தமிழோவியம்
திரைவிமர்சனம் : தர்மபுரி
- மீனா

Dharmapuriவிஜயகாந்த் எம்.எல்.ஏ ஆன பிறகு வந்திருக்கும் முதல் படம் - ஆகவே அரசியல் நெடிக்கு பஞ்சம் இருக்காது என்று நினைப்புடன் படம் பார்க்க உட்கார்ந்தால் முதல் நாலு காட்சிகளிலேயே தெரிந்துவிடுகிறது இந்தப்படத்தில் அரசியல் நெடியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பது.

தர்மபுரியை அடுத்த ஒரு கிராமத்தில் அடங்காமல் அட்டூழியம் செய்து வருபவர்கள் மணிவண்ணனும் அவரது இரண்டு மகன்களும். இவர்களது ஆட்டத்தால் ஒரு காலத்தில் அங்கே ஓஹோ என்று வாழ்ந்து இறந்து போய்விட்ட மெய்யப்பன் என்பவரது அஸ்தியைக் கூட ஊர்மக்களால் கரைக்க முடியாத நிலை. பள்ளிக்கூடத்தை சாராயக்கடையாகவும் பிரசவ ஆஸ்பத்திரியை கேளிக்கை விடுதியாகவும் மாற்றி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் மணிவண்ணனின் மகன்களான ராஜ்கபூரும் பாபியும்.

இவர்களது கொட்டத்தை அடக்க ஒரு காலத்தில் ஊரை விட்டு போன மெய்யப்பனின் மகனான சிவராமன் வந்தால் தான் முடியும் என்று நம்புகிறார்கள் ராஜேஷ், பீலிசிவம் உள்ளிட்ட ஊர் பெரியவர்கள். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் ஜாதகம் பார்த்து ராமேஸ்வரத்தில் இருப்பதையும், சிவராமனின் சின்ன வயது போட்டோவைக் காட்டி கம்ப்யூட்டரில் போட்டு தற்போது அவர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொண்டு ராமேஸ்வரம் செல்கிறார்கள்.

விஜயகாந்த் வீட்டிற்கு செல்லும் ஊர் பெரியமனிதர்களைப் பார்த்ததும் கோபம் கொள்ளும் விஜயகாந்த் அம்மா சுமித்ரா அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். அம்மாவிற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினாலும் எதற்காக அவர்கள் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தனிமையில் அவர்களைச் சந்திக்கிறார் விஜயகாந்த்.அப்போது ஆரம்பிக்கிறது பிளாஷ்பேக்.

தர்மபுரியில் மண்பானை தொழிலுக்கு பெயர் போன கிராமத்தில் பெரியவராக மதிக்கப்படுபவர் மெய்யப்பன் (விஜயகுமார்). தனது முழு சொத்துக்களை மக்களுக்காக தானம் செய்தவர் மீது ஊர் பணத்தில் ஆயிரம் ரூபாய் திருடிவிட்டார் என்று அபாண்ட பழி சுமத்துகிறார் அவரது தம்பி முறையான மணிவண்ணன். மணிவண்ணனின் நயவஞ்சக நாடகத்திற்கு ஊர் பெரிசுகளும் தலையாட்ட, தன்னை நம்பாத கிராமத்தை விட்டு குடும்பத்துடன வெளியேறுகிறார் விஜயகுமார்.

மணிவண்ணன் மற்றும் அவரது இரண்டு மகன்களின் கொடுமையிலிருந்து விஜயகாந்த் மக்களைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். ஆனால் விஜயகுமாருக்கு ஏற்பட்ட முடிவை மனதில் வைத்து விஜயகாந்த் ஊருக்கு நல்லது செய்யக் கிளம்பும்போது தடுக்கிறார் சுமித்ரா. அம்மாவின் எதிர்ப்பை மீறி எவ்வாறு விஜயகாந்த் மணிவண்ணன் - ராஜ்கபூர் - பாபி ஆக்யோரின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றினார் என்பதே கதை.

விஜயகாந்த் நன்றாக நடிப்பது வெகு சில படங்களில் மட்டுமே. அவருடைய சமீபத்திய படங்களில் எல்லாம் அவரை ஒரு பெரிய ஆளாக காட்ட உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அதிகம் என்றால் இந்தப்படம் முழுவதுமே அப்படிப்பட்ட காட்சிகள் தான். கட்டிலில் படுத்துக்கொண்டே சண்டை போடுவது, சீட்டு கட்டு போல அடுக்கி வைக்கப்பட்டிருப்பவர்களை ஒரு உதை விட்டுவிட்டு பக்கம் பக்கமாக அரசியல் நெடி வீசும் வசனம் பேசுவது, காமெடி என்ற பெயரில் முகத்தில் ஏடாகுடமான ரியாக்ஷன்களைக் காட்டுவது என்று பட்டையைக் கிளப்புகிறார் விருத்தாசலம் எம்.எல்.ஏ.

நாயகனை மையப்படுத்திய ஒரு படத்தில் நாயகிக்கு என்ன வேலையோ அதேதான் இந்தப்படத்தில் லஷ்மிராய்க்கு. ராஜேஷ், பீலிசிவம் போன்றவர்களும் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவே. பாஸ்கரின் காமெடிதான் படத்தின் ஹை-லைட். சுமாரான அவரது காமெடி கூட இந்தப்படத்தில் சூப்பராக தெரியக் காரணத்தை வெளிப்படையாக சொல்லவா வேண்டும்?  மணிவண்ணன், ராஜ்கபூ மற்றும் பாபியின் வில்லத்தனங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சுமார். அதுவும் பல இடங்களில் அவர்களைக் கோமாளிகள் போலக் காட்டுவது எதற்காகவோ?

அரதப்பழசான இந்தக்கதைக்கு திரைக்கதை வசனம் பாடல்கள் எல்லாம் எழுதி டார்ச்சர் செய்கிறார் இயக்குனர் பேரரசு. போதாத குறைக்கு ஒரு காட்சியில் நடிக்க வேறு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எல்லாமே டப்பாங்குத்து ரகம். பின்னணி இசையில் டார்ச்சர் செய்திருக்கிறார்.  செம்மண் பூமியை கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தும் சரவணனின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதியில் பார்த்த அதே பார்முலா கதையை இங்கே கொஞ்சம்.. அங்கே கொஞ்சம் என்று மாற்றி தர்மபுரியிலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்குப்பிடிப்பார் என்று பார்ப்போம்...

Copyright © 2005 Tamiloviam.com - Authors