தமிழோவியம்
தராசு : முரண்பாட்டு கூடாரங்கள்
- மீனா

கூட்டணி என்றால் என்ன - கூட்டணி தர்மம் என்ன ?

தமிழக முதல்வராக இருப்பவர் தங்களுடைய கூட்டணியில் நடைபெறும் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற முறையில் இரங்கல் செய்தி வெளியிடுகிறார் - அவரைக் கண்டிக்கும் விதத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் மெளனம் காக்கிறது மத்திய அரசு.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக யார் இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்போம் என்று முழங்குகிறது தமிழக காவல் துறை. ஆனால் ஊரறிய பகிரங்கமாக அந்த இயக்கத்திற்கு ஆதரவாக இயங்கும் கூட்டணிக் கட்சியின் ஒரு தலைவரான திருமாவளவன் போன்றவர்களை அதே காவல் துறை கண்டும் காணாமலும் இருக்கிறது.

தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு எதிராக முழங்கிக்கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் முன்னாள் முதல்வர். ஆனால் அவரது கூட்டணியில் பிரதானமாக உள்ள ஒரு தலைவர் அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்களில் முக்கியமானவர். காலம் காலமாக அந்த இயக்கத்திற்கு ஆதரவளித்து வரும் தலைவரைக் குறைகூறி தலைவி ஒரு வார்த்தைகூட இன்று வரை சொல்லவில்லை.

தனிமனித கைது நடவடிக்கைக்காக ஒன்றுமறியா மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை எதிர்த்து ஒரு காலத்தில் மேடை தோறும் முழங்கியவர் இன்று அந்தப்பாதகத்தை செய்த பாவிகளுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பு வந்த பிறகும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வாயடைத்து நிற்கிறார்.

மாநில அமைச்சரும் கூட்டணியின் முக்கிய தலைவரும் ஏக வசனத்தில் ஒருவர் மீது ஒருவர் வசை மாறி பொழிகிறார்கள். இரு கட்சித் தொண்டர்களிடையே காழ்ப்புணர்வு முற்றி முடியைப் பிடித்து அடித்துக்கொள்ளாத குறையாக இரு பிரிவும் சண்டையிடுகிறார்கள். இதையெல்லாம் அடக்க வேண்டிய முதல்வர் கண்டும் காணாமலும் இருக்கிறார்.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் ஆபத்தானது என்று கூச்சல் போடுகின்றனர் மத்தியில் உள்ள கூட்டணி கட்சியினர். ஆனால் தாங்கள் ஆளும் மாநிலத்தில் தேவையற்ற அடக்குமுறையை தாங்கள் கையாண்டதால் பூதாகாரமான பிரச்சனையை சமாளிக்க வழி தெரியாமல் போக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாங்கள் மறைமுக ஆதரவு தருகிறோம் என்ற ரீதியில் இறங்கி வருகிறார்கள் - மாநிலத்தில் தங்கள் ஆட்சியைக் காத்துக்கொள்ள..

இதுதான் கூட்டணி, இதுதான் கூட்டணி தர்மம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors