தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - 1
-

Kannadasan* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான 'நீராடும் கடலுடுத்து' என்று தொடங்கும் பாடல், இசைக்காகப் பிரிக்கப்பட்டதில் குறை உள்ளதாக தாங்கள் பேசியிருக்கிறீர்கள். ஆஸ்தான கவிஞர் என்ற முறையிலே ஒரு புதிய பாடலைத் தாங்கள் ஏன் எழுதக்கூடாது ?

O புதிய பாடல் எழுதித் தருவதாகத்தான் ஏற்கனவே அறிவித்து உள்ளேன். ஆனால் இன்றைய அரசு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒரு பிரச்சினையாக்க விரும்பவில்லை. இப்போதுள்ள பாடலைக் கெட்டால், 'மனோன்மணியம்' சுந்தரம் பிள்ளையே கண்ணீர் வடிப்பார். முதல் பாலலில் இரண்டாம் பாடலின் இரண்டு வரிகளைத் தூக்கிப்போட்டு, அதையும் தலைகீழாகத் தூக்கிப் போட்டிருப்பது மிகவும் கொடுமை.

பெரியவர்கள் எழுதில் சிறியவர்கள் கை வைத்தால் இந்தக் கதிதான் வந்து சேரும்.

* பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே ? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்..

O என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. 'ஆண்' என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப் பாடுவதற்கு என்ன இருக்கிறது.

* தங்கள் பாடல்களைக் கேட்கும்போது என் மனதில் உயர்ந்து நிற்கும் தாங்கள், தங்கள் கதைகளைப் படிக்கும்போது மிகவும் இறங்கிவிடுகிறீர்களே.. இக்குறையை நிவர்த்திக்க் முயலுவீர்களா ?

O பாடல்கள் கற்பனையில் பிறக்கின்றன. கதைகள் அனுபவத்தில் பிறக்கின்றன. கற்பனையைவிட  அனுபவம் எப்போதும் அசிங்கமாகத்தான் இருக்கும்.

* இறைவன் படைப்பில் தங்களை அதிசயிக்க வைத்தது எது ?

O ஒரு துளி விந்து, ஆயிரக்கணக்கான நரம்பு எலும்புகள் உள்ள குழந்தையாவது.

* உங்களுக்கே பிடிக்காத கெட்ட குணம் உங்களிடத்தில் உண்டா ?

O நிறைய இருப்பதால்தான் தடுமாறுகிறேன். நண்பர்களை நம்புவது. அரசியலில் நாணயத்தோடு இருப்பது. யார் மீதும் இரக்கம் காட்டுவது. இவற்றைவிட மட்டமான கெட்ட குணங்கள் என்ன இருக்கிறது ?

(நன்றி : கண்ணதாசன் பதிப்பகம்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors