தமிழோவியம்
கவிதை : உங்களுக்கு வயதாகிவிட்டது
- மாதங்கி கிருஷ்ணமூர்த்தி

 

டப்பாவிலிருந்து
எங்களைத் தூக்கி எறிந்தார்கள்
முதிர்ந்த அரிசிமாவுத் துகள்களான
எங்களை
ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால்
எலும்புமுறிவு இன்றி
கைக்கோர்த்தவாறு
இறங்கி அமர்ந்தோம்
புள்ளிகளாய் எங்களைப் பிரித்துக்கொண்டு
எங்கள் இடைவெளிகளை
நாங்களே தீர்மானித்தோம்
கோடுகளும் வளைவுகளுமாய்
எங்கள் உடல்களை
நீட்டிக்கொண்டோம்
வளைத்துக்கொண்டோம்
கைகளால் இணைத்துக்கொண்டோம்
தள்ளாதவர்களைத் தூக்கிக்கொண்டோம்
யாவரும் வியக்கும் வண்ணம்
நாங்கள் பறக்கத் துவங்கினோம்
எங்களுடன் பறந்து வந்தது
நாங்கள் வளர்த்த
அவர்கள் மகிழ்ச்சியும்

Copyright © 2005 Tamiloviam.com - Authors