தமிழோவியம்
கட்டுரை : பூம், பூம் மாடு
- திருமலை கோளுந்து

Boom Boom Boo Maaduஎதற்கு எடுத்தாலும் தலையினை ஆட்டுபவர்களை பூம் பூம் மாடு போல் தலை ஆட்டுவதாக சொல்வதுண்டு. இவை விளையாட்டுக்காக சொல்லப்பட்டாலும் பூம் பூம் மாடு என்பது தமிழ் சமுகத்தின் பண்டைய காலம் முதல் இன்று வரை இருந்து வரும் கலாச்சார அடையாளமாகவே கருதப்படுகிறது. கிராமியக் கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பூம் பூம் மாட்டின் வரலாறு தான் என்ன?  அதன் பூர்வீகம் என்ன? தற்போதைய அதன் நிலை என்ன என்று பூம் பூம் மாட்டை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்த சடையாண்டியிடம் கேட்ட பொழுது....

மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் என்ற சிறு கிராமம் தான் பூம் பூம் மாட்டுக்காரர்களின் பூர்வீக இடமாகும். அங்கு இருக்கும் சுமார் 150 குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பூர்வீகத் தொழில் தான் பூம் பூம் மாட்டினை வைத்து வித்தை காட்டும் தொழில். மாடுகளை நன்கு அலங்கரித்து, அதன்  சைகைகளினால் மனிதர்களை ஈர்க்கும் தொழில் தான் பூம் பூம் மாட்டு வித்தை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பூம் பூம் மாட்டுக்காரர்கள் என்றால் கிராம மற்றும் நகர மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால் இப்பொழுது நகரத்து மக்கள் எங்களை மதிப்பதில்லை. கிராமப் புற மக்கள் தான் எங்களை ஆதரிக்கின்றனர். ஆரம்ப காலக்கட்டங்களில் அனைத்து கோவில் விழாக்களிலும் மற்றும் முக்கிய திருவிழாக்களில் பூம் பூம் மாட்டினை அலங்கரித்து கொண்டு சென்றவுடனே மக்கள் கூட்டமாக கூடி விடுவார்கள். பின் அவர்களிடம் காட்டும் வித்தையினை பார்த்து ரசித்து எங்களுக்கு காணிக்கையாக அதிக பணம் தருவார்கள். ஆனால் இப்பொழுது அந்த இடத்தை மின்சார ராட்டினம், மற்றும் திரைப்படங்கள் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. இப்பொழுது பூம் பும் மாட்டினை பார்த்தாலும் வித்தை காட்டும் படி யாருமே கேட்பதில்லை. பூம் பூம் மாட்டின் வித்தையை நீங்களே பாருங்கள் என்று சொல்லி மாட்டிடம் பேச ஆரம்பித்தார். அந்த மாட்டிடம் ஒருவரைக் காண்பித்து ஜயாவுக்கு முத்தம் கொடு என்றவுடன் பூம் பூம் மாடு தனது வாயினை நமது கன்னத்தில் வைக்கிறது. அதனிடம் காலையில் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் சாப்பிட்டதற்கு அடையாளமாக தலையினை ஆட்டுகிறது. அதே போல் மதிய சாப்பிட்டாச்சா என்றவுடன் மாடு இல்லை என்று தலையை ஆட்டுகிறது. உடனே பூம் பூம் மாட்டுக்காரார் மதிய புண்ணாக்கு வாங்க ஜயாவிடம் காசு வாங்கலாமா என்கிறார். உடனே மாடு தலையை ஆட்டுகிறது. உடனே மாட்டிடம் 10 ரூபாய் தாளை கொடுத்தவுடன் அதனை வாயில் கவ்வி வாங்கி கொடுக்கிறது. இப்படி மாட்டிடம் பல கேள்விகளை கேட்டு அதற்கு அற்புதமான பதிலையும் மாட்டிடம் இருந்து சடையாண்டி பெறுவதை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.

ஆனால் பூம் பூம் மாட்டின் செயல்பாடுகள் மாட்டுக்காரர் மாட்டின் முக்கணங்கயிற்றை மனிதர்களுக்குத் தெரியாமல் சுண்டுவதன் மூலமும், தனது கையில் வைத்திருக்கும் குடும்பியை அடித்து மாட்டிற்கு மறைமுக சிக்னல் கொடுக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இது பற்றி மேலும் சடையாண்டியிடம் கேட்ட பொழுது இந்த தொழிலை நறிக்குறவர்கள் போல் இருக்கும் நாங்கள் செய்வது தற்பொழுது குறைந்து வருகிறது என்கிறார். இளம் கன்றாக இருக்கும் பொழுதே காளங்கன்றுகளை தேர்வு செய்த எங்களின் குல தெய்வமான அழகு மலையானுக்கு வேண்டி அதனை கன்னும் கருத்துமாக வளாத்து வருவோம். பூம் பூம் மாட்டுக்கான அனைத்துப் பயிற்சிகளும் சிறு வயதில் இருந்தே கொடுத்துவருவோம். அதே போல் இதனை வேறு எந்த விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்துவதில்லை.  அதனால் மாடும் நன்கு உடல் பெருத்து நன்கு வளாந்த உடன் அதனை வைத்து ஊர் ஊராகச் சென்று வித்தை காட்டிப் பிழைப்பினை நடத்தி வருகிறோம். கிட்டதட்ட வீடு ஆறு மாசம், காடு ஆறு மாசம் என்ற நிலை தான் எங்களின் வாழ்க்கை. 8மாதம் முக்கிய ஊர்களில் நடக்கும் விழாக்களுக்குச் சென்று அங்கு வித்தை காட்டி வருவோம். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருச்செந்தூர் கோவில் போன்ற ஊர்களுக்குச் வித்தை காட்டி வருவோம். இதன் பின் திருவிழாக்கள் நடைபெறாத காலக்கட்டத்தில் எங்களின் ஊருக்குச் சென்று அங்கு இருக்கும் சிறிய நிலங்களில் விவசாயம் பார்த்து வருகிறோம். ஊர் ஊருக்குச் சென்று பணம் சம்பாதிப்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த பூம் பூம் வித்தையை ஒரு கிராமிய கலையாகத் தான் நாங்கள் எண்ணி வருகிறோம் என்கிறார். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் தமிழக கிராமியக்கலைகளில் எங்களை இன்னும் சேர்க்கவில்லை என்பது தான். எங்களையும் அழிந்து வரும் கிராமியக்கலைகளில் சேர்த்தால் அரசின் சில உதவிகள் கிடைக்கும் என்கிறார். இது தவிர முன்பு போல் பூம் பூம் மாட்டு வித்தை காட்டி அதிகமாக சம்பாதிக்க முடியவில்லை என்கிறார். சாதரணமாக ஒரு நாளைக்கு 50 ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது. இதில் மாட்டுக்கு அலங்காரப் பொருள் வாங்குவதற்கும், அதற்கு உணவுப் பொருட்களான வைக்கோல், புண்ணாக்கு, பரத்தி வதை வாங்கவதற்கே அத்தொகை சரியாக இருக்கிறது. இன்னும் சிறிது காலம் இந்நிலை நீடித்தால் பூம் பூம் மாடு என்பது மறைந்த விடும் நிலைக்கு போய் விட்டது என்று வருத்தப்படுகிறார். தற்பொழுது பூம் பூம் மாட்டை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருக்கும் அனைவரது குழந்தைகளும் வேறு வேலைக்குச் செல்வதால் இத்தொழிலுக்கு சமாதி தயாராகிக் கொண்டு இருக்கிறது என்கிறார்.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு இத்தொழில் பிச்சை எடுப்பது போல் தோன்றலாம். ஆனால் இது எங்களின் தொழில் அழகுமலையான் எங்களுக்கு விரும்பி கொடுத்த தொழில் ஒவ்வொரு ஊராகச் சென்று வித்தைகாட்டியும் ஊர் திருவிழாக்களில் வேஷம் கட்டி குறி சொல்வதும் மனதிற்கு மகிழ்ச்சியான ஒன்று. சில சமயங்களில் மாட்டினை பிச்சை எடுப்பதாகச் சொல்லி எங்களை துன்புறுத்துகின்றனர். கலை பண்பாடு பற்றி தெரியாததால் இது போன்ற சம்பங்கள் நடக்கிறது என நொந்து கொண்டார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors