தமிழோவியம்
தராசு : லஞ்ச எம்.பி.க்களின் லட்சணம்
- மீனா

நாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்களும் தங்கள் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 11 எம்.பிக்களின் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அவர்கள் செய்த தவறை உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர்களது பதவியைப் பறிக்க இயற்றப்பட்ட தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து அந்தப் 11 எம்.பிக்களும் பதவியிழந்தார்கள். இதை எதிர்த்து தாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ள அந்த எம்.பிக்கள் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கொடுக்க தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நம் நாட்டு மானத்தை உலக அளவில் சந்தி சிரிக்க வைத்த இவர்களுக்குப் பரிந்து கொண்டு பேசி வருகிறார்கள் ராம்ஜெத்மலானி உள்ளிட்ட சிலர், இந்த எம்.பிக்களின் செயலால் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவைப் பற்றி நன்கு சிந்தித்துதான் இவர்களுக்குக்காக வக்காலத்து வாக்ன்குகிறார்களா? இல்லை கண்மூடித்தனமாக இவர்களை ஆதரிக்கிறார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

தாங்கள் வழக்கமாக செய்யவேண்டிய குறைந்தபட்ச வேலையைச் செய்வதற்கே அரசு ஊழியர்கள் சம்பளத்துடன் லஞ்சமும் சேர்த்து வாங்குகிறார்கள்.. இந்த விஷயத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமல்ல - நாங்களும் அப்படித்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் இந்த எம்.பிக்கள். இந்நிலையில் இவர்களுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கொடுத்தால் செய்த தவறுகளை எல்லாம் எப்படி மறைப்பார்கள் என்பதை மக்களுக்கு யாரும் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இந்த விஷயமே ஒரு முடிவிற்கு வராத நிலையில் தொகுதி மேம்பாட்டிற்காக அளிக்கப்படும் நிதியை சம்மந்தப்பட்ட எம்.பிக்கள் எப்படி ஸ்வாகா செய்கிறார்கள் என்று வேறு ஒரு தொலைக்காட்சி விபரமாக செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

எப்படி லஞ்சம் வாங்கிய ஒரு சாதாரண அரசு ஊழியரின் பதவியை பறித்து அவர் மீது அரசாங்கம் சட்டப்படி வழக்கு தொடர்கிறதோ அதைப் போலவே  ஊழல் மற்றும் லஞ்சம் புகார்களில் சிக்கியுள்ள சம்மந்தப்பட்ட எம்.பிக்களின் பதவிகளைப் பறிப்பதோடு மட்டும் விடாமல் இவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி வேற்றுமை பார்க்காமல் அனைத்துக் கட்சிகளும் இவ்விஷயத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். முக்கியமாக இத்தகைய து§ராகிகளுக்காக குரல் கொடுப்பதை அனைத்துக்கட்சியைச் சேர்ந்த பிரமூகர்களும் விட்டொழிக்க வேண்டும்.

உலக அளவில் லஞ்ச விவகாரங்களில் இந்தியாவின் கெளரவம் சந்தி சிரிக்கும் அளவிற்கு லட்சணமாக இருக்கிறது. ஏதோ அரசாங்க - நாடாளுமன்ற விவகாரங்களில் நம்மை அயல் நாட்டவர்கள் ஓரளவிற்கு மரியாதையுடன் தற்போதுதான் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்வதும் காற்றில் பறக்க விடுவதும் நம் கையில் தான் உள்ளது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors