக் கவலையில்லாமல் அந்த இத்தினிக்கூண்டு அருவியில் ஒரு நூறு பேர் குளிக்கிறேன் பேர்வழி என்று ஒருவருக்கொருவர் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தனர் இதுக்கு வீட்டிலிலுள்ள ஷவரே தேவலாம். பாவம், தண்ணீரைக் காணமல் காணும் சென்னை வாசிகள் போலிருக்கிறது. புலியருவியிலும் ஏராளமான குரங்குகள் குளிக்க வருபவர்கள் வாங்கிப் போடும் வடைக்கும், வாழைப்பழத்திற்கு ஏங்கிக் காத்திருக்கின்றன. அவைகளாக கானகத்தில் போய் கனிகளைத் தேடிச் சென்ற காலமெல்லாம் போய் விட்டது.

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சிய காலமெல்லாம் போய் வடை கொடுத்து கொஞ்சுகின்றன. ஒரு குரங்கு இலாவகமாக பஜ்ஜியில் நடுவில் இருக்கும் மிளகாயை எடுத்து தூரப் போட்டு விட்டு கடலைமாவு பகுதியை மட்டும் நாசூக்காய் சாப்பிட்டது. கொஞ்ச நேரம் இருந்திருந்தால் பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் ஒரு கப் நரசுஸ் கா·பி கிடைக்குமா என்று கூடக் கேட்டிருக்கும் போல, அவ்வளவு சொகுசு. எல்லா அருவிகளிலும் மக்கள், சுகாதாராத்தைப் பற்றியும் சூழலின் தூய்மை பற்றியும் அபார உணர்வும் அறிவும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். கூசாமல் குப்பைகளையும், பாலித்தீன் பைகளையும் தூக்கி எறிகிறார்கள். மலை முழுக்க குப்பைகளும், மீந்த உணவுகளும், பாலித்தீன் பைகளும் அழுக்கு மலைகளென கண்ட இடங்களிலும் குவிகின்றன. அந்த மலையும் அருவியும் கடுமையாக நமது மக்களால் மாசு படுத்தப் படுகின்றன. இத்தனைக்கும் நகராட்சியும், வ¨ இலாகாவும் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைத்துத் தான் இருக்கிறார்கள். குப்பை போடாதே என்ற எச்சரிக்கையின் அடியிலேயே குப்பையைக் குவிக்கிறார்கள். இவர்களெல்லாம் இந்த இயற்கை வனத்திற்குத் தகுதியானவர்கள்தானா, இயற்கையின் அருமை தெரியாத இவர்களுக்குப் போய் இயற்கை இத்தனைக் கொடைகளை நாய் பெற்ற தெங்கம் பழமாகக் கொடுத்து விட்டதோ எனத் தோன்றியது.

தகுதியில்லாத ஜனங்களுக்கு இயற்கை அன்னை தப்பாக அருள் பாலித்து விட்ட கோபத்திலும், ரக்தியிலும்தான் அவ்வப்பொழுது பூகம்பத்தையும், சுனாமிக்களையும் அனுப்பி பழி தீர்த்துக் கொள்கிறாளோ எனத் தோன்றுகிறது.

(தொடரும்..)

Copyright © 2005 Tamiloviam.com - Authors