தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : பாண்டியனின் யானைகள்
- என். சொக்கன்

பாடல் 65

ஒருவரை வேலையில் சேர்க்கும்போதே, அவர்கள் செய்யவேண்டிய கடமைகள் என்னென்ன என்று தெளிவாகப் பட்டியல் தந்துவிடுவது நல்லது - அப்போதுதான் அவர்களுக்குத் தங்களின் வேலை எப்படிப்பட்டது, எத்தனை நேரம் எடுக்கக்கூடியது என்றெல்லாம் புரியும், அவர்கள் அதைச் சரியாகச் செய்கிறார்களா, இல்லையா என்று நாமும் சரிபார்க்கமுடியும்.

உதாரணமாக, அலுவலகத்தில் ஒரு புதிய நபரைச் சேர்க்கிறோம், அவரை அழைத்து, 'இந்தாப்பா, நம்ம மேனேஜர் சொல்ற லெட்டரெல்லாம் ஒழுங்கா டைப் பண்ணிக் கொடுக்கவேண்டியது உன்னோட வேலை, அப்புறம், அந்த லெட்டர்ல அவரோட கையெழுத்தை வாங்கணும், நம்ம கம்பெனியோட ஸீல் வைக்கணும், அதைக் கவர்ல போட்டு ஒட்டி, டெஸ்பாட்ச் டிபார்ட்மென்ட்ல கொடுத்துடணும்.', என்று சொல்கிறோம்.

இதுபோல, பாண்டியனின் யானைப் படையில் புதிதாய்ச் சேர்கிற யானைகளுக்கெல்லாம் வழிகாட்டியாக, இந்த முத்தொள்ளாயிரப் பாடல் அமைந்திருக்கிறது.

எதிரிகளுக்கு அச்சம் தரக்கூடிய பாண்டியன், மார்பில் மாலை அணிந்த பாண்டியன், அவனுடைய உயர்ந்த, அழகான யானைகளும், அவற்றின் தந்தங்களும் செய்யவேண்டிய வேலை / கடமை என்ன தெரியுமா ?

அதிகமில்லை, இரண்டே இரண்டு வேலைகள்தான் - தந்தத்துக்கு ஒரு வேலை.

முதல் தந்தம், எதிரிகளின் மார்பைக் குத்திக் கிழிக்கவேண்டும்.

இரண்டாவது தந்தம், வேற்று நாட்டு மதில் சுவர்களை / கதவுகளை மோதி உடைக்கவேண்டும்.

அவ்வளவுதான் - நாள்முழுதும் பாண்டியனின் யானைகள் இந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க, வீரம் மிகுந்த பாண்டியனின் படையினர், ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு கோட்டையாகக் கைப்பற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத்து
இருகோடும் செய்தொழில் எண்ணில், ஒருகோடுஆங்கு
வேற்றார் அகலம் உழுமே, மற்றுஏனையது
மாற்றார் மதில்திறக்கு மால்.

(உரு - பயம்,
தார் - மாலை
வேழம் - யானை
கோடு - தந்தம் / கொம்பு
எண்ணில் - எண்ணிப்பார்த்தால்
ஆங்கு - அங்கே
அகலம் - மார்பு
உழும் - குத்திக் கிழிக்கும்)பாடல் 66

பாண்டியனின் படையிலுள்ள யானைகளின் அழகும், கம்பீரமும் இந்தப் பாடலில் படிப்படியாய் விவரிக்கப்படுகிறது.

முதலாவதாக, பாண்டியனின் யானைகள், மாபெரும் மலையைப்போன்ற உயர்ந்த தோற்றம் உடையவை - மிகப் பெரியவை.

அடுத்து, அவை எழுப்பும் ஓசை, கடல் அலைகளின் முழக்கத்தைப்போல - எல்லா திசைகளிலும் சத்தமாய் ஒலித்து, பயம் உண்டாக்கக்கூடிய பிளிறல்.

மழை நீரைப்போல, அவற்றின் கன்னங்களில் மத நீர் வழிந்து ஓடுகிறது.

பாய்ந்து பரவுகின்ற காற்றை யாராலும் தடுக்கமுடியாது - அதுபோல, பாண்டியனின் படை யானைகள் கம்பீரமாய் நடந்து செல்லும்போது, யாரும் அவற்றின் எதிரே நிற்கமுடியாது.

மொத்தத்தில், பாண்டியனின் யானைகளைப் பார்த்ததுமே, எதிரிப் படையினர் உயிர் பயம் கொண்டு நடுங்கிப்போய் நிற்பார்கள் - மரண தேவனாகிய எமனையே நேரில் பார்த்தால்கூட அவர்கள் இந்த அளவு பயப்படுவார்களா என்று சொல்வதற்கில்லை.

ஆகவே, இந்த யானைகளுக்குமுன்னால், தனது மவுசு குறைகிறது என்று புரிந்துகொண்ட அந்த எமதர்மராஜன், 'எல்லோரும் என்னைப் பார்த்து பயப்பட்டால்தான் என் தொழிலுக்கு நல்லது, ஆகவே, தயவுசெய்து கொஞ்சம் கம்பீரத்தைக் கடன் கொடுங்கள். ', என்று பாண்டியனின் யானைகளிடம் கெஞ்சுவான் !

எங்கள் தலைவன், ஒளி வீசும் வேலை ஏந்திய பாண்டியனின் யானைகளுடைய தகுதியும், சிறப்பும் இப்போது நன்றாய்ப் புரிந்திருக்கும்.


தோற்றம் மலைகடல், ஓசை புயல்கடாம்
காற்றின் நிமிர்ந்த செலவுஇற்றாய்க் கூற்றும்
குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எம்கோன்
எறிகதிர்வேல் மாறன் களிறு.

(புயல் - மேகம்
கடாம் - யானையின் மத நீர்
செலவு - செல்லுதல்
கூற்று - எமன்
குறியெதிர்ப்பை - கடன் வாங்குதல்
தகைமை - தகுதி
கோன் - அரசன்
களிறு - ஆண் யானை)

Copyright © 2005 Tamiloviam.com - Authors