தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : கிருமி நாசினி மஞ்சள்
- பத்மா அர்விந்த்

பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது. அதேபோல சென்னையில் மழையும் அதன் தொடர்பான வெள்ளமும், பிறகு வரக்கூடிய தொற்றுநோய்கள் பற்றிய பயமும் இருக்கும் இந்த வேளையில் இயற்கையாக கிடைக்கும், நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு சாதாரண கிருமிநாசினியை பற்றிய விவரங்களை இங்கே தருகிறேன்.

Turmericநாங்கள் குடலில் வரும் புற்றுநோயின் HLA எனப்படும் ஜீன்களின் செயல்படும் திறனுக்கு ஸ்டீராய்டு அல்லாத வீக்கத்தை குறைக்கும் சக்தி உள்ள மருந்துகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆராய்ந்து கொண்டிருந்த போது, மஞ்சளின் விளைவை பற்றியும், மனிதனின் எதிர்ப்பு சக்திக்கு இது எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றியும் பரிசோதனைகள் செய்திருக்கிறோம். இப்போது மஞ்சளின் ஒரு வித வேதிப் பொருளான “கர்க்யுமின்” பெருமளவில் புற்றுநோய் பரவுவதை தடுக்க உதவுகிறது என ஆதரபூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

கர்க்யுமின் லோங்கா என்ற தவரத்தின் கிழங்குகளிலிருந்து எடுக்கப்படுகிறது. பூமிக்கடியில் விளையும் கிழங்கு, தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் அதிகம் விளைகிறது. 1868 இலிருந்தே மஞ்சள் பற்றிய மருத்துவ ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது

இதற்கு வீக்கத்தை குறைக்கும் சக்தியும், anti oxidant ஆகவும் செயல் படும் சக்தியும் உண்டு. இருமல், சளி போன்றவற்றை எதிர்க்க சக்தியை கொடுக்கிறது.

வீரியம் மிக்க ஆக்சிஜனை வீரியம் இழக்க செய்கிறது. பொதுவாக தலைவலி போன்ற உபாதைகளுக்கு இளம் சூட்டில் மஞ்சள் தடவினால், இரத்த குழாய்களை விரிவாக்கி தலைவலியை போக்குகிறது. கொழுப்பு ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றமடைவதை தடுக்கிறது

சைக்ளோ ஆக்ஜினனேஸ் என ப்படும் (Cox 1 gene inhibotor) ஒருவித புரதம் உண்டாவதை தடுக்கிறது. இது ப்ரோஸ்டக்லாண்டின் எனப்படும் மனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைக்க வ ல்லதும், வீக்கத்தை உண்டுபண்ணக்கூடியதுமான வேதிப்பொருள் உண்டாவதை தடுக்கிறது.

புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கும் தன்மை உண்டு: தம்பிதொரை என்பவருடைய ஆராய்ச்சி முடிவுகளின் படி கர்க்யுமினுக்கு புற்று நோயை எதிர்க்கும் சக்தி உள்ளது. ப்ராஸ்டேட் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. மேலும் அதிக புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என்று மருத்துவ சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். என்னுடைய ஆராய்ச்சியில் குடல் புற்றுநோய் திசுக்களின் வளர்ச்சியை குறைக்க எதிர்ப்பு பொருளை உண்டாக்குவதையும், மார்பக புற்றுநோய் திசுக்களை மேலும் வளராமல் தடுப்பதையும் பார்த்திருக்கிறேன்.

இதேபோல வர்மா என்பரும் தன்னுடைய ஆய்வறிக்கையில் மார்பக புற்றுநோய் செல்களில் இதன் தாக்கத்தை கூறியுள்ளார். மார்பக புற்று நோய் சார்ந்த MCF 7 என்ற இந்த வகை செயற்கை செல்களில் தான் எங்களுடைய ஆரய்ச்சியும் நடந்தது. புற்றுநோய் உள்ள செல்கள் மேலும் உருவாகாமல் தடுக்கும் ஆனாலும், அதிக அளவில் இதன் வீரியம் குறைந்து விடுவதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

ஒருவகை மீனின் எண்ணெயை விட, மஞ்சளுக்கு வீரியம் அதிகம் என்று பல அறிவியலராலும் பாராட்டப்படும் மருத்துவ சஞ்சிகை ஒன்று கூறுகிறது.

ஜப்பானிலும், லண்டனிலும் உள்ள பல உயிர் வேதியியல் நிறுவனங்கள் இப்போது கர்க்யுமின் புற்றுநோய் எதிக்கும் திறனில் ஆராய்ந்து கொண்டு வருகிறார்கள்.மிஸிசிப்பி பல்கலை கழகத்தை சேர்ந்த இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் மஞ்சளின் தன்மையை கண்டறிந்ததற்காக காப்புரிமை பெற்றனர். இதை எதிர்த்து இந்திய அரசு புகாரிட்டு, தன்னுடைய உரிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கர்க்குமின் Cox 2, NOS, TNF பல வேதி பொருட்களின் உற்பத்தியை குறைக்க வல்லது.இதே போல செல்களின் உற்பத்தியை பெருக்க வல்ல சில வேதி பொருட்களின் உற்பத்தியை தடை செய்து, புற்றுநோய் அதிகம் வளராமல் தடுப்பதாக, அமெரிக்காவில் உள்ள M.D Anderson புற்றுநோய் ஆராய்சிக்கழகத்திலிருந்து வெளியகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கர்க்யுமின் புற்றுநோய் வருவதை தடுக்கவும், நோய் உள்ளவர்களின் மற்ற பாகங்களில் பரவாமலும் தடுப்பதோடு, இத்தகு செல்கள் அழியவும் உதவி செய்கின்றன. ஒரு நாளைக்கு 10 கிராம் உட்கொள்ளச் செய்தபோதும், மருந்து பரிசோதனையில் பங்கு கொண்ட நோயாளிகளுக்கும், ஆரோக்கியமான வர்களுக்கும் எந்த வகை பக்க விளைவுகளும் ஏற்படவில்லை(human clinical trial) என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

அல்ஷிமிர் என  ப்படும் நரம்பு மண்டல சம்பத்தப்பட்ட நோயில் 42% முதுமை அடைவதை தடுக்கிறது எனவும், 62% வீக்கத்தை குறைப்பதாகவும் ஹூவாங், கோல் என்ற விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

அடிக்கடி ஆஸ்த்மா வந்து கொண்டிருந்த நண்பருக்கு சூடான பாலில் மஞ்சளை சிறிதளவு சேர்த்து குடித்து வர சொன்னேன். இப்போது அவரின் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கிறது.

காயங்கள் ஏற்பட்டால், தசை சீக்கிரம் வளர்ந்து அதை மூடவும் மஞ்சளை உபயோகிக்கலாம்.

நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகம்  குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு மஞ்சளை திரவ வடிவில் உட்செலுத்தி அதன் விளைவுகளை கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் மஞ்சள் ஒரு மாத்திரையாக கடைகளில் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

M.D.Anderson புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் வார அறிக்கைகள், எங்கள் பரிசோதனை சாலையின் முடிவுகள் (நான் இப்போது ஆராய்ச்சி செய்வதில்லை), Dr.Schiff அறிக்கைகள், மற்றும் சில ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு மேலே உள்ள விவரங்களை எழுதியுள்ளேன்.

உணவு தயாரிக்கும் போது மஞ்சளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors