தமிழோவியம்
கட்டுரை : மார்கழி நாடக விழா
-

சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் சமூகத்தினரினரிடம் இயல், இசை, நாடகங்களை கொண்டு செல்வதையும், அவர்களுக்குத் தேவையான பிற சேவைகளை வழங்குவதையும், எதிர்காலத் தலைமுறைகளிடம் தமிழ் மொழியின் சிறப்பைக் கொண்டு செல்வதையும் குறிக்கோளாக் கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாகச் செயல் பட்டு வருகிறது, சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம். அந்த மன்றம் 'மார்கழி நாடக விழா' எனும் ஒரு நாள் நாடகத் திருவிழாவை, கடந்த டிசம்பர் 11, சனிக்கிழமையன்று, சான் ஓசே நகரில் உள்ள எவர் க்ரீன் கலையரங்கத்தில் சிறப்பாக நடத்தியது.

நிகழ்ச்சியில் மொத்தம் மூன்று நாடகங்கள் இடம் பெற்றன. மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த நாடகங்கள் இரவு 7.30 வரை தொடர்ந்தது. முதலில் பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கிய 'சக்தி' அரங்கேறியது. பின்னர் தஞ்சை நாடகக் குழு வழங்கிய இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தன் கதை' நாடகத்தின் ஒளிப்பதிவு கண்பிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து பாலாஜி ஸ்ரீனிவாசன் இயக்கிய 'எண்' ணங்கள் நாடகம் அரங்கேறியது.

முதலில் மேடையேறிய நாடகம் 'சக்தி'.   அமெரிக்காவில் தன் அறிவாலும், திறனாலும் முன்னேறிய எண்ணற்ற தொழில் முனைவோர்களின் சோதனைகள் நிறைந்த, கரடு முரடான பயணத்தை, நாடகாசிரியர், அபிராமி அம்மனின் அளவற்ற பக்தி வைத்து, அம்மாவாசையன்று நிலவைக் கொணர்ந்த, அபிராமி பட்டரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதத்துடன் ஒப்பிட்டுள்ளார். தான் நம்பும் கடவுளிடம் உண்மையான பக்தியுடன் ஆத்மார்த்தமாக ஒன்றினால், அற்புதங்கள் சாத்தியமே என்னும், அபிராமி பட்டரின் கதையை அமெரிக்காவில் தன் கனவை அடையத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதையோடு மிக நேர்த்தியாக முடிச்சிட்டுள்ளார் இயக்குனர் பாகீரதி. நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர் அபிராமி பட்டராக நடித்த கணேஷ் பாபு. நாடகத்தில் அம்மன் தோட்டை எறிந்தவுடன் மேடையில் முழு நிலவு தோன்றும் காட்சிபார்வையாளர்களிடம் பிரமிப்பையும், பெருத்த வரவேற்பயையும் ஏற்படுத்தியது. கதையின் போக்கினூடே வருமாறு, சிறுமியர் கலந்து கொண்ட இரண்டு பரத நாட்டிய நடனங்களும்சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தன.
 

இரண்டாவதாக 'நந்தன் கதை' எனும் நாடகத்தின் ஒளிவடிவம் திரையில் காட்டப்பட்டது. தஞ்சை நாடகக் குழு வழங்கும் இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தன் கதை'தமிழ்ச்சங்கப் பேரவை 2003 மாநாட்டில் அமெரிக்காவில் அரங்கேறிய நாடகத்தின் ஒளிப்பதிவு. தஞ்சைப் பல்கலை நாடகத் துறைப் பேராசிரியர் ராமசாமியின் இயக்கத்தில் நந்தனார் கதை, கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகளோடு இந்திரா பார்த்தசாரதியின் கிளர்ச்சியூட்டும் வசனங்களைப் பிணைத்து மரபுக்கும் மக்கள்கலைக்குமுள்ள மோதல்களைச் சித்தரிக்கிறது.

நாடக விழாவில் இறுதியாக பாரதி நாடக மன்றம் சார்பில் பாலாஜி ஸ்ரீநிவாசன் இயக்கிய 'எண்ணங்கள்' என்ற மேடை நாடகம் அரங்கேற்றப் பட்டது. நியூயார்க் க்வீன்ஸ் கல்லூரியில் நாடக ஆசிரியராக பணிபுரியும் ஐரா ஹாப்ட்மான் என்பவர் எழுதிய பார்ட்டிஷன் என்னும் ஆங்கில மேடை நாடகத்தின் உரிமையை வாங்கி தமிழில் பெயர்த்து, எண்ணங்கள் என்ற மேடை நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி ஸ்ரீநிவாசன். ஆங்கில மூலமான பார்ட்டிஷன் பெர்க்கிலி அரோரா தியேட்டர் கம்பெனியினரால், பெர்க்லி, ஸ்டான்·போர்ட் பல்கலைக் கழகங்களிலும், பிற இடங்களிலும் மேடையேற்றப் பட்ட மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
 
 
இந்த நாடகம் ஸ்ரீநிவாச ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றையோ அல்லது கணிதத்தில் அவர் என்ன சாதனை புரிந்தார் என்பதைப் பற்றியதோ அல்ல. இது முழுக்க, முழுக்க, சிக்கலான மனித உணர்வுகளையும், உறவுகளையும் பற்றி பேசும் ஒரு நாடகம். எதிர் எதிர் துருவங்களான இரண்டு கலாச்சாரங்களில் இருந்து ஒரே சூழ்நிலையில் ஆராய்ச்சி செய்ய நேரும், இரு கணிதவியலார்களின் சந்திப்பில் நிகழும் எண்ணப்போராட்டங்களையும், அதன் விளைவுகளையும், நுண்ணியமாக மேடையில் கொண்ர்ந்த ஒரு அரிய முயற்சி. நிச்சயம் தமிழ் மேடையில் இது ஒரு புதிய, துணிவான சோதனை முயற்சி.
 
 
மிகவும் கடுமையான கணிதச் சமன்பாடுகள் பற்றிய குறிப்புக்கள் நிறைய இருப்பினும், கணிதம் பற்றி அறியாத பார்வையாளருக்கும் புரியும் விதத்திலேயே வசனங்களும் காட்சிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இந்த புதிரான உணர்வுப் போராட்டங்களை, தொய்வில்லாதா நாடகமாக்க சாதியப் படுத்தியவர்கள் பாதிரங்களாகவே மாறிய நடிகர்கள். ராமனுஜராக நடித்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசாவுக்கு கட்டுப் பெட்டியான, மந்திரங்களை உச்சரிக்கும் மெலிந்து நடுங்கும் பாத்திரம் இயற்கையாகவே கைவர வந்துள்ளது.  ராமனுஜத்தை விட சிக்கலான கதாபாத்திரம் ஹார்டி, அவர் ராயல் சொசைட்டியில் பேச வேண்டிய நீண்ட வசனங்களையும், தனது ஏமாற்றங்களையும், எதிர்பார்ப்புக்களையும், கோபதாபங்களையும் அநாயசமாக வெளிக் காட்டியுள்ளார் ஹார்டியாக நடித்த ராஜீவ்.
நாமகிரித்தாயாராக வந்த கனகா மிகத் தேர்ந்த நடிகை. முகபாவங்களிலும், கருனையைக் காட்டுவதிலும் அசத்தியிருந்தார். ·பெர்மாட்டின் ஆவியாக வந்த கிருஷ்ணன், ஆல்பிரட்டாக வந்த ராஜன் இருவரும் நாடகத்துக் தேவையான உந்து சக்தியையை தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பினால் வழங்கினார்கள். மிகவும் சீரியசான இந்த நாடகத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையை ·பெர்மாட்டின் பாத்திரமும், ·ப்ரென்ச் கலந்த வசனங்களும் வழங்கின.
 
இந்த மூன்று நாடக நிகழ்ச்சிகளுடன் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 'மார்கழி நாடக விழா' இனிதே நிறைவேறியது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors