தமிழோவியம்
சிறுவர் பகுதி : தம்பி !
- பொன்ஸ்

"அப்பா! எனக்கு ஒரு வாட்ச் வேணும்பா!" தயங்கித் தயங்கித் தன் வேண்டுகோளைத் தந்தை முன் வைத்தான் கோபி.

"பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனுக்கு வாட்செல்லாம் எதுக்குடா?" அப்பாவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கோபி காணாமல் போயிருந்தான்.

"அப்போ, மேசை மேல வச்சிருந்தாரே அந்த வாட்ச் யாருக்கு?" என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது

அன்றே அந்தக் கடிகாரத்தைப் பக்கத்து வீட்டு பாலுவுக்கு அவன் தந்தையே அழைத்துக் கொடுப்பதைப் பார்த்த போது கோபிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

பாலுவும் கோபியும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் படிப்பில் சுட்டி. ஆனால், கோபியின் தந்தை, பாலுவுக்கே பரிசுகள் தருகிறார். பாலுவின் குடும்பமும் அப்படி ஒன்றும் வசதி குறைந்ததில்லை. அவனைப் பாராட்டும் போது கோபிக்குக் கோபம் கோபமாய் வரும்.

வழக்கம் போல் திங்கட்கிழமை, கோபி 'பரபர'வென்று பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். "ஏம்பா கோபி! கொஞ்சம் இருந்து தம்பி பாபுவையும் கூடக் கூட்டிகிட்டுப் போப்பா.." அம்மா கெஞ்சித் தான் கேட்டாள். "அடப் போம்மா! வேற வேலையில்லை! நான் இன்னிக்குச் சீக்கிரம் ஸ்கூல் போகணும். கணக்கு வாத்தியார் சீக்கிரம் வரச் சொல்லி இருக்காரு. உன் பையன் இப்பத் தான் எழுந்திருக்கான். இனிமே இவன் குளிச்சி, சாப்பிட்டு, ரெடியாகி, நான் எப்பப் போகிறது?" பொய்யாகவே ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு நகர்ந்தான் கோபி.

கோபி எப்போதும் இப்படித் தான். தம்பிக்கு என்று வரும்போது நழுவிவிடுவான். இத்தனைக்கும் கோபிக்கு அவன் அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் பின்னால் உட்கார வைத்து அழைத்துப் போவதைத் தான் முடியாது என்று வீரம் பேசிவிட்டு வந்து கொண்டிருக்கிறான்.

கோபி காலையழகை ரசித்துக் கொண்டே மெதுவாக சைக்கிளை மிதித்தான். சற்று தூரத்தில் பாலுவைப் பார்த்தவுடன் தன் மிதிவண்டித் திறமையை அவனுக்குக் காட்டி வெறுப்பேற்ற வேண்டும் என்று ஏனோ தோன்றியது. வண்டியை வேகமாக மிதித்தான், மணியடித்தபடி. அந்த நேரம் பார்த்துத் தானா பாலுவின்  தம்பி சாலையைக் கடந்து அண்ணனிடம் ஓட எண்ணி நடுவில் குதிக்க வேண்டும்?

கண்ணிமைக்கம் நொடியில் நடந்துவிட்ட இந்த நிகழ்வால், "ஒரு வேளை அவன் மீது மோதிவிடுவேனோ?" என்று பயந்து போனான் கோபி. ப்ரேக் போடக் கூடப் அவனுக்குக் கைவரவில்லை. யாரும் எதிர்பாராதவிதமாய் நடந்தது அது. பாலு சாலையின் குறுக்கே பாய்ந்து தன் தம்பியைப் பிடித்து இழுத்துவிட்டான். கோபி செயல்பட்டு பிரேக்கைப் பிடித்தபோது, பாலு கீழே விழுந்து, மணலைத் தட்டிக் கொண்டு எழுந்திருப்பதையும், அவன் தம்பி மருண்டு முழிப்பதையும் பார்க்க முடிந்தது. பாலுவின் காலில் லேசான சிராய்ப்பு வேறே..

சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்துடனும், எல்லாத்துக்கும் தானே காரணம் என்ற குற்ற உணர்வுடனும் கோபி தயங்கி நின்றான்.

"சாரி பாலு!" கீழே விழுந்துவிட்ட தம்பியின் புத்தகமூட்டையை எடுத்து அதிலும் மணலைத் தட்டிக் கொண்டிருந்த பாலுவிடம் தயங்கித் தயங்கிச் சொன்னான் கோபி

"பரவாயில்லை கோபி! யாருக்கும் எதுவும் ஆகலை.. இவன் தான் அவசர அவசரமா ஓடி வந்து குறுக்கப் புகுந்திட்டான். நீ போ!" பாலு சொல்லச் சொல்ல கோபி ஆச்சரியத்துடன் பார்த்தான்.

"ரத்தம் வருதே பாலு!"

"நீ கவலைப் படாதே. நான் போய் ஸ்கூல் லைப்ரரில கீழே விழுந்துட்டேன்னு சொல்லி, முதலுதவிப் பெட்டி கேட்டு மருந்து போட்டுக்கிறேன். நீ கிளம்பு!" பாலு நடக்கவே தொடங்கிவிட்டான்.

கோபி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவனுக்குள் ஏதோ கரைந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பியின் புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, "இனிமே இப்படி எல்லாம் ரோட்டில் ஓடி வரக் கூடாது என்ன? ரெண்டு பக்கமும் பார்த்து தான் கிராஸ் பண்ணனும்" என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்துக் கொண்டே நின்றான். அவன் அப்பா ஏன் அவனை விட்டுவிட்டு பாலுவைத் தூக்கி வைத்துப் பாராட்டுகிறார் என்பது புரிகிறாற்போல் இருந்தது.

சைக்கிளை எடுத்தவன் சர்ரென்று திரும்பி, வீட்டுக்கு வந்து, "அம்மா, தம்பி ரெடியாய்ட்டானா?, அவனையும் கூட்டிகிட்டே போறேன்." என்று குரல் கொடுத்த போது அம்மாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors