தமிழோவியம்
கட்டுரை : ஈசாவாஸ்ய உபநிஷதம்
- ராஜலஷ்மி சுவாமிநாதன்

'ஈசாவாஸ்யம்' என்னும் சொல்லில் ஆரம்பிப்பதால் இவ்வுபநிஷம் 'ஈசாவாஸ்ய உபநிஷத்து' என்று பெயர் பெற்றது. இது சுக்ல யஜுர்வேதம், வாஜஸநேய சம்ஹிதையில் நாற்பதாவது அத்தியாயமாகும்.

இந்த உபநிஷத்தின் ரிஷி 'தத்யங் ஆதர்வணர்' ஆவார். இவருடைய மகன் திருமணம் முடிந்து குடும்ப வாழ்வில் இருந்தவன். ஆனால், ஆசைகள் அடங்கினவனாயும் அனுஷ்டானங்களைத் தொடர்பவனாயும் இருந்தான். மோட்சம் அடைய வெகு ஆவலாய் இருந்தான்.

தன் தந்தையிடமே சரணடைந்து வழிமுறையை விளக்குமாறு வேண்டினான்.

"அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்திலிருந்து பூரணத்தை எடுத்து விட்டாலும் பூரணமே எஞ்சி நிற்கின்றது", என்கிறார்.

அட்சர லட்சத்தில் இருந்து ஒன்றை எடுத்தாலும் அது குறையுடையதாக கணிக்கப்படும். மைக்ரோவிற்கும் குறைந்த பின்னங்கள் அளக்கலாம். நிஜத்திலும் ஒரு பைசாவிற்கு மதிப்பில்லாவிட்டாலும், பஸ்ஸில் ஆரம்பித்து, காய்கறி வரை மிச்சம் வாங்காமல் விடமாட்டோம்.

ஆனால், பரம்பொருள் இந்த நியதிக்கு அடங்காது. இரு ரஸ்மலாய் சாப்பிட்டால் சுவை தெரியும். ஒரு ரஸமலாயிலும் இனிப்புத்தன்மை நாவில் நிற்கும். பூரணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்துவிட்டாலும் எஞ்சியிருப்பதும் பூர்ணமே.

பிறக்கும் அனைத்தும் இறந்து காணாமல் போகும். இவை அனைத்தும் ஈசனால் வியாபிக்கப்பட்டதாகவே காணவேண்டும். அந்த உருவகத்தால் ஏற்படும் தியாக உணர்வால் நம்மை நிரப்பிக் கொள்ளவேண்டும். உயிரை உடம்பில் வைத்துக் கொள்ள மட்டும் அவசியமானவற்றை இறைவர் கொடுத்துள்ளார் என ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறரின் உடைமையில் அவா கூடாது.

கவிதையின் உயிர் உணர்ச்சி. உயிரின் அடையாளம் உணர்ச்சி. இறந்தபிறகு இந்த அடையாளம் எங்கிருக்கிறது? அவ்வாறே ஆத்மா இருக்கும் அடையாளங்களை செயலில் காண்பிக்கால் வாழ்பவன், அஞ்ஞானியாவான்.

அங்கெங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
     ஆனந்த் பூர்த்தியாகி
அருளோடு நிறைந்தது எது? தன் அருள் வெளிக்குள்ளே
      அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும்படி இச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த்
     தழைத்தது எது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எல்லாம்
     தம்தெய்வம் எம் தெய்வம் என்று

- தாயுமானவர்

கடவுளுக்கு அர்ப்பணமாக கடமைகளைச் செய்வதே வாழ்வாங்கு வாழ்வதாகும். அதை மறந்து வாழ்பவர்கள் ஆத்மாவைக் கொன்றவர்கள். இதுவே நரகம்.

இந்த ஆத்ம சுயரூபம் மனத்துக்கு எளிதில் வந்தடையாது. ஆத்மாவை உணரவேண்டுமானால் வேற்றுமைகள் விலக வேண்டும். ஒன்று-பல, அருகே-தூரம், உள்-வெளி போன்றவை மறைய வேண்டும்.

காண்பவை யாதுமே ஆத்மாவாகவும், எங்கும் நிறைந்திருப்பதாகவும், உள்ளளியே அனைத்துமாக பார்ப்பவன் நெஞ்சில் எங்கேயிருந்து வேற்றுமை உதிக்கும்? அப்படி தரிசித்தால் துன்பம் போய்விடும். மயக்கம் கிடையாது.

இந்த ஞானம் இல்லாமல் அனுசரிக்கும் அனுஷ்டானங்கள் இருளில் அழுத்தும். இறைவனை சிலையாக வணங்கினாலும் இருள்தான் மிஞ்சும். எப்பொழுதும் உச்சாடனங்கள் செய்தாலும் இதே கதிதான்.

ஆத்மாவும் உபாசனைகளும் ஒரிழையில் ஒன்றவெண்டும். அப்பொழுதுதான் பலன். பரமாத்மாவுக்கு அர்ப்பணம் என்று கர்மங்களை நடத்த வேண்டும். மேகமூட்டம் விண்ணை மறைக்கும். நகரத்தில் பட்டொளி விளக்குகளில் நட்சத்திரங்கள் புலப்படாது. இவ்வண்ணமே, ஜீவனின் அறிவை உலகப் பகட்டு மறைக்கிறது.

ஓங்கார உள்ளளியாய் விளங்கும் பரஞ்சோதியைப் பணிந்து வணங்க வேண்டும். பிடிசாம்பலாய் கரையப் போகிறது மனித உடல். உடலின் மீது கொண்ட காதலை விட்டொழிய வேண்டும். மனத்தை விட நுண்ணிய ஆத்மாவிற்கு நம்மை சமர்ப்பிப்போம்.

மனம் நிற்காமல் ஓடும். ஆன்மா அமைதியாய் இருக்கும். ஆன்மா, மனத்தை விட வேகமாய் இயங்குகிறது. அலைபாயும் மனத்தை ஆன்மாவின் சுழற்சி கட்டுப்படுத்தும். சூரியனைச் சுற்றுகின்றன கோள்கள். சூரியனின் பிரகாசவொளி அதனுள் இருப்பதை எளிதில் விளங்க வைக்காது. ஆன்மா சூரியன் போன்றது.

'அறிவு' வேறு; 'செயல்பாடு' வேறு.
விருப்பு, வெறுப்பற்ற 'செயலின்' மூலம் மரணத்தை வெல்லலாம்.
'அறிவு' அமரத்துவத்தைக் கொடுக்க வல்லது.

அனைத்துக்கும் அப்பாற்பட்ட உருவத்தை 'அறிவு' எய்தவைக்கும். இது "புறம்".

உள்ளிருந்தும் தோன்றாத இயற்கையை அறிந்தால் மரணத்தை வெல்லலாம். இது "அகம்".

நெடுந்தூரத்திலும், மிக அருகிலும் உள்ளவன் -- அனைத்தின் அகத்திலும் இருப்பவன் -- புறத்திலும் இருப்பவன் : பிரம்மத்தை உணர்ந்தால் யாரையும் வெறுக்க மாட்டோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors