தமிழோவியம்
கட்டுரை : சுப்ரமண்யம் சுவாமியுடன் ஒரு சந்திப்பு - தொடர்ச்சி
- திருமலை ராஜன்

சோனியா கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தாரா?
 
ஜனாதிபதியுடன் தன் சந்திப்புப் பற்றியும், அதன் தொடர்ச்சியாக சோனியா பதவியேற்றக முடியாமல் போனதையும் விளக்கிய சுவாமி, தொடர்ந்து, சோனியா யார், அவர் எங்கு பிறந்தார் என்ன படித்திருக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். அதன் தொடர்ச்சியாக சோனியாவின் மேல் அவர் வைத்த முக்கியமான குற்றசாட்டுக்களில் ஒன்று 'சோனியா தன் உண்மையான கல்வித் தகுதியை மறைத்துத் தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பட்டப் படிப்புப் படித்ததாக பொய்யான வாக்குமூலம் ஒன்றை தேர்தலில் போட்டியிடும் பொழுது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறார்' என்பது. அது குறித்து:
 

சோனியாவின் உண்மையான பெயர் ஆண்டானியோ. அதுதான் அவரது பிறப்புச் சான்றிதழில் காணப்படும் உண்மையான பெயர். சோனியாவின் தந்தை பெயர் ஸ்டெ·பனோ மொய்னோ. அவர் இத்தாலியின் பாஸிசக் கட்சியின் பிற உறுப்பினர்கள் செய்தது போலவே, ஹிட்லரின் நாசிப் படையில் தொண்டராகச் சேர்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ரஷ்யர்களால் சிறைப் பிடிக்கப் பட்டு ரஷ்ய சிறைகளில் இரண்டாண்டுகள் சிறை வைக்கப் பட்டுள்ளார். அதன் பின் சோவியத் ரஷ்யாவின் தீவீர ஆதரவாளராக மாறியுள்ளார். சோனியாவின் பிறப்புச் சான்றிதழின்படி அவர் லூஸியானா என்ற நகரில் பிறந்துள்ளார். ஆனால் அவர் பாரளமன்றத்துக்கு அளித்துள்ள தகவல்களில் தான் ஆர்பஸனோவில் பிறந்ததாகத் தெரிவித்துள்ளார். லூஸியானா நகரம் நாஸி-பாஸிஸ்ட் கூட்டணியினரின் தலைமையகம் என்பதினாலும் அவர் தந்தைக்கும் நாசிக்களுக்கும் உள்ள உறவினை மறைப்பதற்காகவும், அந்த ஊரில் பிறந்த தகவலையே மறைத்து வேறொரு ஊரைப் பிறந்த ஊராகத் தெரிவித்துள்ளார் என்கிறார் சுவாமி. 
 
 
அடுத்து சுவாமி கூறிய முக்கியக் குற்றசாட்டானது சோனியாவின் கல்வித் தகுதி பற்றியது. இந்தியர்கள் கல்வியிற் சிறந்த அறிஞர்களுக்குப் பெரிதும் மரியாதை தருபவர்கள். கல்லூரிக் கல்வி இல்லாத பலரையும் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தாலும், பட்டப் படிப்புப் படித்தவர்களின் மேல் கிராமப்புற எளிய மக்களுக்கு ஒரு மரியாதை இருக்கின்றது. அதைப் பயன் படுத்திக் கொள்ளும் விதமாகத் தன் கல்வித் தகுதியைப் பொய்யாக உயர்த்திக் கூறியிருக்கிறார் சோனியா என்பது சுவாமியின் முக்கியக் குற்றசாட்டுக்களில் ஒன்று. அவர் கூற்றின் படி, சோனியா எந்தக் கல்லூரியிலும் படித்தவரே அல்ல. உண்மையில் அவர் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டி எதையும் படித்ததேயில்லை. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் தான் படிக்காதப் பட்டப் படிப்பைப் படித்துள்ளதாகப் பொய்யான பிரமாணம் கொடுத்ததுதான் தவறு என்கிறார் சுவாமி. 2004 பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் தான் பிரசித்தி பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றிருப்பதாக, கல்வித் தகுதி என்ற படிவத்தில் உறுதி யளித்துள்ளார்.
 
 
உண்மையில் சோனியா எந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தவரே அல்லர். அவர் தனது நகரமான ஆர்ஸ்பனோவிலிருந்து 15 கிமீ தொலைவில் கிவானோ என்ற நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்துவ கன்யாஸ்தீரீகள் நடத்திய மரியா ஆசிலாடிரைஸ் என்ற கிறுத்துவப் பள்ளியில் மட்டுமே படித்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள பிற ஏழை இத்தாலியச் சிறுமிகள் போலவே அவரும் அந்தப் பள்ளியில் படித்து விட்டு,  வீட்டு வேலைகள், குழந்தைகளைக் கவனிக்கும் பணி, கடைகளிலும், ஹோட்டல்களிலும் பணியாள் வேலை போன்றவைகளைத் தேடும்  பொருட்டு இங்கிலாந்து சென்றுள்ளார். அவ்வாறு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில், பணிபுரியச் சென்ற வேலையில், அங்குள்ள லினாக்ஸ் குக் என்னும் ஆங்கிலப் பயிற்சிப் பள்ளியில் ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும் கற்றுள்ளார். அங்குள்ள பணிப்பெண் வேலைகளைச் செய்வதற்கு கொஞ்சமாவது ஆங்கில அறிவு தேவையாதலால் அவ்வாறு ஆங்கில மொழி கற்றுக் கொள்ளும் பொருட்டு அந்தப் பள்ளியில் சில காலம் பயின்றுள்ளார். இது நம்ம ஊரில் உள்ள ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் டியூடோரியல் பள்ளிகளைப் போன்றது மட்டுமே, இதற்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கும் எவ்விதச் தொடர்பும் கிடையாது.  ஆனால் சோனியாவோ தனது தேர்தல் விண்ணப்பப் படிவத்திலோ கேம்ப்ரிட்ஜ் பல்கலையிலேயே படித்ததாகப் பொய்யான தகவலை அளித்துள்ளார். தனக்குத் தெரிந்தே பொய்யான தகவல் அளித்தது ஒரு கிரிமினல் குற்றமாகும். ·போர்ஜரி குற்றமாகும். இதற்கு முன்பு இவர் இதே போல் சமர்ப்பித்த பொழுது அது தவறுதலாக டைப் அடிக்கப் பட்டுள்ளது என்று கூறியவர், இந்தத் தேர்தலில் மீண்டும் அதே பொய்யான தகவல்களை அளித்துள்ளார். இது மக்களை ஏமாற்றுவதற்காக செய்யப் பட்ட மோசடி வேலை. இது நீரூபணமானால் அவரது எம் பி பதவி பறிக்கப் படும்.
 

2004 தேர்தலில் ரேபரேலித் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் சோனியா அளித்துள்ள அ·பிடவிட்டில் தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் கீழ் உள்ள லினாக்ஸ் குக் கல்லூரியில் ஆங்கில, ·ப்ரென்ச் மொழிகளில் பட்டயம் பெற்றுள்ளதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவ்வாறு ஒரு கல்லூரியே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து மிகத் தெளிவாக சோனியா தங்கள் பல்கலையில் எந்த ஆண்டும் படித்த மாணவரல்லர் என்றும், வெளியே உள்ள எண்ணற்ற தனியார் ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகளில் படித்திருக்கலாமென்றும் குறிப்பிட்டுள்ளது. சோனியாவின் விண்ணப்பப் படிவமும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக ஆவணக் காப்பகத் தலைவரிடமிருந்து வந்த கடிதமும் இங்கு இணைக்கப் பட்டுள்ளது. ஒரு சாதாரணக் கல்வித் தகுதியை சொல்லுவதிலேயே இவ்வளவு பொய்யும், பித்தலாட்டங்களும் புரிபவரிடம் எவ்வாறு இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடியும் என்று வினவுகிறார் சுவாமி.
 

சோனியா குறித்தப் பிற குற்றசாட்டுக்களும் அதன் ஆவணங்களும் அடுத்த வாரம் காணலாம்.
 
தொடரும்.......

(ஆவணங்கள்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors