தமிழோவியம்
கட்டுரை : சென்ற வார உலகம்
- பாஸ்டன் பாலாஜி

சுருக்கமாக சென்ற வார தலைப்புச் செய்திகள்

* ஐ.நா.சபையை துடிப்புள்ள அமைப்பாக, உலகத்தோடு இயைந்து நடக்க மாற்றங்களை பரிந்துரைக்கும் அறிக்கை வெளியாகியது. உலகத்தினரின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் மேம்படுத்த பல ஆலோசனைகள் கொண்டிருக்கிறது. எதுவுமே எளிதில் நிறைவேற்ற முடியாது. பாதுகாப்புக் குழுவை விரிவுபடுத்துவதில் முதல் குழப்பம். இந்தியா இடம் கேட்கிறது. பாகிஸ்தானும் மல்லுக்கு நிற்கும். ஜெர்மனி, ஜப்பான், ப்ரேசில், தெற்கு ஆப்பிரிக்கா என்று பட்டியல் நீளுகிறது. யாரை சேர்க்கக் கூடாது என்பதில் வேண்டுமானால் ஒற்றுமை நிலவலாம். எவரை சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு பெரும்பான்மை கிட்டுவது கடினம்.

* அராபத்தின் மறைவுக்குப் பிறகு, அவரின் '·பதா' (Fatah) இயக்கத்தில் இருந்தே மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas) ஒருமித்த வேட்பாளராக சொல்லப்பட்டார். சிறையில் இருக்கும் மர்வான் பர்கௌதி (Marwan Barghouti) களத்தில் திடீரென்று குதித்திருக்கிறார். இஸ்ரேலின் சிறையில் இருந்தாலும், மக்களின் ஆதரவையும் இளைய தலைமுறையின் எழுச்சியையும் வழிநடத்த சரியான ஆள். ஆனால் இஸ்ரேலோ, பாலஸ்தீன எழுச்சியில் பல இஸ்ரேலியர்களைக் கொன்றதற்காக ஐந்து ஆயுள் தண்டனைகளைக் கையில் வைத்திருக்கும் மர்வானை விடுவிப்பதாக எண்ணமே இல்லை என்றிருக்கிறது.

* ஏரியல் ஷரோனின் அரியணை மீண்டும் ஆட்டம் கண்டிருக்கிறது. பட்ஜெட் வாக்கெடுப்பில் தோற்றிருப்பதால், கூட்டணி உடைந்து உருமாறலாம். காஸா (Gaza)வை விட்டு வெளியேறுவதும் பாதிக்கப்படலாம்.

* அணுசக்தி குழுவுக்கும் ஈரானுக்குமான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம். அணு ஆயுதத்திற்கான யுரேனிய மேம்படுத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஈரான் ஒப்புகொண்டது.

* உலக சந்தையில் அமெரிக்க டாலர் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும், யூரோவிற்கு எதிராக 35 சதவீத வீழ்ச்சி. யென் போன்ற மற்ற முக்கிய நாணயங்களோடு 17% சரிவு. போன இரண்டு மாதங்களிலே மட்டும் ஏழு சதவீத கிடுகிடு பள்ளத்தாக்குப் பயணம். பணத்தின் மதிப்புக் குறைவதைக் கண்டு சீனா, ரஷியா, வளைகுடா போன்ற பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற எத்தனித்தால், விளைவுகள் படு மோசமாகும். சூடான வீட்டு விற்பனை மந்தமாகலாம்; பணவீக்கம் என்று 1913-இல் லண்டனின் பவுண்ட் மதிப்பிழந்தது அமெரிக்காவின் டாலருக்கு நடக்கும்.

*  காங்கோவுக்கும் ரவாண்டாவுக்கும் (Rwanda) மீண்டும் போர் மூளும் நிலை. 1998-இல் மூண்ட சண்டை ஐந்தாண்டுகள் தொடர்ந்தது. பதினெட்டு மாத அமைதிக்குப் பிறகு மீண்டும் மல்லுக் கட்டுகிறது ரவாண்டா. ரவாண்டாவின் போராளிகளை கண்டுபிடிக்கவே காங்கோவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று குழப்ப அறிக்கை வெளியிடுகிறார்கள். ஐ.நா. அமைதிப் படை கையாலாகத்தனத்துடன் மௌனம் காக்கிறது.

* கடந்த காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதாரம் 3.9% வளர்ந்திருக்கிறது. நுகர்வோரின் செலவழித்தலும், நிறுவன முதலீடும் வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது.

* சீனாவின் ஏற்றுமதிகள் இனி குறைந்த விலையில் சிங்கப்பூரையும் மலேசியாவையும் சென்றடையும். ஆசியான் (ASEAN) மாநாட்டில் 2010 முதல் சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. ஜப்பனுடனும் பேச்சுவார்த்தைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். மின்னணுச் சாதனங்களுக்கான வரிகளும் 2007-இல் இருந்து ரத்தானது.

* தென்னாப்பிரிக்க ஜனாதிபதி தாபோ ம்பெகி (Thabo Mbeki) ஏழை கறுப்பர்களின் நிலையை உயர்த்தவில்லை என்னும் குற்றச்சாட்டு நடந்து முடிந்த தேர்தலின் போதே கிளம்பியது. அவர் பணக்கார சக்திகளின் கைப்பாவையாகி விட்டார் என்று 1984-இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டெஸ்மண்ட் டுடு (Desmond Tutu)வும் வருந்தியிருக்கிறார். பதிலுக்கு தாபோ ம்பெகி, டுடுவை 'மடையப் புளுகன் ' என்று திட்டியிருக்கிறார்.

* அமெரிக்க கார் தயாரிப்பாளர்கள் ஜெனரல் மோட்டர்ஸ¤ம் (GM) ·போர்டும் மீண்டும் மார்க்கெட் இழக்கிறார்கள். ஜி.எம் பதினேழு சதவீத சந்தையை விட்டிருக்கிறது. இவர்கள் காலி செய்த இடத்தை நிஸ்ஸான், டயோட்டா, டெய்ம்லர்-க்ரைஸ்லர் (DaimlerChrysler) ரொப்புகிறார்கள்.

* உக்ரெய்னை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் விடுவதாக இல்லை. ரஷியாவும் இம்மியளவு விட்டபாடில்லை. இரண்டு விக்டர்களுக்குமிடையேயான தேர்தல் முடிந்து முடிவு வெளியானாலும் தெருவில் கட்டிப் புரண்டு சண்டை போடாத குறைதான் பாக்கி. யூஸ்சென்கோவுக்கும்(Victor Yushchenko)  யானூகோவிச்சுக்கும்(Victor Yanukovich) மறுபடி தேர்தல் நடக்க வாய்ப்புகள் அதிகம். உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

* ரோமானியத் தேர்தலிலும் அடிதடி. ஆளும் சோஷலிஸ கட்சி முண்ணனியில் இருந்தாலும், கிறிஸ்துமசுக்கு முன் மீண்டும் மோதிப் பார்க்கும்.

* போர்ச்சுகலில் திடீர் தேர்தல். ஜனாதிபதி ழாஜ் சம்பாயோ(Jorge Sampaio) பெட்ரோ சண்டானா லோப்ஸின் (Pedro Santana Lopes) அரசில் நம்பிக்கை இழந்துவிட்டார். ஐரோப்பிய கமிஷனின் தலைவராக லோப்ஸின் கட்சி தலைவர் ப்ரோமஷன் வாங்கிச் சென்றதால் பிரச்சினை வெடித்திருக்கிறது.

* தமிழக முதல்வர் போல் ஊழல் செய்தததற்காக பத்தாண்டுகள் தேர்தலில் நிற்க முடியாமல் தவித்தார் ·ப்ரான்சின் முன்னாள் பிரதம மந்திரி, ஆலன் ஊப்பே (Alain Juppe). மேல் முறையீட்டில் ஓராண்டாக குறைந்திருக்கிறது.

* ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியான பின் முதன் முறையாக கனடா சென்று வந்தார். நட்பு பாலம் பலப்பட்டாலும், வர்த்தகம் முதல் ஈராக் வரை நிறைய வேறுபாடுகள் அப்படியேத்தான் இருக்கிறது. நல்லெண்ண நடவடிக்கை.

* மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று விதவிதமாக வண்ணம் காட்டி பூச்சாண்டி காட்டிய டாம் ரிட்ஜ் (Tom Ridge) பதவி விலகினார்.

* காலை உணவு கலக்கலாக விற்கும் கெல்லாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் (Carlos Gutierrez) வர்த்தக அமைச்சராக புஷ்ஷினால் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். சாதாரணத் தொழிலாளியாக மெக்ஸிகோவில் பயணத்தை ஆரம்பித்து, கனடாவில் கொஞ்ச காலம் தள்ளி, அமெரிக்காவின் மிகப் பெரிய கம்பெனியின் தலைமைக்கு உழைப்பால் உயர்ந்தவர்.

* ஈராக்கில் தேர்தலை முன்னிட்டு, அமெரிக்கப்படை ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாக உயர்கிறது.

* பர்மாவின் சூ க்யி(Aung San Suu Kyi) மீண்டும் ஒரு வருடம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

* சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து. நூற்றி அறுபத்தியாறு தொழிலாளிகள் மரணமடைந்தனர்.

* பங்களாதேஷ் நீச்சல் போட்டியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நான்கு வீராங்கனைகள் கலந்து கொள்ளவிருந்த பெண்களுக்கான நீச்சல் போட்டி, இஸ்லாமிய குழுக்களின் வலியுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டது. ஆண்களுக்கான நீச்சல் ஓட்டம் திட்டமிட்டபடி தொடர்ந்தது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors