தமிழோவியம்
கட்டுரை : குளிச்சா குற்றாலம் - 4
- திருமலை ராஜன்

(சென்ற வார தொடர்ச்சி)

அடுத்த அருவியான மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவிக்குச் செல்லலாம். குற்றால நகருக்குள் இருக்கிறது இந்த அருவி. புலியருவியில் இருந்து செல்லும் சாலை தேக்கு மரங்களடர்ந்த குற்றால நகருக்குள் நுழைகிறது. வழியில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி.  குற்றாலம் மெயின் அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. இரவு நேரத்திலும் பிரகாசமான விளக்குகளின் ஒளியில் மிளிரும் அருவி இது. அருவி விழுந்து ஆறாக ஓடிச் செல்கிறது

குற்றால நாதர் கோவிலை கடந்து, ப்ளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுச் சாமான்கள், வளையல், நேந்திரம் சிப்ஸ், மூலிகைகள், பழங்கள் என்று பல்வேறு பொருட்களை அருவி க்கரை வரை கடை பரத்தியுள்ளனர். வழியெங்கும் கடைகள், கடைகள், கடைகள். நச நசவென எங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அருவியில் விழும் தண்ணீரை விட மக்கள் அதிக அளவு அங்கு கூடியிருந்தனர். இந்த அருவி முழுக்க நீர் வரும் பொழுது முன்னே அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிமெண்ட் வளைவு வரை வந்து விழும். அப்பொழுது குளிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அது போல் புது வெள்ளம் வரும் பொழுதும் குளிப்பது ஆபத்தானது. கற்களும் பாறைகளும் வந்து விழலாம். அருவியின் மேலே சென்று  பொங்குமாங்கடலை எட்டிப் பார்க்கும் பலர் அதில் விழுந்து மரிப்பதும் உண்டு. உரிய பணம் கொடுத்தால் அவர்களின் உடலை உள்ளே நீந்தி எடுத்து தரும் அனுபவமிக்க டைவர்கள் இருக்கிறார்கள்.

இந்த அருவி மிக அழகானது. பரந்து விரிந்து விழும் அருவி. ஆனால் இதன் சுற்று வட்டாரப் பாறைகளையெல்லாம் குத்தகைக்கு எடுத்து பல எரிச்சலடிக்கும் வண்ணங்களில் ராம்ராஜ்
காட்டன்ஸ்ஸ¤க்கும், பூம்புகார் பனியன்களுக்கும், மயில் மார்க் அரிசிக்கும் விளம்பரம் வரைந்து வைத்திருக்கின்றனர். ஒரு இயற்கை அதிசயத்தைப் பாழ்படுத்தி விளம்பரம் செய்யும் கொடுமையை எந்த நாட்டிலும் காண முடியாது. தமிழ் நாட்டு அரசுக்கும், அதை அனுமதித்த நகராட்சிக்கும், அந்த நிறுவனங்களுக்கும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கும் மக்களுக்கும் கொஞ்சம் கூட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் உணர்வு இருப்பதில்லை. அருவியில் சோப்பு, ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகைகள் பல இருந்தும் ஒவ்வொருவரும் ஒரு சோப்பையும், ஷாம்ப்பு ஷாஷேயையும் கையோடு கொண்டு வந்து தனக்குத் தேய்க்கிறேன் பேர்வழி என்று கூட்டத்தில் நசுங்கித்
தவிக்கும் பக்கத்து நபருக்குத் தேய்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

Advertisementsஇவர்களுக்கெல்லாம் தமிழ் படிக்கத் தெரியாதா என்ன?  விளைவு, அருவியில் இழுந்து விழும் நீர் முழுக்க அடர்த்தியாக வெள்ளை நிரத்தில் சோப்புக் கலவையும், ஷாம்ப்புக் கலவையுமாக வருகிறது.  அந்தச் சோப்புக் குழம்பில் கீழே ஒரு பெரிய கூட்டமே குளித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும் இருக்கின்றன. துணி துவைக்க நாட்டில் இவர்களுக்கு வேறு இடமே கிடைப்பதில்லையா என்ன? ஏதோ பெரிய மனது பண்ணி கோவில் மதில் சுவர்களையும், கோபுரத்தையும் மட்டும் பனியன் ஜட்டி கம்பெனிக்காரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.  விட்டால் குற்றால நாதரே எங்கள் பனியனைத்தான் போடுகிறார் என்று ஒரு விளம்பரம் வைத்திருப்பார்கள். கூட்டம் கூட்டமாக வந்து தின்று குற்றாலத்தை ஒரு பெரிய கழிவிடமாகவும், துணி துவைக்கும் துறையாகவும் மாற்றி விட்டிருக்கிறார்கள்.

அருவியிலிருந்து கீழே கோவிலுக்குச் செல்லும் இடமெல்லாம் கடைகள்.  பழக்கடைகளில் நமக்குப் பெயர் தெரியாத விநோதமான பழங்கள் நிறைய விற்கிறார்கள்.  இங்கு முன்பெல்லாம் பெரிய பெரிய அருவாள்கள் கத்திகள் விற்பார்கள். இப்பொழுது அருவாள் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. மலை, மலையாக பெரிய பெரிய முழங்கால் வரை வழியும் டிரவுசர்களையும், பெர்முடாக்களையும் விற்கிறார்கள். பட்டா பட்டி டிரவுசர் என்ற ஒரு அரை டிரையாரும் அதைக் கட்டி வைக்கும் நாடாவும் வழக்கொழிந்து போய் விட்டது. முன்பெல்லாம் குற்றாலம் என்றாலே எண்ணெய் தேய்த்த உடல்களும்,தொந்திகளின் கீழ் வழியும் பட்டா பட்டி போட்ட டிராயரும்தான் நினைவுக்கு வரும். இப்பொழுது அதை சினிமாவில் நடனம் ஆடும் உப நடனர்களும், வடிவேலுவும் மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டு டிரவுசர் தெரிய வேட்டியை மடித்துக் கொண்டு, அசிங்கமாக அபிநயத்துக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். பட்டா பட்டி போலவே காணமல் போன மற்றொரு சமாச்சாரம் "குற்றாலம் துண்டு". குற்றாலம் துண்டு என்பது சிவப்புக் கலரில் ஆன ஒரு மெல்லிய கைத்தறி நூல் துண்டு. இப்ப எல்லாம் டர்க்கி டவல்கள்தான். ஆண்டாள் பூசு மஞ்சள், சீயக்காய் போன்ற வாசனை தரும் குளியல் திரவியங்களும் காணமல் போய் குற்றாலமெங்கும் ஒரே ஷாம்புக்களின் சாம்ராஜ்யம்தான். ஷாம்புவை பிசிக்கி, கூட்டத்தில் தன் தலையென நினைத்து அடுத்த தலையில் தடவியபின் அப்படியே வீசி எறிகிறார்கள். லட்சக்கணக்கான வெற்று ஷாம்பு ஷாஷேக்கள் குற்றாலம் முழுக்க, அருவி, நதி, தெருக்கள் என்று அங்கினாதபடி எங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. ஒரு நாள் இந்த ஷாஷேக்கள் மலையையே மூடப் போகின்றன, அருவி முழுக்க ஷாஷேக்களாக கொட்டப் போகின்றன. அப்புறம் அதிகம் தென்படாத மற்றுமொரு முக்கியமான விஷயம் உழைப்பாளிகளின் ஒட்டிய வயிறு. அமெரிக்காவில்தான் உடல் பெருக்கம் ஒரு பெரிய பிரச்சினை என்று நினைத்தால், குற்றாலம் சென்ற பிறகுதான் தமிழ் நாடும் வேகமாக வளரும் உண்மை புலப் படுகிறது. நான் வளர்கிறேனே மம்மி!!!

பெண்கள் பத்திரமாக ஒன்றுக்கு இரண்டு நைட்டிகளைப் போட்டுக் கொண்டோ, அல்லது அப்படியே புடவைகளுடனோ குளித்து விடுகிறார்கள். அமெரிக்காவில் செயற்கை அருவிகளிலும், நீர் விளையாட்டு இடங்களிலும் வரும் பெண்களுக்கு நேரெதிர். அங்கு தங்கள் அழகைக் காண்பிக்கவே அரணாக் கயிறு சைசுக்குப் போனால் போகிறது என்று மேலொரு நூலும், கீழொரு நூலும் கட்டிக் கொண்டு வருவார்கள். இங்கோ ஆண்களின் கொள்ளிக் கண்களில் படாமல் தங்கள் அழகை அப்படிக் காக்கிறார்கள்,அப்படி ஒரு பத்திர உணர்வு. அப்படி உடல் பூராவும் மறைத்துக் கொள்ளா விட்டாலும் பொது இடங்களில் வரும் ரவுடிகளின் தொல்லை தாங்க இயலாதுதான். அடிக்கடி ஆண்கள் பகுதியில் இருந்து நைசாகக் கையை விட்டுப் பெண்களை பிடிப்பதும், அவர்கள் கூச்சல் போட, காவலுக்கு குளித்துக் கொண்டிருக்கும் காவலர்கள் பிடித்தவனை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவர்களை லத்தியால் சாத்துவதும் அடிக்கடி நடக்கும் ஒரு கூத்தாகும். சமீபத்தில் நடிகர்கள் ஆனந்தும் (எந்தப் படத்தில் நடித்தாரோ), பால சிங் என்பவரும் பெண்கள் பகுதியில்தான் குளிப்பேன் என்று குடித்து விட்டு ரகளை பண்ணியிருக்கிறார்கள். ஆண்கள் ஜட்டியணிந்து வந்தால் போலீசிடம் பூசை கிடைக்கிறது. பெண்களுக்குப் போட்டியாக ஆண்களும் உடலழகை மறைத்துக் கொண்டு வர வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். பெரிய பெரிய பலகைகளில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மும்மொழிகளில் எச்சரிக்கிறார்கள். பெண்களைக் கேலி செய்யாதே, ஜட்டி அணிந்து குளிக்காதே, குடித்து விட்டு வந்து குளிக்காதே என்று எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது போக போலீஸ்காரர்களும் துண்டு கட்டிக் கொண்டு கையில் லத்தியுடன் குளித்துக் கொண்டே கூட்டத்தைக் கட்டுப் படுத்துகிறார்கள்.

பேரருவியை அடுத்து சிற்றருவி என்று ஒரு இடம் இருக்கிறது. இதற்கு மட்டும் தலைக்கு 3 ரூபாய் வசூல் செய்கிறார்கள். ஒரு அறைக்குள் அருவி வந்து விழுகிறது. அதில் நூற்றூக் கணக்கான பேர் நின்று கொண்டு தள்ளூ முள்ளூ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காசு வாங்கிக் கொண்டு விடுபவர்கள் கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி ஆட்களை உள்ளே விடலாம், அவர்களுக்கோ காசு ஒன்றுதான் குறி,ரசீது எல்லாம் நஹி. இந்த இடத்தில் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் மற்றுமொரு கும்பகோணம் நடக்க பலத்த வாய்ப்பிருக்கிறது, பேரிழப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது.   சிற்றருவிக்குப் போகும் பாதையில், வானுயர்ந்த தேக்கு மரங்களின் அடியில் மூலிகைப் பண்ணை இருக்கிறது. அங்கு மூலிகைக் கண்காட்சி நடத்தி கண்டங்கத்திரி, கரிசிலாங்கண்ணீ என்று பல்வேறு மூலிகைச் செடிகளை வைத்து அதன் மருத்துவ குணங்களை விளக்கிக் கொண்டிருக்கின்றனர்.

(தொடரும்..)

Copyright © 2005 Tamiloviam.com - Authors