தமிழோவியம்
தராசு : காணாமல் போகும் சட்டங்கள்
- மீனா

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்களிடமிருந்து என்னென்ன சலுகைகள் பறிக்கப்பட்டனவோ அவை அனைத்தையும் திரும்ப வழங்குவோம்.. பொது ஜனத்தின் நன்மைகளை எல்லாம் பார்க்கவே மாட்டோம்.. கடந்த ஆட்சியில் என்னென்ன சட்டங்கள் போடப்பட்டனவோ அவைகளை படிப்படியாக திரும்பப் பெறுவோம்.. அவைகள் நியாயமான சட்டங்களாக இருந்தாலும் கூட நிச்சயம் திரும்பப் பெறுவோம்.. இப்படி எல்லாம் மறைமுகமாகச் சொல்லித்தான் தற்போதைய முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டாரோ என்னவோ என்று நினைக்கும் படி அமைந்துள்ளது அவரது சமீபகால நடவடிக்கைகள்.

அரசு ஊழியர்கள் என்றால் அவர்கள் வேலை செய்வதே அபூர்வம் என்று இருக்கும் நிலையில் சென்ற ஆட்சியில் குறைக்கப்பட்ட ஏழு நாட்களை மீண்டும் விடுமுறை நாட்களாக அறிவித்து அவர்களை மகிழ்சிக்கடலில் ஆழ்த்தினார் முதல்வர். ஏற்கனவே ஒரு கோப்பு ஒரு அரசு ஊழியரது மேஜையிலிருந்து அடுத்தவரது மேஜைக்கு செல்ல மாதக்கணக்காகிறது. இதில் இன்னும் ஏழு நாள் ஆனால்தான் என்ன குடிமூழ்கிவிடப்போகிறது என்று நினைத்தாரோ என்னவோ...

இதைப்போலவே சமீபத்தில் சென்ற அரசு காலத்தில் போடப்பட்ட போராட்டங்களின் போது பொது சொத்திற்கு அரசியல் கட்சிகளால் ஏற்படும் பாதிப்பிற்கு குறிப்பிட்ட கட்சியே நஷ்டட்டு வழங்கவேண்டும் என்ற சட்டத்தையும் தி.மு.க அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சமூக விரோதிகள் எவரோ நடத்திய வன் முறைக்கு அரசியல் கட்சிகளைப் பொறுப்பாக்குவது நீதியாகாது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் துக்ளக் தர்பார் போன்று பல சட்டங்களை ஷண நேரத்தில் இயற்றுவதும் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்த உடனே அவற்றை வாபஸ் பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக நடந்து வந்தாலும் அப்போதைய ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு - மக்கள் ஆதரவைப் பெற்றவை மேற்கூறிய இரண்டு தீர்மானங்களும். அரசு ஊழியர்கள் சென்ற ஆட்சியில் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கொஞ்சமும் கிடைக்காததற்குக் காரணம் - மக்கள் மத்தியில் அவர்கள் பேரிலிருந்த வெறுப்பே.. மேலும் யாரோ யாரையோ எதிர்த்து செய்யும் போராட்டங்களின்போது பாதிக்கப்படும் தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்ட நஷ்ட ஈடு சட்டத்தையும் மக்கள் பெருமளவில் வரவேற்றார்கள். அரசியல் கட்சிகளின் ஆதரவோடு நடக்கும் போராட்டங்களின் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கும் சேதங்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியை பொறுப்பேற்க வைக்காமல் ரோட்டில் அப்பாவியாக நடந்து செல்லும் குப்பனையும் சுப்பனையுமா பொறுப்பேற்கச் சொல்வது?

அப்படி இருக்க, சென்ற ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்ப அளிக்கிறோம் என்ற நோக்கில் அவர்களால் இயற்றப்பட்ட நியாயமான சட்டங்களை - மக்களுக்குத் தேவையான சட்டங்களை இப்படி தடாலடியாக மாற்றுவது முதல்வருக்கு அழகல்ல.. சிந்திப்பாரா முதல்வர் ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors