தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : மனத்தளவே ஆகும் மகிழ்வு!
- எஸ்.கே

இராமகிருஷ்ணன் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. பிரண்டு பிரண்டு படுத்துப் பார்த்தான். டி.வி முன் உட்கார்ந்து ரிமோட்டை சித்திரவதை செய்து இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை அத்தனை சானலையும் zap செய்து முடித்தான். மூக்கைப் பொத்திக் கொண்டு சாலையில் கொஞ்சம் நடை பழகினான்.  ஒரு தம் அடித்தும் பார்த்தான். ம்ஹூம். தூக்கம் வருவதாக இல்லை. அவன் மனதை ஏதோ ஒன்று அரித்துத் தின்று கொண்டிருக்கும்போது தூக்கம் எப்படி வரும்?

அவன் மனைவிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. சாதாரணமாக ஒவ்வொரு இரவிலும் அவளுக்கு முன்னால் தூங்கும் ராம்கியின் குறட்டை தான் அவளுக்குத் தாலாட்டு. இன்று அவன் அல்லாடுவது தெரியும் என்றாலும், தானும் என்ன பிரச்னை என்று கேட்டு அவனை மேலும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கண்ணை மூடிக் கொண்டாள். ஏனெனில் அவன் அவ்வளவு மனம் விட்டுப் பேசுபவன் இல்லை.

அவனைப் பாதித்திருப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அவனுடைய மேலதிகாரி ஒரு சிடுமூஞ்சி. இன்றைய வேலையை நேற்றே முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அதனால் அவருடைய பிடுங்கல் சாதாரணமாக இராமகிருஷ்ணனைப் பாதிப்பதில்லை. ஆனால் இன்று என்ன நடந்தது? தனக்கு ஜூனியரான ரங்கசாமி முன்னால் தன்னை அவர் மட்டந்தட்டிப் பேசி விட்டார் என்பதைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. அவன் எப்படி இளக்காரமாக புன்சிரித்துக் கொண்டு நின்றான்; உடன் வேலை செய்பவர்களிடம் போய் என்னென்ன பேசி சிரித்துக் கொண்டிருப்பான். இப்படி மனத்துக்குள் பிரட்டி பிரட்டி சிந்தனை செய்து சுமையை அதிகரித்துக் கொண்டேயிருந்தால் எப்படித் தூங்குவது?

ஆனால் இவ்வாறு பெருமூச்சு விட்டுக்கொண்டு அதையே நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருப்பதால் ஏதாவது பயன் உண்டா என்பதை அந்த இராமகிருஷ்ணன் சிந்திக்கவில்லை. ஏன்? அந்த நிகழ்ச்சி அந்த அளவுக்கு அவன் மனதைப் பாதித்து விட்டது.

சரி, அவனுடைய இந்த நிலைக்குக் காரணம் உண்மையில் அந்த நிகழ்ச்சிதானா? அல்லது அதை நினத்து இவன் மனதில் ஏற்பட்ட எதிர்வினையா (reaction)?

தான் அவமானப் பட்டதாக நினைக்கும் அந்த என்ணம்தான் நம்மை அந்த அளவுக்கு பாதிக்கிறது. இதற்குக் காரணம் நம் மனத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் "ஈட்" (id) என்று சொல்லப்படும் நம் மன நிலைதான். இது நம் குழந்தைப் பருவத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை எப்படியாவது பெறுவதற்காக இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட மனத் திண்மை. ஆனால் அது மேலும் மேலும் நம்மை ஆட்கொண்டு நம்மை ஒரு சுயநலவாதியாக ஆக்கிக் கொண்டிருக்கும். இதை Sigmund Freud என்கிற மன இயல் விஞ்ஞானி தன் ஆராய்ச்சி மூலம் விளக்கியுள்ளார். ஆனால் இந்த ஈட் (லேசான "ஏட்" என்ற உச்சரிப்பும் இருக்கிறது) எனும் எதிரியை அடக்க நம் மனதில் "ஈகோ" (ego) என்கிற ஒரு கோட்பாடு உருவாகி "ஈட்"டின் செயல்பாட்டை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது. ஆனால் நம்முடைய தன்னலம் அல்லது தற்பெருமை சார்ந்த மன நிலையில் ஒரு தாழ்வு ஏற்படுத்தும் உணர்வு  வரும்போது மிக அதிகமான மன உளைச்சல் ஏற்படுகிறது.

இப்பொது மறுபடியும் இராமகிருஷ்ணனின் பிரச்னைக்கு வருவோம். அவனுடைய மன உளைச்சலுக்கு மூல காரணம் என்ன? இன்னொருவருடைய செயலா, அல்லது அந்தச் செயல் அவன் மனத்தில் ஏற்படுத்திய பின்விளைவா? அதே நிகழ்ச்சியை அவன் வேறு முறையில் அணுகியிருக்க முடியாதா?

மேலதிகாரி இவனை மட்டந்தட்டி ஒரிரு சொற்கள் பேசிவிட்டார் என்பதை விட இன்னொருவர், அதிலும் அலுவலகப் படிநிலை அமைப்பில் அவனினும் தாழ்ந்தவர் முன் அவன் பட்ட அவமானம் அவனால் தாங்க முடிய வில்லை. ஆனால், "அவன் முன் நடந்தால் என்ன, அவனும் பல முறை அதே மேலாளரிடம் வயிறு ரொம்ப வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறானே. இன்னும் கொஞ்ச நாளில் நிர்வாக மாற்றம் ஏற்படப் போகிறது. அதனாலோ, அல்லது என்னுடைய உழைப்பினாலோ, என்னுடைய சீனியாரிடி அடிப்படையிலோ, டிபார்ட்மென்ட் தேர்வில் தேறுவதாலோ எனக்கு பதவி உயற்வு ஏற்படப்போகிறது. இந்த சின்னச் சின்ன நிகழ்வெல்லாம் என் மனத்தை பாதிக்க இடம் கொடுக்கக் கூடாது" என்பது போல் ஏன் அவன் சிந்தித்திருக்கக் கூடாது?

இது போல் பல நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் அவ்வப்போது நடந்து நம் மனத்தின் அமைதியை பாதிக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் நம்முடைய reaction தானே ஒழிய அந்த நிகழ்ச்சிகளே அல்ல. ஆனால் அவற்றை நினைத்து மருகி, அதனால் ஏற்படும் மனத் தடுமாற்றத்தால் நம் உடலிலும் மன நிலையிலும் ஏற்படும் பாதிப்பும், அந்த நேரங்களில் நாம் செய்துவிட்ட தவறான செயல்கள், அல்லது நாம் செய்யாமல் தவற விட்டவை - இது போன்றவைகளால் எற்படும் இழப்புகள்தான் அதிகம்.

ஆகையால் பிறரின் செய்கையால் நம் மனம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட நாமே அனுமதிக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். நம் உணர்ச்சிகளின் உந்துதலும் வெளிப்பாடும் நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அதை அறிவு ரீதியான அணுகுமுறைக்குக் கொண்டுவர பக்குவப் படுத்தி விட்டோமானால் இது போன்ற மனக் கலக்கமோ குழப்பமோ எற்படாமல் தடுக்கலாம். மகிழ்வு, சோகம் என்கிற மன நிலைகள் நம் மனத்தில்பால் தானே எற்படுகின்றன? ஏன் அதை நாம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது?

ஒருவர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருக்கிறார். பக்க வாட்டில் உள்ள ஒரு சிறிய சாலையிலிருந்து திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் நெடுஞ்சாலைக்கு வந்து நுழைந்து, அதனால் அந்தக் காரோட்டி சடாரென்று பிரேக் போட்டு நிறுத்த நேர்ந்தது. மோட்டார் சைக்கிள்காரரும் சிறிது தூரத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டார். கார் ஓட்டி வந்தவருக்குக் கடும் கோபம். ஏனென்றால் முழுத்தவறும் மோட்டார் சைக்கிள்காரர் மேல் தான். வேகமாக அவரை நோக்கி  மூன்று மொழிகளில் தனக்குத் தெரிந்த அர்ச்சனைச் சொற்களைத் தொடுத்து வீசலாம் என்ற முடிவோடு "தொம், தொம்" என்று வருகிறார். லேசான இருட்டு நேரம். கிட்டே வந்த பின்தான் அடையாளம் தெரிகிறது. அவ்வளவு கோபமாக வந்தவர் சடாரென்று குழைகிறார். அவர் பேச்சில் சிறிதும் கோபம் இல்லை. "ஏதோ நடந்தது நடந்து விட்டது" என்பது போன்ற சமாளிப்பு வார்த்தைகள்தான் பேசுகிறார். இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போனால்தான் நிம்மதி என்பதைப் போல் "அப்பாடி" என்று அவசர அவசரமாக காரை ஓட்டிச் செல்கிறார். ஏனிந்த மாற்றம்? எங்கே போயிற்று அவருடைய அடக்க முடியாத கோபம்?

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் ஒரு போலீஸ் அதிகாரி. அவ்வளவுதான்!

இதிலிருந்து என்ன தெரிகிறது? வெளி உலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் உண்மையில் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த நிகழ்ச்சியை நாம் எவ்வாறு அணுகுகிறோம், எத்தகைய உணர்ச்சிகளை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொருத்துதான் நம்மிடம் பாதிப்பு ஏற்படுகிறது.

அலுவலகங்களில் "அவன் என்னை மதிக்க வில்லை", "இவன் என்னை 'விஷ்' பண்ண வில்லை", "என்னைப் பார்க்காதது போல் போய்விட்டான்" - இது போல் காலணா பெறாத காரணங்களால் மனச் சஞ்சலங்கள் கொள்வோர் பலர். குடும்பத்தில் கூட, மருமகள் மதிக்க வில்லை, கல்யாணத்தில் சம்பந்தியை முறையாக சாப்பிடக் கூப்பிடவில்லை, கல்யாணத்துக்கு நேரில் வந்து அழைக்கவில்லை, இது போல் ஏதேதோ காரணங்களால் பலர் மன மாச்சரியங்களால் பாதிக்கப் படுகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அந்த நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மரியாதை நிமித்தம் அழைக்கப் பட்டிருந்த போது, தன் ஓய்வுக்கு முந்தைய status-க்கு ஒப்ப வண்டி அனுப்பாமல் ஜீப் வண்டியை அனுப்பி விட்டார்கள் என்று கண்ணில் கண்டவரிடமெல்லாம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். அவரை இனிமேல் எதற்கும் அழைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அவமானம் என்று நாம் கற்பனை செய்து கொள்வது எல்லாமே உண்மையில் அவமானமேயில்லை. அது நம் கற்பனைதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை" என்ற வள்ளுவர் மேலும்,

            திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
            அறனல்ல செய்யாமை நன்று

(பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்புற்று வருந்தி, பதிலுக்கு அதே போல் செய்யாமைதான் சிறந்த பண்பாகும்) என்கிறார்.

நாம் செல்ல வேண்டிய பாதை எவ்வளவு நீளமானது? நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவு இருக்கின்றன? நமக்கும் நம் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் செய்ய வேண்டியவை எவ்வளவு இருக்கிறது? இது போல் மன இறுக்கத்தினால் பீடிக்கப் பட்டு வாழ்நாளை வீணடிக்கவா நாம் பிறந்திருக்கிறோம்?

Copyright © 2005 Tamiloviam.com - Authors