தமிழோவியம்
கவிதை : காத்திருக்க நேரமில்லை
- லெனின்

கடல் நீர் குடித்ததற்கே காமம் தலைக்கேறி
கரை ஒதுங்கும் போது கறை கொண்ட மனதோடு
நிராயுதபாணியான நிலப் பெண்ணின்
துகிலுரிக்கும் துரியோதன "சூறாவளி"!

கோபத்தில் முகம் சிவக்காமல், வித்தியாசமாய் முழு உடலும் கறுத்து
இருட்டில் குறி பார்த்து இடி குண்டை வீச - மின்னல் ஒளி அடித்து
பிறகு மழை கை மூலம் அழிவை தடவிப் பார்த்து
மனிதர்களின் அலறல் சத்தம் கேட்டு
ஆனந்தத்தில் காற்றின் மூலம் சிரிக்கும் அரக்க "மேகம்"!

"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்"
தொடக்கப் பள்ளியில் யாரோ வாசித்த போது
வாசலில் மறைந்து நின்று கேட்டு விட்டு
அராஜக ஆட்டத்தை அவ்வப்போது அரங்கேற்றி
அனைத்தையும் உண்ணும் அனகொண்டா "பூகம்பம்"!

சூரிய ராட்டினத்தில் சுற்றிக் கொண்டே இருப்பதனால்
தலை கிறுகிறுத்து, பூமி தன் மலைவாயின் வழியே
'தீ'யுடன் எடுக்கும் வாந்'தீ' "எரிமலை"!

யாருக்கும் தெரியாது என நினைத்து
நீரின் அடியில் சென்று, தன் கபால ஓடுகளை
கண நேரம் ஆட்டிப் பார்க்கும் களவானி பூமி!
கடலை 'சாமி' என நினைப்பவனையே
காவு கொள்ளும் எமனின் பினாமி "சுனாமி"!

பிரியாத பெருங்கடலையே நான்காய் பிரித்த மனிதன்
பிரிந்தே கிடக்கும் நிலத்தை- பாகப்
பிரிவினை செய்வதில் ஒன்றும் வியப்பில்லை தான்!
அதற்காக,
அணு கருவினை, ஆயுத வயலில் விதைத்து
உயிர்களை களை எடுத்து - அடுக்கி வைக்கும்
வைக்கோல் போர்களாய் "உலகப் போர்கள்"!

மதிய உணவு போடுவதால், பசி கொண்ட நேரத்தில்
பள்ளி என்று கூட பார்க்காமல் பந்தி கொள்ளும்,
கொண்ட பிறகு முந்திக் கொல்லும் தீவிரவாத "தீ"!

மதங்களின் பெருமைகளை சொல்லி மாநாடு நடத்த
'கட்அவுட்'களாய் வைக்கப்படும்
மதம் கொண்ட கலர் வரங்களாய் "கலவரங்கள்"!

இப்படி இத்தனை ஆபத்துக்களுக்கு நடுவே
உயிருடன் வாழ்வதே சாதனை!
இதை எல்லாம் தாண்டி,
காதலிக்கப் புறப்படுவது அதை விட சாதனை!
காதலே உன் காதில் விழாமல் இருந்த உன்னிடம்
என் காதலை சொல்லிய பிறகும் கூட
இன்னும் நீ யோசிப்பது - சோதனை!

நீ நின்று நிதானமாய் யோசிப்பதற்கும்
நான் உன் நினைப்பை மென்று தின்று காத்திருப்பதற்கும்
நேரமில்லை என்னவளே!
கொஞ்சம் தாமதப்பட்டாலும்,
சொர்க்கத்தில் தான் நாம் இனி சேர முடியும்!

ஏனென்றால்,
ஐம்பது வயது வரை வாழ்ந்தாலே
'அதிக நாள் வாழ்ந்த'தற்கான
விருது கொடுக்கும் காலமிது!

முடிவெடு! விடை கொடு!
இல்லையென்றால் விட்டு விடு!
அதோ... அணைக்கும் தூரத்தில்.... அடுத்தவள்!

Hello... excuse me...Do you have one min pls?

Copyright © 2005 Tamiloviam.com - Authors