தமிழோவியம்
அரும்பு : கவிஞர் இமாம்மின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.
அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)
முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


கவிஞர் இமாம்


நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம், கடுமையானப் புயல் மழையின் காரணமாய் நான் பிறந்து வளர்ந்து ஆளான செங்கற்பட்டு உட்பட தமிழகம் முழுமையும் கடுமையான சேதம். வீடுகளின் கூறைகளெல்லாம் காற்றின் வேகத்தில் பீய்ந்து போயிருந்தன. சாலைகளின் நடுவே பெரும் மரங்கள் வேருடன் சாய்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்கம்பங்களும் ஆங்காங்கே வீழ்ந்து கிடந்ததால் மிந்துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டிருந்தன.
   
இந்நிகழ்வுகளைப் பற்றி கட்டுரை வரையும்படியும் சிறந்த கட்டுரைக்கு ஒரு ரூபாய் பரிசளிக்க இருப்பதாகவும் கூறி என் அப்போதைய வகுப்பாசிரியை திருமதி கல்வித்தாய் அவர்கள் பணித்திருந்தார். வகுப்பில் அனைவருமே எழுதினோம். என்னுடைய கட்டுரை முதற்பரிசை வென்றது. என்ன காரணத்தினாலோ நான்கணாவை மட்டுமே பரிசாய் அளித்தார். அந்த நேரத்தில் அது எனக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மிகையான மகிழ்ச்சியைத் தந்தது.

அதே காலகட்டத்தில் என்னுடன் படித்த வகுப்புத் தோழன் குமரேசனும் நானும் நாள்தோறும் நூலகம் சென்று பல்வேறு நூல்களைப் படித்து வருவோம். ஒரு நாள் அவன் தான் படித்த துப்பறியும் கதையைத் தழுவி ஒரு கதையை எழுதி எனக்குக் காண்பித்தான். அந்நிகழ்வு என்னையும் கதை எழுதத் தூண்டியது. நாங்கள் இருவருமே
கதைகள் எழுதி பரிமாறிக் கொள்வோம். இக்கதைகள் அநேகமாய் நாங்கள் படிக்கின்ற கதைகளைத் தழுவியே இருக்கும்.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் நான் தழுவல் எதுவுமில்லாமல்'திருடன் திருந்தினான்' என்கின்ற கதையை சுயமாய் எழுதினேன். இக்கதையைப் படித்த நண்பர்கள் அனைவரும் பாராட்டினர்.

இக்கதையை இல்லத்துக்குக் கொண்டு சென்று என் உடன்பிறந்தோருக்குக் காண்பித்தேன். வீட்டில் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்தனர். எனக்கு அது மிகுந்த வேதனையாகவும் அவமானமாகவும் பட்டது. வெருத்துப் போய் அத்தோடு கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய தமிழ் கட்டுரைகளைப் படித்த தமிழாசிரியர் ஜோதிமணி அவர்கள் ' டேய் உன் தமிழ் நடை நன்றாக இருக்கிறது. நீ நன்றாக வருவாய்' என வாழ்த்தினார். என் தமிழை மேம்படுத்தியதில் 'முரசொலி'க்குப் பெரும் பங்குண்டு.

பள்ளி முடித்து கல்லூரி, பணி, திருமணம், வெளிநாட்டில் குடியேற்றம், குடும்பப் பொறுப்புகள் என இடையில் என் எழுத்துப் பணி முழுக்க மறந்து போய்விட்டிருந்தது. இவ்விடைப் பட்ட காலத்தில் எனக்குத் தமிழே மறந்து போய்விட்டது. இருப்பினும் தமிழை மறப்பதா? கூடாது! என்ன செய்வது? யோசித்தேன். தினமணி செய்தித் தாளையும், குமுதம், விகடன், சாவி, குங்குமம் என வார இதழ்களை வாசிக்கத் துவங்கினேன். தமிழகத்திலிருந்து இலக்கியப் படைப்புக்களையும் வரவழைத்தேன்.இருப்பினும் படிக்கும்போது இருந்த என் தமிழின் தரம் இன்று வரையிலும் என்னிடம் திரும்பவில்லை.

தற்போது வசிக்கும் ஜெத்தா மாநகரில் என் நெருங்கிய நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவர் நல்லொழுக்கம் மிக்க நல்ல மனிதர். ஆனால், வீட்டில் தன் மனைவி மக்களை அழைக்கும் போது மட்டும் எப்போதும் 'நாயே' என்ற அடை மொழியுடனேயே அழைப்பார். அது எனக்கு அடிக்கடி சங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் அவர் தன் மகனை அவ்வாறு அழைத்தபோது நான் அச்சிறுவனை என்னிடம் அழைத்து ஒரு வெற்றுத்தாள் கொண்டு வரும்படி பணிக்க அவனும் கொண்டுவந்து கொடுத்தான். உடனே கவிதை ஒன்றை வரைந்து நண்பரின் கையில் திணித்தேன். அதை வாசித்த நண்பர் உடனே குலுங்கி குலுங்கிச் சிரித்தார். பின்னர் மனைவி, மகன், நண்பர்களென அனைவருடனும் காண்பிக்க அனைவரும் ரசித்துப் பாராட்டினர். அத்துடன் நண்பரும் நாயைக் கூட'நாயே' என்று அழைப்பதை அன்றே விட்டுவிட்டார். அதுவே நான் வரைந்த முதல் கவிதை ஆகும். இக்கவிதை 'முத்துக்கமலம்'இணைய இதழில் 'நாய்களின் உறுமல்' என்ற தலைப்பில் பிரசுரமாகி இருக்கிறது.

ஜெத்தாவின் பிரபல எழுத்தாளர் அப்துல் மாலிக் அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவரின் தூண்டுதலினாலும் ஊக்கத்தினாலும் நான் மீண்டும் கதைகள் எழுதத் தொடங்கினேன். என்னுடைய முதற் சிறுகதை 'வாக்கு' அச்சு ஊடகமான 'தேவி' வார இதழில் 3.11.99 அன்று வெளியானது. என் மாணவப் பருவத்துத் தாக்கமும், அச்சமும் என்னை 'இறைமொழியன்' என்ற புனைப் பெயரில் எழுத வைத்தது.

இம்முறை என் கதையை என் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் காட்டினேன். அது விதவை மறுமணத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. அனைவரும் பாராட்டினர். அகம் மகிழ்ந்தேன். அடுத்த வார தேவிக்காகக் காத்திருந்தேன். இதழ் வந்ததும் வாசகர் கருத்து பக்கத்தைத் திருப்பினேன். அதில் என் கதையைப் பற்றிய விமர்சனமோ, கருத்தோ இல்லாதது ஏமாற்றத்தை அளித்தது.

Imamகவிதைகளின் மேல் எப்போதுமே எனக்குக் காதல் இருந்தது. சிறுவயது முதலே எங்களின் குடும்ப நண்பர்கள் பாவலர்.பல்லவன், கவிஞர்.வில்லவன் கோதை போன்ற தமிழறிஞர்களின் தொடர்பும் நட்பும் இருந்ததால் அவர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டிருந்தேன். இருப்பினும் கவிதை எழுதுமளவுக்குத் துணிவு வரவில்லை.
 
என்னுடைய 'நாய்களின் உறுமல்' பெற்றுத் தந்த பாராட்டு என்னை மீண்டும் கவிதை எழுதத் தூண்டியது. அவ்வப்போது என்னில் உதித்த என் கவிதைகளை வரைந்து வைத்திருந்த நான் விடுப்பில் சென்றபோது பாவலர்.பல்லவனிடம் காண்பித்தேன். அவர் திருத்தங்களைச் செய்து,ஆலொசனைகள் கூறி என்னை ஒரு கவிஞனாகச் செதுக்கினார்.

ஐக்கூக்களின் மீதிருந்த மோகம் அதன்பால் இழுத்துச் சென்றது. பல ஐ கூக்களை வரைந்து அடுத்த விடுப்பில் சென்ற போது பாவலர்.பல்லவன் அவர்களிடம் காட்டினேன். அவர் அவற்றில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து கவிஞர்.இளவேனில் அவர்களின் உதவியுடன் புத்தகமாய் வெளியிட அனைத்து உதவிகளையும் நல்கி அணிந்துரையும் வழங்கினார். 'விழியருவிகளும் விமான நிலையங்களும்' என்னும் பெயரில் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. எனக்குப் பல வாசக நண்பர்கள் கிடைத்தனர். நானும் ஒரு கவிஞனாக உருப்பெற்றேன். இந்நூலும் பாவலரின் ஊக்கமும் என்னை மேலும் கவிதைகளை எழுதத் தூண்டியது.

இக்காலக் கட்டத்தில் தான் நண்பர் மல்லப்பன் அவர்கள் 'தமிழோவியம்' இணைய இதழை எனக்கு அறிமுகப் படுத்தி அதற்கு என் படைப்புகளை அனுப்பும்படி தூண்டினார். நானும் 'மனிதாபிமானம்' என்னும் என் கவிதையை முதன்முறையாக தமிழோவியம் மின்னிதழுக்கு அனுப்பினேன். என்ன காரணத்தினாலோ அக்கவிதை பிரசுரமாகவில்லை. அடுத்த வாரம் மீண்டும் இன்னொரு கவிதையான 'இரத்த பாசம்' அனுப்பி வைத்தேன். முதன் முதலாக என் கவிதை மின் ஊடகத்தில் பிரசுரமானது. அன்று முதல் இன்று வரையிலும் தமிழோவியம் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து என் படைப்புகளைப் பிரசுரித்து வருகிறது. தமிழோவியத்துக்கு நானும் கடமைபட்டிருக்கிறேன். தமிழோவியம் தன் சேவையில் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

- இமாம்.கவுஸ் மொய்தீன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors