தமிழோவியம்
தராசு : பில்கேட்ஸ் வருகை
- மீனா


கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை விஜயம் செய்த பில்கேட்ஸ் கருணாநிதி மற்றும் முதல்வர் ஜெவை சந்தித்திருக்கிறார். மாநில முதல்வர் என்ற வகையில் அவர் ஜெவைச் சந்தித்தது நியாயம். ஆனால் மத்தியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் விடாப்பிடியாக பில்கேட்ஸ் - கருணாநிதி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் கருணாநிதி - பில்கேட்ஸ் சந்திப்பில் கடந்த ஆட்சியில் சாப்ட்வேர் துறை முன்னேற தான் செய்த சாகசங்களை மட்டும் தான் கருணாநிதி பேசியிருக்கிறார். விட்டால் மத்திய - மாநில அரசு சார்பாக பில்கேட்ஸ¤டன் நீங்களே தொழில் வர்த்தக மேம்பாடு குறித்து பேசுங்கள் என்று தி.மு.க தலைவரை அவரது கட்சி மந்திரிகள் சொல்லுவார்களோ என்னவோ?

தமிழகத்திற்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு மத்திய மந்திரியும் தான் ஏதோ கடனே என்று கோபாலபுரம் வந்து கருணாநிதிக்கு ஒரு சல்யூட் அடித்துச் செல்கிறார்கள் என்றால் தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு அயல்நாட்டு முக்கிய பிரஜையையும் கட்டி இழுத்து வராத குறையாக கோபாலபுரத்திற்கு அழைத்துவருகிறார்கள் தி.மு.க அமைச்சர்கள். அந்த அளவிற்கு தலைவர் பாசம். கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் என்ற ஒரே காரணாத்திற்காக கருணாநிதியும் அவரது அடிபொடிகளும் செய்யும் இந்த அலும்பல்கள் கிட்டத்தட்ட பீகாரில் லாலு அடித்துவந்த கொட்டங்களை நினைவு கூறுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஜெ.முதல்வர். மாநில அளவில் அரசு எடுக்கும் முக்கால்வாசி முடிவுகளை அவர்தான் செய்கிறார். உள்நாட்டு மந்திரிகள் அவரைச் சந்திக்கிறார்களோ இல்லையோ, வெளிநாட்டு பிரமுகர்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவது, மேம்பாடு செய்வது, அதிக அளவில் முதலீடு செய்வது போன்ற பல விஷயமாக அவரைச் சந்திப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் அப்படி வருபவர்கள் எல்லோரும் கட்டாயம் எதிர்கட்சித் தலைவரையும் பார்த்தே ஆகவேண்டும் என்ற ரீதியில் மத்திய அமைச்சர்களே செயல்படுவதும், அதை ஊக்குவிக்கும் விதமாக கருணாநிதி நடந்துகொள்வதும் "பார்த்தாயா! மத்தியில் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்ற ஆணவத்தில் இவர்கள் போடும் ஆட்டத்தை.." என்று மக்களின் மனதில் வெறுப்பை வளர்க்குமே தவிர மரியாதை எதையும் ஏற்படுத்தாது.

ஒரு விஷயத்தை தி.முக உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். மக்களின் மனதில் ஆட்சியாளர்களைப் பற்றித் தோன்றும் விருப்பு வெறுப்பு நிச்சயம் நிரந்தரமானது அல்ல. பீகாரில் கடந்த 15 வருடங்களாக நடந்து வந்த காட்டு தர்பார் ஆட்சிக்கே மக்கள் ஒரு முடிவு கட்டியிருக்கும் வேளையில் தமிழகம் சார்பாக மத்தியில் தங்கள் வசம் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்து அவர்கள் மனதில் இடத்தைப் பிடிக்க தி.மு.க தலைவர் முயற்சி செய்யவேண்டுமே தவிர, " மாநிலத்தில் நான் எதிர்கட்சி ஆள் என்றாலும் மத்தியில் எனது செல்வாக்கைப் பார்!! " என்று வருவோர் போவோரிடம் தம்பட்டம் அடிக்கும் செயல்களில் ஈடுபடுவது அவருக்கு அழகல்ல. யோசிப்பாரா ??

Copyright © 2005 Tamiloviam.com - Authors