தமிழோவியம்
தராசு : தொடரும் தீவிரவாதம்
- மீனா

தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பரவலாக ஆயுதக் கலாச்சாரமும் தீவிரவாதிகளின் அட்டூழியங்களும் பெருகி வருகின்றன. தனிப்பட்ட விரோதத்தை மனதில் கொண்டு நடக்கும் படுகொலைகள் தமிழகத்திலேயே கணக்கில் அடங்காவண்ணம் அதிகரித்துவருகிறது. அமைதிப் பூங்கா என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்த தமிழ்நாட்டில் இன்று அரிவாள் கலாச்சாரம் தழைத்தோங்கியுள்ளதை முதல்வர் உள்பட எந்த ஒரு அரசியல்வாதியும் அதிகாரியும் மறுக்கவில்லை.

இதுமட்டுமல்லாது எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணமுடியாதவாறு ஊடுறுவியுள்ளார்கள் என்பதை உ.பி, ம.பி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர காவல்துறைகளும் மத்திய உள்துறை அமைச்சரும் உறுதிபடுத்தியுள்ளார்கள். இதற்குச் சான்றாக உ.பியில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் வெடிகுண்டுச் சம்பவங்களைக் கூறலாம்.

நாட்டின் நிலைமை இப்படி இருக்க தமிழகத்திலும் மத்தியிலும் எதிர்கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி ஆள்வோர் இதைத் தடுக்க இதுவரை என்ன செய்துள்ளார்கள், இனி என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான். கேள்வி கேட்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கும் இவர்கள் அனைவரும் ஒன்றை நினைப்பதே இல்லை. அரசியல்வாதிகளின் தலையீடு பாதுகாப்புத் துறையில் இல்லாமல் போகிறதா என்பதைப் பற்றி யோசிக்கக்கூட ஒருவரும் தயாராக இல்லை.

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அரசியல்வாதிகள் ஆதிக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அரசியலுக்கு வருவது பொதுமக்களுக்குச் சேவை செய்ய என்ற எண்ணம் மறைந்து - அரசியலுக்கு வருவதே சொந்தம் பந்தம் எல்லாம் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சுகமாக இருக்க என்ற எண்ணம் நம் அரசியல்தலைவர்களுக்கு வந்து வெகுகாலம் ஆகிவிட்டது.

அதிகாரிகள் என்னதான் பொறுப்பான முறையில் செயல்பட முனைந்தாலும் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவற்றிலும் அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாகவே பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. நாட்டில் வெடிக்கும் பல ஜாதிச் சண்டைகளின் பிண்ணனியிலும் அரசியல்வாதிகளின் கை ஓங்கியிருப்பதை நாம் தெளிவாக உணரலாம். தங்களது சொந்த லாபத்திற்காக நாட்டில் பல வன்முறைச் சம்பவங்களை அரசியல்வாதிகள் தூண்டிவிட்டதும் - அவர்களின் குறுக்கீடு காரணமாகவே அதிகாரிகள் ஒன்றும் செய்ய இயலாமல் கைகட்டி நின்றதும் நாம் பலமுறை பார்த்துச் சலித்த விஷயங்கள்.

நாட்டின் பாதுகாப்பு இந்த அளவிற்கு எப்போதுமே கேள்விக்குறியானதில்லை என்று வருந்தும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சவால். பிரதமரும் மாநில முதல்வர்களும் ஒன்று சேர்ந்து பாதுகாப்பு விஷயத்தில் கண்டிப்புடன் நடக்குமாறு காவல்துறை மற்றும் உளவுத் துறைக்கு கட்டளையிடட்டும். எந்த நிலையிலும் யாருடைய குறுக்கீடும் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருக்கக்கூடாது என்பது அவர்களது கட்டளையின் பிரதான அம்சமாக இருக்கட்டும். நாட்டின் இறையாண்மையை நிலைநாட்டும் விஷயத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு கொஞ்சமும் இல்லாமல் அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க அவர்கள் அனுமதி கொடுக்கட்டும். அப்போது பாருங்கள் நாடு அமைதிப்பூங்காவாக தழைப்பதை.

கைது செய்யப்பட்ட ரவுடி தங்களுக்கு வேண்டப்பட்டவன் - கட்சிக்காரன் - தேடப்பட்ட தீவிரவாதியை உருவாக்கியதே நாங்கள்தான் - அதனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க விடமாட்டோம் என்ற ரீதியில் அரசியல்கட்சிக்காரர்கள் அநியாயம் செய்வதால்தான் நாட்டில் இத்தனைப் பிரச்சனைகளும். அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தலையிடாமல் அவர்களை சுதந்திரமாக செயலாற்ற விட்டுத்தான் பாருங்களேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors