தமிழோவியம்
திரைவிமர்சனம் : வரலாறு
- மீனா

வில்லனின் இரட்டை வேடத்தில் அஜித்தைக் கலக்க செய்த கே.எஸ் ரவிகுமார் அஜித்திற்கு அளித்த மூன்று வேடத்தில் கலக்க வேண்டும் என்று கட்டளை போட - அதை வெற்றிகரமாக செயலாக்கியுள்ளார் அஜித்.

Ajith-Asinஊரின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் சிவசங்கர் (அப்பா அஜித்). இவரது ஒரே செல்ல மகன் விஷ்ணு (பிள்ளை அஜித்). இளம் வயதில் நடந்த விபத்தில் சிவசங்கரின் கால்கள் முடமாக அதே விபத்தில் அவரது மனைவி இறந்துவிட சக்கர நாற்காலியே கதியாக வாழ்கிறார் சிவசங்கர். பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடிக்கும் மகனைத் திருத்துவதற்காக ஒரு வேலையைக் கொடுத்து அவரை ஒரு கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார். அங்கே சமூக சேவை செய்யவரும் அசினைக் கண்டு விஷ்ணு காதல் கொள்ள, மகனின் காதலை ஏற்றுக்கொண்டு நிச்சயம் செய்கிறார் சிவசங்கர்.

இந்நிலையில் ஒருநாள் குடிபோதையில் அசின் வீட்டுக்கு செல்லும் அஜித் அங்கே அவரது அப்பா விஜயன் மற்றும் அண்ணன்களுடன் செம ரகளையில் ஈடுபடுகிறார். அசினின் உறவுக்கார பெண் ஒருவரைக் கெடுக்க முயல்வதும், சொந்த அப்பாவையே கொலை செய்ய முயற்சி செய்வதுமாக அஜித்தின் செயல்கள் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருகிறது. நல்லவனான தனது மகன் ஏன் இப்படி செய்கிறான் என்ற கவலையில் அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க ஏற்பாடு செய்கிறார் சிவசங்கர். நாம் செய்யாத தப்புக்கு ஏன் இப்படி தண்டனை என்று விஷ்ணு குழம்புகிறார்.

ஒரு கட்டத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிக்கும் விஷ்ணு வீட்டுக்கு வந்து அப்பாவை கொல்ல முயற்சிக்க, அதுவரை கால் முடமாகி சக்கர நாற்காலியில் இருந்த சிவசங்கர் எழுந்து நீ விஷ்ணு கிடையாது.. உண்மையைச் சொல் யார் நீ என்று அவருடன் சண்டை போட ஆரம்பிக்க அதைப் பார்க்கும் அனைவரும் அதிர்கிறார்கள். இந்நிலையில் உண்மையான விஷ்ணு வீட்டிற்கு வந்து நன்றாக நிற்கும் தன் அப்பாவைப் பார்க்கிறார். தன்னைப்போலவே இருக்கும் அந்த இன்னொரு அஜித் யார்? ஏன் இத்தனை நாட்களாக அப்பா நடக்க முடியாதவரைப் போல நடித்தார்?? என்று அப்பாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கும் விஷ்ணுவிற்கு தன்னுடைய பிளாஷ்பேக்கைச் சொல்ல ஆரம்பிக்கிறார் சிவசங்கர்.

நாட்டியத்தில் தேர்ந்த ராஜலஷ்மியின் ஒரே மகன் சிவசங்கர். இளம் வயதிலேயே நடனம் ஆட கற்றுக்கொண்டதால் பெண்மைத் தனம் நிரம்பியவராக உள்ள சிவசங்கரை மணம் செய்ய ஒரு பெண்ணும் முன்வராத நிலையில் ராஜலஷ்மியின் உயிர் தோழியான சுஜாதா தன் மகள் கனிகாவை சிவசங்கருக்கு கல்யாணம் செய்து வைக்க முன்வருகிறார். போட்டோவில் மட்டுமே சிவசங்கரைப் பார்த்த கனிகா கல்யாண மேடையில் நேரில் அவரைப் பார்த்ததும் அவரது பெண்மைத்தனமான அசைவுகளால் அதிர்ந்து கல்யாணத்தை நிறுத்துவிடுகிறார். மகனின் கல்யாணம் நின்ற சோகத்தில் ராஜலஷ்மி இறக்க தன்னுடைய ஆண்மையை சந்தேகப்பட்ட கனிகாவை வீடு புகுந்து கற்பழிக்கிறார் அஜித்.

அம்மா இறந்த ஆத்திரத்தில் தான் செய்த காரியத்தை நினைத்து மனம் வெதும்பித் தவிக்கும் சிவசங்கர் கனிகாவிற்குப் பிறக்கும் குழந்தையை சுஜாதாவிடம் மன்றாடி கேட்டு வாங்கிக்கொண்டு அந்த ஊரைவிட்டே கிளம்பிவிடுகிறார். இந்த பிளாஷ்பேக்கை விஷ்ணுவிடம் கூறும் சிவசங்கர் விஷ்ணுவைப் போலவே இருக்கும் அந்த இன்னொருவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். ஆனால் அந்த அஜித்தும் சிவசங்கரின் பிள்ளைதான் என்ற உண்மை பிறகு தெரியவருகிறது. பைத்தியமாக இருக்கும் தன் அம்மா கனிகாவை பாதுகாத்துக்கொண்டே அப்பா சிவசங்கரைப் பழிவாங்க ஜீவா (இன்னொரு அஜித்) செய்த வேலைகள் தான் விஷ்ணுவை எல்லோரும் தவறாக புரிந்து கொள்ள வைத்தது என்பதை கடைசியில் உணரும் சிவசங்கர் விஷ்ணுவின் திருமணத்தை நிச்சயித்த தேதியில் நடத்த முடிவு செய்கிறார். அதே தேதி - நேரத்தில் சிவசங்கரை கொல்ல முடிவு செய்கிறார் ஜீவா. முடிவு என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.

அற்புதமான நாட்டிய பாவங்களை வெளிப்படுத்தவும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட மூன்று வேடங்களில் நடிக்கவும் திறமை படைத்த ஒரே நடிகர் கமல். இன்றைய சினிமா உலகில் எல்லோரும் ரஜினிக்கு அடுத்தபடி தாங்கள் தான் என்று ஓடிக்கொண்டிருக்கையில் கமலைப் போல நடனமாடவும் நடிக்கவும் தனக்கும் வரும் - எனவே தான் தான் அடுத்த கமல் என்று எல்லோருக்கும் உணர்த்துவதைப் போல அமைந்துள்ளது இந்தப்படத்தில் அஜித்தின் நடிப்பும் நடனமும். இன்றைய இளம் நடிகர்கள் எவரும் செய்யமுடியாத - செய்யத் தயங்கும் அற்புத பாவனைகளை அல்வா சாப்பிடுவதுபோல் ரசித்து ருசித்து செய்து தனக்குள் உறங்கி கிடக்கும் நடிப்புத் திறனை அற்புதமாக வெளிக்காட்டியுள்ளார் அஜித்.
இடதும் வலதுமாக விழிகளை அசைத்து அபிநயம் பிடிப்பது, கைதேர்ந்த பரத நாட்டிய கலைஞர் போல் நடந்துவரும் தோரணை, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி 'வணக்கம்' சொல்லும் பாவனை என அஜித்தின் நடிப்பு அருமை. மேலும் கனிகாவை கற்பழித்துவிட்டு திரும்பும்போது, "ஆடத் தெரியலைன்னா ஆடிக்காட்டலாம், பாடத் தெரியலைன்னா பாடிக்காட்டலாம் ஒரு வேலையை செய்யத் தெரியலைன்னா செஞ்சு காட்டலாம். ஆனா, ஆம்பிளையான்னு கேட்டா? அதான்..." என வார்த்தையை முடிக்காமல் அங்க அசைவுகளால் நடந்த காரியத்தை விளக்கும்போது சூப்பர். அப்பாவாக இந்த அசத்து அசத்துகிறார் என்றால் ஜீவாவாக ஒரு சைக்கோத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அருமை.. இந்தப்படம் அஜித்திற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக மட்டுமின்றி நிச்சயம் அவரது திரையுலக வாழ்வில் ஒரு சாதனைக்கல்லாக இடம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு ஹீரோ படம் என்றாலே நாயகிக்கு நடிக்க பெரிய அளவில் வாய்ப்பு இருக்காது. அதிலும் மூன்று அஜித் இருக்கும் கதையில் அசினின் நிலை என்ன ஆகும்? மகன் அஜித்துக்கு ஜோடியாக அசினுக்கு ஒன்று ரெண்டு இடங்களில் நடிக்க வாய்ப்பு. மற்றபடி பாடல்களில் மட்டும் தாராளமாக வந்து போகிறார். பைத்தியமாக கனிகா. நடிப்பில் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி ரேஞ்சிற்கு இல்லை என்றாலும் தன்னால் முடிந்ததை செய்துளார். நிலை குத்தி நிற்கும் கண்களுடன் அவ்வப்போது தனது திறமையை மெய்ப்பித்துள்ளார்.

மேலும் படத்தில் சந்தான பாரதி, சுஜாதா, விஜயன், மன்சூர் அலிகான், பொன்னம்பலம் ஆகியோரும் தலையைக் காட்டுகிறார்கள். வில்லன் வேலையையும் அஜித்தே செய்வதால் பொன்னம்பலம், மன்சூர் அலிகான் ஆகியோருக்கு வேலையே இல்லை...

ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்திற்கு ரஹ்மான் இசை அமைக்கிறார் என்ற எதிர்பார்பில் சென்றால் கொஞ்சம் ஏமாற்றம் தான். இன்னிசை அளபெடையே பாடல் மட்டும் சூப்பர். மற்றதெல்லாம் ஓக்கே ரகம் தான்.

அஜித்தின் திறமையை சரியான விதத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு வெளிக்கொண்டுவந்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் சூப்பர் என்றாலும் திருஷ்டிப் பொட்டு போல அமைந்துள்ளது ரமேஷ் கண்ணா - அஜித்தின்  அந்த தொத்தாபுரம் காமெடி. ஆபாசம் தூக்கி நிற்கும் அந்த சீன்களை எப்படித்தான் காமெடி என்று இயக்குனர் நினைத்தாரோ தெரியவில்லை. மொத்தத்தில் வரலாறு - அஜித்திற்கு திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் மற்றொரு வாலி....

Copyright © 2005 Tamiloviam.com - Authors