தமிழோவியம்
வானவில் : கூனாதே! குழையாதே !
-

bharathiதங்கப்பெருமாள் பிள்ளை என்பவர் அவரது ஊரிலே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து பாரதியாரைப் பேசவும் அழைத்திருந்தார். விடிகாலை ரயிலில் பாரதி வருகிறார் என்று மாலையும் கையுமாக பாரதியை வரவேற்க பல இளைஞர்கள் ரயிலடிகுச் சென்றார்கள். எல்லா பெட்டிகளில் தேடியும் பாரதியார் கிடைக்கவில்லை.

உடனே பிள்ளையவர்களிடம் சென்று இளைஞர்கள் "ஐயா, வண்டியிலே தேடினோம் பாரதி வரவில்லை" என்றார்கள்.

பெருமாள் பிள்ளை சிரித்தார். அவர் பின்னாலிருந்து குரல் வந்தது.

"யாரடா வரவில்லை-பாரடா பாரதியை. வண்டி வந்தது போனது. பாரதி வந்தான்; இருக்கிறான் !" என்று கர்ஜித்தார்.

பயந்து நடுங்கினார்கள் மாணவர்கள். உடம்பெல்லாம் கூனிக் குறுகிக் கும்பிடு போட்டார்கள்.

அதைக் கண்டார் பாரதி; தீப்பொறி பறக்க விழித்தார்.

"அடேய் கூனாதே! குழையாதே! கும்பிடு போடாதே! கும்பிடு போட்டுப் போட்டு குட்டிச்சுவராய் போனது போதும்! நிமிர்ந்து நில்!" என்றார்.

ரயிலிலிருந்து இறங்கிய இந்த அமுண்டாசுப் பேர்வழியை பாரதி என்று அம்மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை. கவிராயர் என்பதற்கேற்ப மகரகண்டியும் பட்டுப் பீதாம்பரமுமாக இருப்பார் பாரதி என்று எண்ணி அவர்கள் ஏமாந்துவிட்டார்கள்.

முறுக்கு மீசை, முண்டாசணிந்த மனிதர் அவர்கள் கண்களுக்கு கவிஞராகத் தோன்றாததில் வியப்பில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors