தமிழோவியம்
கட்டுரை : இலக்கியவிளக்கு
- ஷைலஜா

சாலையின் குறுக்கே சரேலென பாய்ந்தோடும் பூனையைக் கண்டு கதிகலங்குவோர்கூட அதன் அழகையும் விளையாட்டுத்தன்மையையும் காணும்போது ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. பூனைக்குட்டிகள் செல்லக் குழந்தையைவிட மேன்மையான முறையில் பேணி வளர்க்கப்படும் இல்லங்கள் பல இன்றைக்கும் இருக்கின்றன.

ஆங்கிலப்பேரரசி விக்டோரியாவிற்கு பூனைக்குட்டிகள் என்றால் உயிர். எந்நேரமும் ஓரிரண்டு பூனைக்குட்டிகள் அரசியாருடன் விளையாடிக் கொண்டே இருக்குமாம். யாருக்காவது பூனைக்குட்டியை அரசியார் பரிசாக வழங்கினால், அது மாபெரும் மரியாதையாக மதிக்கப்பட்டுவந்தது. ஒருமுறை சீனத்து அரசவைத்தூதர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார். மறுமுறை அந்த தூதுவரை காண நேர்ந்தபோது ராணியார் குட்டிப் பூனையைப்பற்றி நலன் விசாரித்தார். அதற்கு அவர் "அந்த துருக்கிய பூனைதானே மிகவும் நன்றாக இருந்தது. அதன் இனிய ருசிக்கு ஈடு இணை ஏது?" என்றாராம்.

அரசியார் உடனேயே மூச்சைப்போட்டுவிட்டாராம்.

இலக்கிய ரசனையைப்பற்றி சிந்தனை செய்யும்போது இந்தக்கதைதான் நினைவிற்குவருகிறது .

அரசியார் மனம் பறி கொடுத்தது பூனைக்குட்டியின் வெளி அழகிலே, அதன் குறுகுறுப்பிலே, ஓயாத விளையாட்டு விஷமங்களினாலே, பிறருக்கு மகிழ்வூட்டும் தனித்தன்மையிலே என்றால் சீனத்துக்காரருக்கு அதன் இறைச்சியிலேதான் இனிமை காணமுடிந்தது. கட்புலனைக்கொண்டு இன்பம் காணும் நிலையை அவர் கற்றதில்லை நாக்கின்மீது நன்கு தேய்க்கப்படும்போதுதான் அவருக்கு ஒருபொருளின் இன்பத்தை அறியமுடியும்.

இன்றைக்குப் பற்பலவிதமான சிறுகதைகளும் நாவல்களும் கவிதைகளும் கட்டுரைகளும் வளர்ந்து தமிழ் இயக்கத்திற்கு வளமூட்டி வருவதை மறுக்க இயலாது.

கதையோ கவிதையோ  படைப்பது  என்பது எளிதானதா என்ன ?அதனை சுவைபடச் சொல்லவும் வேண்டுமல்லவா ?

படிக்கும்படியாக, படிக்கத்தூண்டும் படியாக எழுதுவதென்பது சிலருக்குத்தான் முடிகிறது. அதற்கு படைப்பினை உருவாக்குவதில் கவனம் தேவை என்கிறார்கள் அதில் தேறியவர்கள்.

கதையை உருவாக்குவது என்றால் என்ன?

எந்த ஒரு படைப்பானது கையில் எடுத்தவுடன் கீழே வைக்கமுடிவதில்லையோ, திரும்பத்திரும்பப் படித்துச் சுவைக்கத் தோன்றுகிறதோ, சில இடங்கள் சில சொற்கள் அப்படியே மனதில் பதிந்துவிடுகிறதோ, அவற்றைப்பார்க்கிற பேரிடத்திலெல்லாம் சொல்லிச்சொல்லி மகிழும்படி செய்துவிடுகிறதோ, இத்தனைக்கும் மேலாக காலவெள்ளத்தை எதிர்த்து எதிர்நீச்சல்போடத் திறன் பெற்றிருக்கிறதோ அந்தப் படைப்பைத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறோம்

இப்படிப்பட்ட கலைப்படைப்புகள் இவற்றைக் கலைஞன் படைப்பதில்லை. "குழந்தைகள் நம்மிடமிருந்து பிறப்பதில்லை அவை நம் மூலமாக வெளிப்படுகின்றன" என்பது கலீல் கிப்ரான் வாக்கு.

கலைப்படைப்புகள் காலம் கடந்து நிற்கத் தக்க வகையில் உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற நல்ல சமுதாயச் சூழ்நிலை உருவாக வேண்டும். ஒரு நாட்டில் விளைந்து வருகிற, உலவிவருகிற, ரசிக்கப்பட்டுவருகிற பெரும்பான்மையான புத்தகங்களைவைத்தே ஒரு சமுதாயத்தின் நாடியைபிடித்துப் பார்த்துவிட முடியும்.

நல்ல கலைபடைப்புகளைச் சுவைக்கவும் ஒரு ரசிகர்மண்டலம் தேவை. அப்போதுதான் அவை மதிக்கப்படும் .மக்களிடையே பரவமுடியும். நல்லதரமான கலாரசனையை மக்களிடையே பரப்பவும்முடியும்

ஆனாலும் குற்றம்குறை கூறுபவர்கள் எக்காலத்திலும் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

'படிப்பவர்களைவிட பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகம். வாசிப்பவர்களவிட படைப்பை வார்க்கும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஈசலாய் பெருகிவிட்டது' என்கிறார் ஒருவர். பூனையின் உடம்பில் எலும்புகளைவிட ரோமங்கள் அதிகமாக இருக்கின்றன என்பதான பேச்சைப்போல!

'எல்லாம் ஒரே இமிடேஷன், காப்பி" என்கிறார் மற்றவர். பூனை புலியைப்பார்த்துத்தான் சூடு போட்டுக் கொண்டது எனும் நியாயம்போல.

'உங்கள் சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் செய்த சாதனைதான் என்ன?' என்கிறார் ஒரு வியாபாரி.

பூனையைக் கொண்டு ஏர் உழமுடியுமா வண்டி ஓட்ட முடியுமா என்ற கேள்வியை போல எக்காரியத்தை மேற்கொண்டாலும் ஊதியம் வேண்டும் என்பதே இவர் கோட்பாடு.

'உங்கள் படைப்புகள்குப்பை... அழுகல் நெடி அடிக்கிறது' என்பார் ஒரு சுகாதார அதிகாரி. பூந் தோட்டத்திற்குப் புறம்பே உள்ள சாக்கடைமீதுதான் இவர் பார்வையெல்லாம். அழகிய ரோஜாச்செடியினைப் பிடுங்கி எடுத்து கொய்து அதன் கோரத்தைக்காட்டுவதுபோல, அதன் வேர்களையும், அங்கே ஒட்டியுள்ள மண்ணையும் சுட்டிக்காட்டி 'இதுதான் உங்கள் ரோஜாவின் அழகா?' என்றகேள்வியில் வெற்றி கண்டு விட்டதாகக் கனவு காண்பவர். இவர் பேச்சு, பூனையை ஒட்ட மழித்துவிட்டு அதன் கோரத்தைக் காட்டுவதுபோல!

'மேல் நாட்டு இலக்கியம் எங்கே, உங்கள் மறுமலர்ச்சி நூல்கள்தான் எங்கே ? ஹூம்ம்?' என்கிறார் பெருமூச்சுடன் ஒரு போலிப்படைப்பாளி. பூனை, புலிக்குட்டியாகுமா என்னும் பாவனையில். இவருக்கு மேல் நாட்டு இலக்கியமும் புரியாது, தமிழும் அப்படித்தான்! அதனால்தான் இப்படி ஒரு அங்கலாய்ப்பு! பூனைகுட்டி சீறிப் பாய்ந்தாலும் புலிக்குட்டி முனகினாலும் கிட்டே நெருங்க ஒரே பயம். ஆனாலும் குறைகுடமாய்த் தளும்பிக்கொண்டே இருப்பார்!

'வடமொழியின் கம்பீரம் தமிழில் காண்பது அபூர்வம்' என்கிறார் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர். பூனைக்குட்டி பிளிறுமா, கர்ஜிக்குமா என்ற கேள்வியைபோல. வைரம், தங்கத்தைபோல் இல்லை.. ஆகையால் மட்டமானது, என்பது இவர் எண்ணம்.

'நல்ல திறமை இருந்தாலும் எழுத்துக்குக்கூலி வாங்கும் எண்ணத்துடனேயே நம் எழுத்தாளர்கள் இருப்பதால் இன்று இலக்கியம் குட்டிச்சுவர் ஆகிறது' என்கிறார் மனோதத்துவ வல்லுநர். எலிகள் கிடைக்காத காரணத்தால் பூனைகள் மெலிந்து போய்விட்டது போன்றதான வாதம் இவருடையது.

'இவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இவர் கீறும் ஒவ்வொரு கோடும் பேரிலக்கிய சாம்ராஜ்யத்தின் பெரும் தூண்களாகும்' என்கிறார் விபரீதவாதி. எங்கள் வீட்டுப்பூனை, புலிகளைத்தான் உணவாய் கொள்ளும் என்பதைபோல.

இதேபோல இன்னும் பற்பலபார்வைகள். பலவிதமான மனக்கோணங்கள். ஆனால் ஒருவராவது பூனைக்குட்டியைப் பூனைக்குட்டியாகப்பார்ப்பதில்லை இன்றைய இலக்கியத்தை இன்றைய இலக்கியமாகவே பார்ப்பது இல்லை. புலிக்குட்டியை நினைத்துக்கொண்டு பூனைகுட்டியை பார்ப்பவர்களுக்கு அதன் உண்மையான வசீகரம் புலப்படாததில் வியப்பு இல்லை.

அதேபோல சங்கத் தமிழுடனும், மேல்நாட்டு இலக்கியங்களுடனும் ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பார்த்து தற்கால இலக்கியம் தரமானதல்ல என்று சொல்கின்றவர்கள், நமது மறுமலர்ச்சி எழுத்தின் ஏற்றத்தை அறியாமலிருப்பதைக் கண்டும் நாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை-பரிதாபம் தான் காட்டவேண்டும்.

பக்தி, நீதி, செறிந்த செய்யுள்நடை, நீண்ட வருணனை முதலியன பண்டை இலக்கிய மரபுகள். அவைகள் சிங்கங்கள் புலிகள் யானைகளாகவே இருக்கலாம். பொழுதுபோக்கு , இன்றைய உலகநிலையின் படப்பிடிப்பு, அதற்குரிய வசனன நடை முதலியன மறுமலர்ச்சிதமிழின் புது உத்திகள். அதன் வாளிப்பும் வனப்பும் விளையாட்டுத்தன்மையும் பூனைக்குட்டிகள் போன்றவை. இந்த நோக்குப்படி இவைகள் வெற்றிஅடைந்திருக்கின்றனவா என்றே நாம் ஆராயவேண்டும்.

Tiger - Catபுலியும் அழகு. புனைகுட்டியும் அழகுதான். ஆனால் இரண்டின் அழகையும் ஒரே அளவுகோல் கொண்டு அளக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

அரிசியை அளப்பதில் துணியை அளக்கலாமா என்ன? சூரியனையும் அகல்விளக்கினையும் ஒரே மானியைக்கொண்டு அளப்பது முறையா ?

சந்திர சூரியர்கள் மகா ஒளி படைத்தவர்கள்தான். மறுக்கவில்லை. அதனால் மற்ற விண்மீன்களையும் இருக்கும் வீட்டு விளக்குகளையும் புறக்கணிக்கலாமா? இன்னும் சொல்லப் போனால் , நாம் வாழும் வீட்டின் விளக்குகளோடு தானே நமக்கு சொந்தமும், தொடர்பும், அன்பும், ஆசையும், நெருக்கமும், நேசமும் அதிகம் ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors