தமிழோவியம்
பேட்டி : இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு - 3
- பாஸ்டன் பாலாஜி

நந்தன் கதை - இந்திரா பார்த்தசாரதி

முன்னுரையில் எழுதியது

Nandhan Kathai by Indira Parathasarathyஇது நந்தன் கதைதான்; நந்தனார் கதை அல்ல. 'ஆர்' என்பது சிறப்பு விகுதி அன்று; சிலுவை. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சீறிய நந்தன், இந்த 'ஆர்' என்ற சிறப்பு விகுதிக்காக, 'பார்ப்பானுடைய' கைதட்டல் பெறுவதற்காக, நெருப்பில் எரிந்து போன சோகக் கதையைச் சொல்லுகிறது இந்த நாடகம். 'பார்ப்பான்' என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் கூறவில்லை. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று நினைக்கிறவன் எவனாயிருந்தாலும் அவன் 'பார்ப்பான்'. 'பார்ப்பான்' என்றால் 'அறிவு ஜீவி' என்று குழம்புகின்றவர்களும் இக்காலத்தில் இருக்கிறார்கள். 'நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் உண்டோ' என்று பாரதி கூறியிருப்பது அவர்களுக்கு வேதவாக்காக இருக்கலாம். சமுதாயப் பிரக்ஞையுள்ள எனக்கில்லை.


பகுதி - 1பகுதி - 2

 

 

* உங்களுடைய எழுத்துக்களில் வைணவத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? அல்லது பாதிப்பு தென்படாமல் கவனமாக எழுதுவீர்களா?

இ.பா.: எந்த சப்ஜெக்டப் பற்றி எழுதுகிறேனோ அதைப் பொருத்த விஷயம். பாதிப்பிருக்கலாம். இராமானுஜரைக் குறித்து எழுதும்போது வைணவத்தின் பாதிப்பு இல்லாமல் இருக்காது. அதே சமயம், 'அவுரங்கசீப்' குறித்த நாடகம் எழுதும்போது, அதில் வைணவத்தின் பாதிப்பு என்ன இருந்துவிடப் போகிறது? பல வேறுபட்ட விஷயங்களைக் நான் கையாண்டிருக்கிறேன். இதை எழுதியவர்தான் அதை எழுதினாரா என்று சந்தேகம் வரும்.

அடிப்படையில் எல்லாருமே ஹ்யுமானிடிதான். It is a proper study of mankind in man. அதுதான் வெவ்வேறு பாஷையில், வெவ்வேறு விதமாக, வெவ்வேறு வடிவத்தில் எல்லோரும் சொல்கிறார்கள். இராமனுஜரின் அடிப்படை தத்துவம் மனிதாபிமானம்.

* பெண் எழுத்தாளர், தலித் எழுத்தாளர் என்ற அடையாளங்கள் எவ்வாறு தேவையாகிறது? தலித் எழுத்தை தலித்துகள் படிக்கிறார்களா? முன்பு பார்க்கும்போது, பிராமணர்கள் மட்டுமே படிப்பதற்கான எழுத்து என்னும் நிலை இருந்தது...


இ.பா.: நல்ல எழுத்தை எவ்வளவு பிராமணங்கப் படிச்சாங்க? தெரியாது எனக்கு... (சிரிப்பு) படிக்கிறவங்க யாரா இருந்தாலும் சரி; தலித்தா இருந்தாலும், பிராமணனா இருந்தாலும் சரி... மக்களை கொண்டு வந்து ஜாதியில் போய் அடைக்காதீங்க. புதுமைப்பித்தன் பிராமாணன் இல்லை. ஆனால், பிராமணன்கள் மட்டும்தான் படிக்கப்பட்டார்.


* ஜெயகாந்தன் போன்றோரையும் சொல்லலாம்...

இ.பா.: இல்லை... ஜெயகாந்தனின் காலகட்டத்தில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. புதுமைப்பித்தன் பீரியடில் அவ்வாறு கிடையாது. ஆகவே, எல்லாவற்றையும் ஜாதியில் அடக்க முடியாது. ஆனால், தேவையில்லாமல், புதுமைப்பித்தன் வெள்ளாள எழுத்தாளர் என்றெல்லாம் புஸ்தகம் எழுதுகிறார்கள். இதெல்லாம் ரொம்பக் கேவலமாக இருக்கிறது. Let us not go into all these issues.

* வட்டார வழக்குகள் சார்ந்த எழுத்துக்கள் உங்கள் எண்ணங்கள் என்ன? அந்த சொற்களுடன் பழக்கமில்லாதவர்களுக்கு, தொடர்பு கொள்வதில் தடை ஏற்படுத்துகிறதே?

இ.பா.: Dialect-ங்கறது முக்கியமான விஷயம். இப்பொழுது இன்னொன்று வந்திருக்கிறது. Idiolect-ங்கறாங்க. Idiom + dialect. Dream tongue என்பார்களே...ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கென்று புதுப்பாணியை உருவாக்கிக் கொள்ளுதல். ஒவ்வொரு எழுத்தாளரும் தனித்தன்மையுடன் எழுத்துநடையைக் கொண்டு தனி மொழியை நிலைநிறுத்துதல். அதே சமயம் வாசகர்களையும் சென்றடைவார். He will not go all agog for it.

ஈழத்துக் கதையை தஞ்சாவூர் dialect-ல் எழுதினால் எப்படியிருக்கும்? அது படிப்பதற்கு உயரிய கதையாக இருந்தால், if it is worth all the trouble நிச்சயமாகப் படிக்கணும். அது புரியவில்லை என்று நிறுத்திக் கொள்ளக் கூடாது.

How many people understood James Joyce's Finnegans Wake? அதைப் படித்து புரிந்து கொண்டவர்கள் பத்து பேர்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், he created his own idiom. அதாவது அவருடைய dream tongue.

* பத்து பெயர்தான் படிக்கிறார்கள் என்றால், அதனுடைய பயன் என்ன? க.நா.சு. ஒரு முறை சொன்னது போல 'நல்ல இலக்கியத்தை நான் அறிமுகம் செய்ய ஆரம்பித்தபோது முன்னூறு பேர்கள் பயன் பெற்றார்கள். இருபது வருடம் கழித்தும், மக்கட்தொகை அதிகரித்தும், நபர்கள் மாறியிருந்தாலும், எண்ணிக்கையில் மாற்றம் இல்லவே இல்லை.' எப்பொழுதுமே பத்து பேர்தான் வாசிக்கிறார்கள்?

இ.பா.: உயரிய இலக்கியத்தின் அடையாளமே பத்து பேர் மட்டும் படிப்பதுதான் என்று சிலர் சொல்வார்கள் (சிரிப்பு). அப்படி நான் சொல்லவில்லை. ஈழத்துப் பிரச்சினைகள் குறித்து ஈழத்து மொழியில் எழுதாமல் வேறு எந்த மொழியில் எழுத முடியும்! எல்லாரும் படிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வட்டார வழக்கு should not interfere with the making of good literature.


* போத்தன் ஜோசப்-ஐ மேற்கோள் காட்டி "பத்திரிகையாளர்களிடையே 'professional intellectuals'-தான் இருக்கிறார்கள். Against the establishment, அதாவது அநியாயத்தை எதிர்ப்பது மட்டும்தான் முக்கியம்" என்று தாங்கள் எழுதியிருகிறீர்கள். தற்போதைய ஊடகங்களைப் பார்க்கும்போது தங்களின் எண்ணங்கள் என்ன?

இ.பா.: சுதந்திரத்துக்கு முன் பத்திரிகையாசிரியர்கள் வித்தியாசமாக இருந்திருக்கிறார்கள். போத்தன் ஜோசபை நான் சொல்லியிருக்க முடியாது. போத்தன் ஜோசப் பெரிய அறிவாளி. அவர் . ஆனால், ஒரு intellectual mercenary. அவர் இங்கே இருந்துவிட்டு, பாகிஸ்தான் வந்தபிறகு Dawn எடிட்டராகப் போய்விட்டார். அவருக்கென்று ஒரு ஐடியாலஜி எதுவும் கிடையாது. பத்திரிகையாளனுக்கு ஒரு கன்க்ஷன் வேண்டும். Conviction இல்லாமல் வெறும் intellectual mercenary-ஆக இருக்கக் கூடாது. இப்பொழுது அநியாயத்தை அநியாயம் என்று எழுதுவதே அரிதாகிவிட்டதே!

ஜெயகாந்தனே எமர்ஜென்சியை ஆதரித்தவர்தானே ?


* அப்படியா ?

இ.பா.: ஆமாம். He appeared in television and supported emergency. ஏனென்றால் காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்தார்கள். He was supporting congress. எழுத்தாளராக அவருடைய intellectual honesty எங்கே?

போலந்துக்கு நான் சென்றிருந்தபோது martial law. அந்தக் காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் புத்தகங்கள் வார்சா யூனிவர்சிடியின் lavatory-இல் இருக்கும். People did not like him. ஏனென்றால், அவர் martial law-ஐ ஆதரித்தவர். மாணவர்கள் தங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவரின் நாவல்களையெல்லாம் டாய்லெட் பேப்பராக உபயோகித்தார்கள். அவருடைய வீட்டு வாசலில் அத்தனை புத்தகங்களையும் கொண்டு வந்து போட்டுவிட்டார்கள். 'Be true to thy ownself' என்று ஷேக்ஸ்பியர் சொல்வார். அட்லீஸ்ட், உனக்கே நியாயமாக நடந்துகொள்.

* ஜெயகாந்தன் அமெரிக்கா வந்திருந்தபோது 'கம்யூனிஸம் இறந்து விட்டது. அமெரிக்காவே சோஷலிஸ்ட் நாடுதான். சோஷலிஸம் வாழ்க! அமெரிக்கா வாழ்க' என்று சொல்லியிருந்தார். அதைக் குறித்து...

இ.பா.: அவர் எந்த சமயத்தில் பேசினார் என்று எனக்குத் தெரியாது. அவரின் எழுத்தைப் பாருங்கள்... போதும்! அவரின் பழைய எழுத்துக்கள் ரொம்ப நல்லா எழுதியிருக்கார். இப்பொழுது அபிப்பிராயம் உதிர்க்கிறது எல்லாம், ப்ரொ·பஷனல் ரைட்டர் என்று வந்த பிறகு, இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனம் எல்லாம் பிடித்துவிடும்.

* எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து...

இ.பா.: அரசியல் குறித்த ஈடுபாடு இருக்கவேண்டும். ஆனால், அரசியல்வாதியாகக் கூடாது.  உலகத்தில் எதுதான் அரசியல் இல்லை! அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே பாலிடிக்ஸ்தான். அரசியலைப் பற்றி கலக்காமல் இலக்கியத்தைக் குறித்துப் பேசுவது, மகாத்மா காந்தியைக் குறிப்பிடாத சுதந்திரப் போராட்டம் போல. பாலிடிக்ஸ் என்றால் என்னவென்று நினைக்கறீர்கள் என்பதைப் பொருத்தது. Politics is social living. அப்படிக் கொண்டால், அரசியல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

அந்தக் காலத்தில் இருந்த பக்தி இலக்கங்களில் அரசியல் இருக்கிறதாவென்றால், 'ஏன் அரசியல் இல்லை?' Religious politics. சமண மதமோ, பௌத்த மதமோ தமிழ்நாட்டில் தழைக்கவில்லை என்றால், அதற்கு காரணம் பக்தி இயக்கம்.

* தமிழ் கலாசாரம் என்று எடுத்துக் கொண்டாலே அடிவருடிகளை அதிகம் கொண்ட, தலைவர்களுக்குப் பின் கண்மூடித்தனமாக தொண்டாற்றுபவர்களாக ஆகிக் கொண்டு வருகிறதா?

இ.பா.: அந்தக் காலத்தில் இருந்தே, சங்க காலத்திலேயே இப்படித்தானே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலும், பூம்புகாரில் 'கரிகாற் பெருவளத்தான் வாழ்க' என்று சொல்லிக் கொண்டு தலையை வெட்டிக் கொள்வார்களாம். பலி பீடங்கள் என்பது மரபு. தலைவனுக்காக தன்னுடைய தலையைத் தருவது இன்றும் காசுக்காக தொடர்கிறது.

* மேலும் தலைவர்களிடையே கூட போலிகள் நடமாடும் காலம் இது. கடவுள் மறுப்புக் கொள்கையுடன் கட்சி ஆரம்பித்தாலும், திருப்பதிக்கு சென்று பெருமாளை வணங்கிவிட்டு வருவது இன்றைய பேஷன்.

இ.பா.: எதிலுமே ஸ்திரமான நம்பிக்கை இல்லாமல், ஏதாவதொரு காரணங்களுக்காக, இந்த மாதிரியான கொள்கைகள் இருப்பதாக காண்பித்துக் கொள்பவர்கள் எல்லாம் கடைசியில் பலகீனமாகப் போவதில் ஆச்சரியமில்லை. அந்த பீரியடில், brahmnins represented religious forces. அதனால், நாங்கள் பிரமாணர்களுக்கு எதிரானவர்கள். So, we are also against all they represented. அந்த மாதிரியான எண்ணத்தினால்தானே இந்த கொள்கைகள் வந்தது. கடவுள் இருக்காரா, தெய்வம் இருக்கா இல்லையா என்பதைக் குறித்தெல்லாம் சயிண்டி·பிக்கா கேள்வி கேட்டா enquiry செய்தார்கள்! அதனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

* தாங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்? அந்த குறிக்கோள்கள் நிறைவேறிவிட்டதா?

இ.பா.: நமக்கே நம்முடைய அடையாளத்தை கண்டு பிடிக்கத்தான். எழுத ஆரம்பிப்பது அடையாளத்தைத் தெரிந்துகொள்ளத்தான். அதற்கப்புறம் நம்முடைய உணர்ச்சிகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக மாறுகிறது. மற்றவர்களும் உங்களுடன் ரிலேட் செய்கிறார்கள் என்னும்பொழுது மகிழ்ச்சி ஏற்படும். உலகத்துக்கு உபதேசம் பண்ணுகிறோம் என்பதெல்லாம் இல்லை. குறிப்பிட்ட சம்பவம் நம்மை எப்படி பாதிக்கிறது? கோபமோ, மகிழ்ச்சியோ, எதுவாக இருந்தாலும்... ஒரு righteous indignation. தார்மீகக் கோபம்.

* நாவல் எழுதுவதற்கு தாங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள். முழுக்க அவுட்லைன் எழுதிவிட்டு ஆரம்பிப்பீர்களா? கதை தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்கிறார்களே...

இ.பா.: கதாபத்திரங்கள் அடிப்படையில் என்னுடைய நாவல்கள் இருக்கும். I proceed from character to the narration of the story. கதாபாத்திரங்களை உறவாடவிடும்போது கதை உருவாகிறது. Plot-ஐ நான் முதலில் நினைப்பதில்லை. Only characters.

எல்லாக் கதையும் அப்படி சொல்லமுடியாது. 'குருதிப்புனல்' என்பது நடந்த சம்பவம். அந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டு, கதாபத்திரங்களும் இருக்கிறது. கன்னையா நாயுடு மாதிரி ஆட்கள் எல்லாம். Even there I don't plan the plot. The interaction between the characters, they decide the plot.

அதே மாதிரி 'தீவுகள்' என்னும் நாவல் டெல்லியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.

* உங்களுடைய படைப்பு வாழ்வில் தாக்கங்களை உருவாக்கியவர்கள் யார்?

இ.பா.: அப்படியெல்லாம் யாரும் இல்லை. எல்லாராலும் பாதிக்கப்படறதுதான். நாம் எவ்வளவு படிக்கிறோமோ, எவரை விரும்பிப் படிக்கிறோமோ, எல்லாமே பாதிப்பதுதான். பாதிப்பு என்பதால் அவர்களைப் போலவே எழுதணும் என்று அவசியமில்லை. ஜானகிராமன் has definitely influenced me. ஆனால், அவரை மாதிரி எழுதவேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஆதவன் என்னுடைய ஸ்டூண்ட். சம்பத் என்னுடைய மாணவன். இவர் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என்று யாரையும் சொல்ல முடியவில்லை.

* தங்களுக்கு நம்பிக்கையளிக்கும் படைப்புகளை தமிழில் எழுதுபவர்களில் சிலரைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இ.பா.: நிறையப் பேர் எழுதுகிறார்கள். ஜெயமோகன் எழுதுகிறான். அப்புறமா, ஆனந்த விகடனில் கூட எழுதுகிறாரே... எஸ் ராமகிருஷ்ணன்.

* தங்களைப் பற்றிய முக்கியமான விமர்சனமாக மேற்கத்திய பாதிப்புகளில் உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கையாள்வதாக குறைகூறுகிறார்கள். உலக இலக்கியங்களின் ஈர்ப்பு தங்கள் கதாமாந்தர்களின் குணாதிசயங்களில் நுழைவதுண்டா ?

இ.பா.: எது மேற்கு? எது கிழக்கு? கருத்துக்களைப் பொருத்தவரையிலும், கோட்பாடுகள் எல்லாம் பொருத்தவரையிலும், கிழக்கு, மேற்கு எதுவுமே கிடையாது. Human problems are the same all over the world. But, the way of narrating may be different. கதையை எப்படி சொல்கிறோம் என்பது வேற மாதிரி இருக்கலாம். ஆனால், மனிதனுக்கான பிரச்சினைகள் எல்லாம் ·பண்டமெண்டலா ஒன்றுதான். அணுகுமுறை வேறு மாதிரி இருக்கலாம். மேல்நாட்டில் எல்லாத்துக்குமே ஒரு பெயரைக் கொடுத்து, பட்டயம் கட்டித் தொங்க விட்டு விடுவார்கள். ஆனால், அந்த மாதிரி dilemma is the samething everywhere.

குருஷேத்திரத்தில் அர்ஜுனன் சண்டை போடலாமா, வேண்டாமா என்றான். It is a typical, classical example of existential dilemma. இந்த மாதிரி மேநாட்டு பாதிப்பு என்பதெல்லாம் ஒண்ணும் கிடையாது. அடித்தால் நாம அழறோம். சந்தோஷமாக இருந்தால் நாம சிரிக்கிறோம். இதெல்லாமே எல்லா இடத்திலயும் ஒன்றுதான். வித்தியாசங்கறது கிடையாது.

எந்த விதத்தில் மேல்நாட்டு தத்துவங்களை எல்லாம் கொண்டு வந்து சால்வ பண்ண பார்க்கிறேன் என்றால் 'exploitation of the rich over the poor' அப்படியென்றால், அதற்கு மார்க்ஸிஸம் என்றும் சொல்லலாம். Don't you think that it is their problem also existent in their country? இதே மாதிரியே முன்னாடியே டீல் பண்ணியிருக்கிறார்கள்... It is all universal.

* ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து வரும் எழுத்துக்கள் வெளிநாட்டு வாசகருக்காக, குறிப்பாக மேற்கத்திய சந்தையை மனதில் கொள்ளாமல், இயல்பாக வெளிப்படுவதாக எனக்குப் படுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் புனைவுகளில் (குறிப்பாக ஆங்கிலப் நாவல்கள்), பெரும்பாலானவை அமெரிக்கா/இங்கிலாந்து விருதுகளையும் வாச்கர்களையும் சென்றடைவதை குறிக்கோளாக எழுதப்படுகிறது என்று நினைக்கிறேன். இந்த மதிப்பீடு சரியா?

இ.பா.: The best writer in any Indian language, is definitely much better writer than, what so called best writer who writes in english, but at the same time english is not his mother tongue. அதாவது, இந்திய மொழியை தாய்மொழியாகக் கொண்ட மிகச் சிறந்த இலக்கியங்கள், இந்தோ-ஆங்கில எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகளை, விட மிகச் சிறப்பகவே இருக்கிறது.

ஏனென்றால், ஆங்கிலத்தில் எழுதும்போதே you are always thinking of a foreign audience. அதுவே மிகப் பெரியத் தடையாகிறது. Am I explaining myself to a foreigner? தாய் மொழியில் எழுதும்போது, பிரச்சினைகளை விளக்க வேண்டாம். Why the hell should I explain? I am writing to my own audience. I know they will understand. The problem of distinct constraints, problem of restrictions, எல்லாமே தடைப்பட்டுப் போகிறது. இந்தோ-ஆங்கில எழுத்தாளர்களை விட இரண்டாவது தலைமுறையில் வந்த இந்திய எழுத்தாளர்கள் சிறப்பாக இருக்கும். அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் படைப்புகள் இன்னும் நன்றாக இருக்கும்.

'லொலிடா' எழுதிய விளாடிமிர் நபகாவ், ஜோஸப் கான்ராட் போன்றோரை சொல்லலாம். நாற்பது வயதில்தான் கன்ராட் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். அவர் போலந்தில் பிறந்தவர். இருபது வயதில் இங்கிலாந்துக்கு சென்றார். He was a sailor. Brilliant writer in english. But, still they say, issues எல்லாம் அவரால் பேசமுடிகிறதேத் தவிர, அந்த ஒரு நேடிவிட்டி இல்லை என்கிறார்கள். நபகோவுக்கும் இதே பிரச்சினைதான். ரஷியாவில் பிறந்தவர். மிகச் சிறந்த அமெரிக்க எழுத்தாளர்.


* 'டெத் ஆ·ப் எ விஷ்ணு', பிஏகே-வின் 'டைகர் க்ளா ட்ரீ', அருந்ததி ராய், விக்ரம் சேத் என்று இந்தியாவில் இருந்து எழுதுபவர்கள் பட்டியல் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.

இ.பா.:  அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி போன்றவர்கள் எல்லாம் ரெண்டு, மூணு வயசில் எல்லாம் வெளிநாடுகளிதானே வளர்ந்தார்கள். அருந்ததி ராய் எல்லாம் செகண்ட் ஜெனரேஷன். ஆனால், வெஸ்டர்ன் ரீடரை என்ன அட்ராக்ட் செய்யும் என்பதை அறிந்திருக்கிறார்கள். Exoticism of India. இந்தியாவைப் பற்றி எழுதும்போது இந்தியாவின் exotics எல்லாம் சொல்லணும்னு நினைக்கிறாங்க. ஏனென்றால், அதுதான் appeals to the western writer. ரியலிஸ்டிக் ட்ரீட்மெண்ட் இல்லாமல் போய் விடுகிறது.

ஜோசப் கன்ராட் போன்றவர்கள் எல்லாம் இங்கிலாந்தைக் குறித்துதான் எழுதினார்கள். போலந்தைக் குறித்து எழுதவில்லை. அமெரிக்க எழுத்தாளன், அமெரிக்காவை குறித்து எழுதுவது மாதிரி அமெரிக்க கதாபாத்திரங்களைக் கொண்டு எவ்வளவு பேர் எழுதுகிறார்கள்?

Thats why I prefer RK Narayan. இந்தியாவைப் பற்றி மட்டும்தான் எழுதினார். கதாபாத்திரங்களும் தெற்குப் பகுதியை சார்ந்தவர்கள். Deep insight கிடைக்காது என்னும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால், அவர் கதாபாத்திரங்களை ஐடிண்டி·பை செய்ய  முடிகிறது.

* தாங்கள் சமூக வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக எழுதுவதில் தமிழில் கைதேர்ந்தவர். நிகழ்ச்சிகளை மட்டும் விவரித்து சொல்லி சென்றுவிட வேண்டியது எழுத்தாளனின் கடமையா? அல்லது நுனிப்புல் போல் தர்க்கங்களையும் சலனங்களையும் ஏற்படுத்துவதும் அடக்கமா? மேற்சென்று மார்க்சிஸம் குறித்த புனைவில், கம்யூனிஸம், சமத்துவம், லெனினிஸம் என்று பல்நோக்குப் பார்வைகளையும் ஆழமாக வெளிச்சம் பாய்ச்சுவது முக்கியமா?

இ.பா.: ( அடுத்த வாரம் தொடரும் ..)

Copyright © 2005 Tamiloviam.com - Authors