தமிழோவியம்
நையாண்டி : எலெக்ஷன் குவாலிபிகேஷன் - 2
- மீனா

சென்ற வார எலெக்ஷன் குவாலிபிகேஷன்களைத் தொடர்வோமா?

A.D.M.K

அ.தி.மு.க சார்பாக போட்டியிடத் தேவையான அடிப்படைத் தகுதிகளின் பட்டியல்

- அம்மாவிடம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ளத் தெரியவேண்டும். அம்மாவைப் பார்க்கும் எந்த இடத்திலும் சடாரென்று காலில் விழுவது கூடுதல் குவாலிபிகேஷன்.

- மந்திரிப் பதவி என்பது இன்று வரும், நாளை போகும் என்ற எண்ணம் வேண்டும். பதவி போனதற்காக வருத்தப்படும் நபர்களது விண்ணப்பம் நிச்சயம் ஏற்கப்படமாட்டாது.

- அம்மாவிற்கு புதுப்புது விருது கொடுக்க நல்ல அமைப்புகளை உருவாக்கவோ கண்டுபிடிக்கவோ தெரிந்திருக்க வேண்டும்.

- சின்னம்மாவின் அதிகார வரம்பு அடிக்கடி மாறும் என்பதால் கைவசம் சிபாரிசு செய்ய நிறைய மேல்மட்ட ஆட்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- முக்கியமாக அம்மாவிற்குப் பிடித்தது தொண்டர்களுக்கும் பிடிக்க வேண்டும். பச்சை, நீலம் என்று கலர்கலராக மாற தயக்கம் காட்டக்கூடாது.

- எம்.ஜி.யார் அல்லது எதிர்கட்சி ஆட்கள் அடிக்கல் நாட்டி வைத்துவிட்டு போன விஷயங்களைக் கூட, அம்மா தான் ஆரம்பித்தார் என்று பேப்பரில் முழுப்பக்கதிற்கு விளம்பரம் கொடுக்க வேண்டும்.

Cong I

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடத் தேவையான தகுதிகள்

- நேரு குடும்ப வாரிசால் தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்று பொதுக்கூட்டங்களில் தயக்கமின்றி முழங்க வேண்டும்.

- தேசிய கட்சி என்பதால் இந்தியாவின் எந்த மூலையிலும் தேர்தலில் நிற்கத் தயாராக இருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் எனக்கு சீட் வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்கக் கூடாது.

- கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் ரொம்பவும் ஜாஸ்தி என்பதால் தாங்கள் எந்த கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதை ஒவ்வொருவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.

- மாநிலத்தைச் சேர்ந்த எந்த கட்சியுடனும் கூட்டு வைக்க ரெடியாக இருக்க வேண்டும். நேற்று இவரைத் திட்டினோமே.. இன்று வாழ்த்தி கோஷம் போடுவதா? என்றெல்லாம் சிந்திக்கவே கூடாது.

- சிலபல நேரங்களில் மற்ற கட்சிகளுடன் மத்தியில் உறவு, மாநிலத்தில் பிரிவு என்ற நிலை இருக்கலாம். அதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் மனநிலை அவசியம்.

- சண்டையை மத்தியஸ்தம் செய்து வைக்க வரும் மேலிடப் பார்வையாளர்கள் முன்பாகத் திறமையாக சண்டை போடவேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors