தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஒப்பிடாமை
- எஸ்.கே

நான் கொச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னை ஒரு நண்பர் விருந்துக்கு அழைத்திருந்தார். எர்ணாகுளத்தில் கொஞ்சம் மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவர் வீடு இருந்தது. இரவு உணவு முடிந்ததும் என்னை வழியனுப்ப அந்த நண்பரும் அவர் மனைவியும் வீட்டிற்கு வெளியே வந்தார்கள். அப்போது அவர்களின் எதிர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பற்றி என்னவோ தம்பதிகள் இருவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டார்கள். அது எதிர் வீட்டுக் காரருக்கு கேட்கும் அளவுக்கு இருந்ததோ என்று எனக்குத் தோன்றியது. இந்த சம்பாஷணை கொஞ்சம் நீடித்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படி என்ன விஷயம் என்று கேட்டேன்.

"அந்த எதிர் வீட்டுக் காரர் ரொம்ப ராங்கிப் பேர்வழி. நாங்கள் இங்கு வந்த புதிதில் எங்களிடம் கார் இல்லை. அவர் வீட்டில் கார் வைத்திருந்தார் என்கிற திமிரில் எங்களிடம் பேசுவதுகூட இல்லை. எங்களை வெறுப்பேத்துவதற்காகவே தன் காரை எங்கள் வீட்டு வாசலுக்கு அருகில் இங்கேயும் அங்கேயுமாக விட்டுக் கொண்டிருப்பார். இப்போது நாங்களும் காரில்தான் செல்கிறோம். அதை அவரால் தாங்க முடியவில்லை. எங்களைக் கண்டால் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போகிறார்" என்று மிகவும் animated-ஆக விளக்கினார் என் நண்பர்.

அதற்குள் அவர் மனைவி குறுக்கிட்டு, "இதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே. அவரைவிட நாம் மிகவும் மேலே இருக்கிறோம். அவர் காரை அவரே ஓட்டுகிறார். ஆனால் நாம் டிரைவர் வைத்துக் கொண்டிருக்கிறோம்!" என்றார்!

இப்படி நம்மில் பலர் அண்டை, அசல், சுற்றம், சூழல், உடன் பிறந்தோர் எல்லோரிடமும் நம்மை ஒப்பு நோக்கிக் கொண்டே இருப்பர். நம் வாழ்வில் மகிழ்ச்சியை அறவே விரட்டி அடிப்பதற்கு இதைத் தவிர வேறு வினையே வேண்டாம்.

சாதாரணமாக ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்பவர்கள், தாயாதி, பங்காளி என்று சொல்லப்படும் பூர்விக சொத்தில் பங்கு கேட்கும் அளவுக்கு ரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள், ஓரகத்தி எனப்படும் அண்ணன், தம்பிகளின் மனைவிகள், சக்களத்திகள் (இதற்குப் போய் விளக்கம் தேவையா?) இவர்களிடையே இந்த ஒப்பிடும் மனப்போக்கு பெரும்பாலும் மிகையாகக் காணப்படுகிறது. இது தவிர உடன் பிறந்தோரிடம் கூட இந்தக் காய்ச்சல் அதிகமிருக்கிறது. அதுவும் இக்காலத்தில் வாங்குவதற்கு பொருட்கள் பெருகி விட்டதால் தேவையோ இல்லையோ, ஸ்டேடஸுக்காவது எதையாவது வாங்கிச் சேர்க்கும் நுகர்பொருள் மோகம் (consumerism) ஏற்றம் கொண்டு இன்னொருவரிடம் உள்ள பொருட்கள் நம்மிடம் இல்லையே என்ற தாபம் அதிகமாகி விட்டது. அவர்கள் மனத்தினுள் 24/7 ஒரு Universal Comparator கட-கடவென்று வேலை செய்து கொண்டே இருக்கும்!

மஹாபாரதத்தில் குந்திக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்து விட்டதால், தனக்கு இன்னும் பிறக்க வில்லையே என்று அப்போது கர்ப்பிணியாயிருந்த அவளுடைய ஓரகத்தி காந்தாரி உலக்கையால் தன் வயிற்றின் மேல் இடித்துக் கொண்டதாகவும் அதனால் அவள் வயிற்றிலிருந்த foetus துண்டு துண்டாகி நூறு குழந்தைகளாகப் பிறந்ததாக நாம் அனைவரும் கதை கேட்டிருக்கிறோம். ஆனால் இக்கால காந்தாரிகளோ அந்த உலக்கையை தம் கணவன்மார் மேல் போடுகிறார்கள்!  இன்னொருவரைவிட ஒரு குந்துமணி அளவாவது மேலே எம்பிக் காண்பிக்க வேண்டும் என்கிற one-upmanship எல்லோரையும் எந்தப் பாடு படுத்துகிறது! அடுத்த வீட்டில் 24 அங்குல டி.வி இருந்தால் நம் வீட்டில் 29 அங்குல டி.வி வாங்குகிற வறையில் தூக்கம் கூடப் பிடிக்காத வெறியாக அந்த ஒப்பிடும் நோய் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆடம்பரப் பொருட்களின் ஆளுமைதான் இதன் வித்து. 

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்த அபார்ட்மெண்டுகளில் வசித்த இரு குடும்பங்களில் ஒருவருடைய பையன் பிலானியிலுள்ள BITS-ல் சேர்ந்தான். அவ்வளவுதான், அண்டை வீட்டுக்காருக்கு பிடுங்கல் ஆரம்பித்தது. நம் பிள்ளையை ஏதாவது பொறியியல் கல்லுரியில், அதுவும் வட இந்தியாவில் - சேர்த்தே ஆக வேண்டும் என்ற வெறி பிடித்து ஆட்டியது. அவர்களுடைய பையனும் நன்கு படிப்பவன் தான். அவனை பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திலுள்ள பொறியியல் கழகத்தில் சேர்த்தார்கள் (BHU-IT). இந்த ஒப்பு நோக்கு பேயாட்டத்தில் தன்னை மறந்து ஈடுபட்ட நேரத்தில் ஒரு மிக முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டார்கள். என்ன நடந்தது? கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாதத்திலேயே பையன் ஓடி வந்து விட்டான். திரும்பி அங்கே போகவே மாட்டென்று கலங்கி நின்று, பெற்றோரின் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு ஒரு மன நோயாளி ஆகி விட்டான். அந்தப் பெற்றோர் செய்த தவறு என்ன? அவர்கள் அந்தக் கல்லூரியைப் பற்றியும் முழுமையாக விசாரிக்கவில்லை. தம் பிள்ளையின் மனப் பாங்கைப் பற்றியும் முழுமையாக அறிந்தாரில்லை. அங்கு சேர்ந்தவுடன் அநுபவித்த ராகிங்கைத் தாங்க முடியாமல் சுபாவத்தில் நோஞ்சானான அவன் ஓடி வந்து விட்டான்.

துணிக் கடையில் புடவை செலெக்ட் பண்ணும் தாய்க்குலங்களை நோக்குங்கள். அவர்கள் தன் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் புடவையை விட அடுத்தவர் கையிலிருக்கும் புடவை மேல் தான் கண் இருக்கும். பல தடவை இந்தப் பெண்கள் தம் கணவரிடம், "நான் இதை எடுத்தவுடன் எவ்வளவு பேர் இதே மாதிரி வேண்டும் என்று கேட்டார்கள் தெரியுமா" என்று பீற்றிக் கொள்வார்கள்.

இரண்டு பெண்களுக்கு கிட்டத் தட்ட ஒரே நேரத்தில் குழந்தை பிறந்தால் போதும். "4 மாதம் ஆயிடுச்சே, இன்னும் குப்புறத்திக்கல்லையா? எங்க சுந்து நீஞ்சவே ஆரம்பிச்சூட்டானே" - இப்படி கம்பேர் பண்ணி வயிற்றெரிச்சலை உண்டாக்கி மன நிறைவு கொள்வர் சிலர்! எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் மச்சினியின் குழந்தை ஒரு வயதில் நடக்க ஆரம்பித்து விட்டான், தன் பிள்ளை இன்னும் நிற்கவேயில்லையே என்று வடிச்ச கஞ்சியை குழந்தை காலில் அப்பி நீவி விட ஆரம்பித்து விட்டாள் - அப்போதுதான் காலில் பலம் ஏறுமாம்! சில குழந்தைகள் கொஞ்சம் சாவகாசமாக இதெல்லாம் செய்ய ஆரம்பிக்கும். அதற்குள் ஏனிந்த உலக்கையிசம்!

இரு சகோதரிகள். ஒருவளுக்கு இரண்டும் பையன்கள். இரண்டாமவளுக்கு முதலில் பெண் குழந்தை. சரி ரெண்டாவது ஆண்தான் என்று "சூரிய பிரபை, சந்திர பிரபை" எல்லா கணக்கையும் பார்த்து "உண்டானதில்" கூட, கடைசியில் குரோமோசோம்களின் சதியால் "மீண்டும் கோகிலா" தான்! அந்த அம்மையார் ஆண் குழந்தை பெற்றவளைவிட ஏதோவொரு விதத்தில் ஏற்றமுடையவளாக தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றாடம் ஏதாவது புதிதாக வாங்கி "பிள்ளையைப் பெற்ற மகராசி"யைக் கூப்பிட்டுக் காட்டி அவள் முகம் போகிற போக்கைக் கண்டு அல்ப சந்தோஷத்தை அநுபவிப்பாள்!

குழந்தைகள் விஷயத்தில் இன்னும் பல ஒப்புமைகள் உண்டு. மார்க்கு வாங்குவதிலிருந்து பிரைஸ் வாங்குவது வரை அந்தத் தாய்மார்கள் தம் பிள்ளைகளின் பெருமைகளைத் தம்பட்டம் அடிப்பதற்கு இன்னொரு பெண்ணைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களும் சளைக்காமல், "ஏன், எங்க சுப்பிரமணி கூட முதல் மார்க்குதான். அவங்க பிரின்சிபால்கூட டி.சி குடுக்கவே மாட்டேனுட்டாங்க. நம்ப பையனுக்குத் தான் வேற ஸ்கூல்ல சேரணும்னு ஆசை" என்பாள் (உண்மை வேறு திசையில் செல்லும் என்பது வேறு விஷயம்!). இப்படி மாறி மாறி மாற்றுலக்கை போட்டுக் கொண்டிருப்பார்கள். அவரவர் பேச்சை அவரவர் ரசித்துக் கொண்டிருப்பார்கள். இதனால்தான் ஒரு அறிஞர்,

"When two men talk, it is a dialogue;
 but when two women talk, it is a set of two monologues"

என்றார்.

ஒரு நிறுவனத்தின் காலனியில் வசிப்பவர்களிடம் இந்த ஒப்பிடும் மனப்பான்மை மிகுதியாக இருக்கும். அதுவும் "மேம் சாப்" களிடம் இது சற்று மிகுதியாக இருக்கும்!
"உங்களோடயே ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தவர்களெல்லம் எப்படி அநுபவிக்கிறார்கள். என்ன பண்ணறது, நமக்கு பொசிப்பு அவ்வளவதுதான்"! இப்படி!

(சரி. போதும் போதும். அப்புறம் "Male chauvinist pig" என்று பட்டம் கட்டி விடுவார்கள், பெண்ணியல் பேணும் பெருந்தகையர். அதிலும் மறு மொழி, எதிர்வினைக்கென்றே இங்கே ஒரு தொட்டி வேறு கட்டி வைத்துள்ளனர்!!)

அலுவலகத்தில் உடனிருக்கும் colleague என்ன மாதிரி டிரெஸ் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறான், அதெப்படி அவனுக்கு முடிகிறது; நாமும் அதைப்போல் இருந்தாலென்ன என்று மறுகி, தகாத  வழிகளில் வருமானத்தை பெருக்க முனைந்து மாட்டிக் கொள்வார்கள் பலர்.

நாம் தனியாகத் தான் பிறந்தோம். தனியாகத் தான் போகப் போகிறோம். நம் ஆயுட்காலம் இன்னொருவரோடு ஒப்பு நோக்கி வறையறுக்கப் பட்டதல்ல. வாழும் வரை இந்த உலகியல் materialistic possession-களின்பால் பெருமளவு மோகம் கொள்ளாமல், அதனால் அடுத்தவனிடம் போட்டி போட்டு நம் வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாமல், அற நெறியும் ஒழுக்கமும்தான் உண்மையான பெருமை என்பதை உணர்ந்து, "Simple living, high thinking" என்கிற கோட்பாட்டுடன் வாழ முனைவோம். ஒப்பு நோக்கி நம் மனதைக் குப்பை மேடாக்க வேண்டாம்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors