தமிழோவியம்
அரும்பு : ஆல்பர்ட் அவர்களின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.
அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)
முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


ஆல்பர்ட், விஸ்கான்சின்

வருடம்1973!

நேற்று ந‌ட‌ந்த‌து போல‌ க‌ண்ணுக்குள் திரைப்ப‌ட‌மாய் ஓடுகிற‌து. ச‌ற்று ம‌ன‌ம் என்ற‌ ரிமோட் க‌ன்ட்ரோலை ரிவ‌ர்சில் சுழ‌ல‌ விடுகிறேன். அந்த‌க்கால‌ம் இனி வ‌ருமா? நினைவுக‌ளை ம‌ட்டுமே அசைபோட்டுச்
சுவைக்க‌ முடியும்! திக‌ட்டாத‌ நினைவுக‌ள் விழியோர‌ம் "அரும்பு"கிற‌து.

இள‌மையும், துடிப்பும், எதையும் சாதிக்க‌ வேண்டும் என்று துள்ளும் ப‌ருவ‌ம‌து! அப்போதைய மதுரை மாவட்டத்தில் அது ஒரு கிராமம். அடிக்கடி பாம்புக்கடியில் சிக்கி அந்தக் கிராமத்து மக்கள் பக்கத்து நகரத்துக்கு வைத்தியத்துக்கு கொண்டுசெல்லபப்டுவார்கள். அந்தக்கிராமத்தில் மின்சாரம் இருந்தும் தெரு மின் விளக்குகள் எரிவதில்லை. அம்மாவாசை இருளில் பூச்சிக்கடி, பாம்புக்கடி என்று படாதபாடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு என்ன விமோச்சனம்? குறைந்தபட்சம் தெரு விளக்குகளையாவது  எரியவைத்தால் பரவாயில்லை. என்ன செய்யலாம் என்று அன்று இரவு வீட்டுக்கு வெளியே உள்ள இரண்டு திண்ணைகளுக்கு இடையில்
கட்டிலைப் போட்டு படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தவன் தூங்கிவிட்டேன்.

நள்ளிரவு இருக்கும்.  என் இடது கைமேல் ஊர்ந்து செல்வதுபோலிருந்தது. எப்போதும் தூங்கும்போது த‌லையிலிருந்து கால்வ‌ரை இழுத்துப்போர்த்திக்கொண்டுதான் தூங்குவேன். அசையாம‌ல் ப‌டுத்து இருந்தேன். என் மேல் ஊர்வ‌து ஒரு பெரிய‌ பாம்பு என்பதை ம‌ட்டும் உண‌ர்கிறேன்.  நிமிட‌ங்க‌ள் யுக‌ங்க‌ளாக‌ க‌ரைகிற‌து. என்மேலிருந்து த‌ரைக்கு இற‌ங்கி ச‌ர‌ச‌ர‌ என்று த‌ரையில் ந‌க‌ர்வ‌து தெரிகிற‌து. ச‌த்த‌ம் முழுவ‌துமாய் வீட்டின் பின்ப‌க்க‌ம் செல்வ‌தை அறிந்து கொண்டேன். மின்விள‌க்கைபோட்டு ஓடிப்போய் பார்த்தால் ஒரு இராட்ச‌ச‌ உருவ‌த்தில் 6 அடி நீளத்தில் போய்க்கொண்டிருந்த‌து. அன்று இர‌வு தூக்க‌ம் அம்பேல்! (க‌ன‌வு இல்லைங்க. நிஜ‌ம்!)

நானும் என் நண்பன் கார்மேகம், சின்னச்சாமி மூவரும் சேர்ந்து நாளிதழ்கள் வார இதழ்கள் ஏஜென்சி எடுத்து சுத்துப்பட்டி கிராமங்களுக்குச் சைக்கிளில் சென்று வினியோகித்துவருவோம். அப்போது எல்லா அச்சிதழ்களையும் வாசித்துவிடுவது வழக்கம். அப்போது தினமலர் நெல்லையிலிருந்து மட்டுமே வந்துகொண்டிருந்தது. உங்களூர் பிரச்னைகள் குறித்து எழுதலாம் என்று அறிவிப்புச் செய்திருந்தார்கள். அது நினைவுக்கு வந்தது.
 
ம‌றுநாள் முத‌ல் வேலையாக‌ தின‌ம‌லர் நாளித‌ழில்"எங்க‌ளூர்" என்ற‌ த‌லைப்பில் எங்க‌ளூரில் மின்சார‌ம் இருந்தும், மின்கம்பங்கள் மட்டுமே நிற்கிறது. ஒரு மின்விள‌க்கு கூட எரிவது இல்லை. சுடுகாட்டிலாவ‌து சில‌ தீப்பொறி தெரியும். அதைவிட மோசமாக எங்கள் கிராமம் இருக்கிறது. சாலை இருந்தும் குண்டும் குழியுமாய்..... பாம்புக்க‌டி என்றால் தாலுகா ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு போவ‌த‌ற்குள் பாதி உயிர் போய்விடுகிற‌து, அங்கேயும் பாம்புக்க‌டிக்கு போதிய‌ ம‌ருந்து இல்லை. இதெல்லாம் அர‌சு அதிகாரிக‌ள் க‌ண்ணில் எப்ப‌ப்ப‌ட்டு எப்ப‌ச் ச‌ரியாகும்? என்ப‌தைச் சுட்டி எழுதியிருந்தேன். அப்புற‌ம் அதை ம‌ற‌ந்தும் போனேன்.

ஒருவார‌ம் இருக்கும். கிராம‌த்தில் ச‌ர்ச‌ர்ர்ர்ர்ர்.....என்று இர‌ண்டு மூன்று ஜீப் வ‌ந்து கிராம‌த்துப் ப‌ள்ளிய‌ருகே நின்ற‌து. அதிகாரிக‌ள் நேரே த‌லைமை ஆசிரிய‌ரிட‌ம் சென்று பேசிக்கொண்டிருந்த‌ன‌ர். சிறிதுநேர‌த்தில் ஒருமாண‌வ‌ன் வ‌ந்து பெரிய‌வாத்தியார் கூட்டியார‌ச் சொன்னார் என்று வ‌ந்து நின்றான்.

போன‌போது அங்கிருந்த‌ அதிகாரி "நீங்க‌பாட்டுக்கு க‌ன்ன‌பின்னான்னு எழுதீட்டீங்க‌. கால‌ங்காத்தால‌ க‌லெக்ட‌ர் கூப்புட்டு எங்க‌ளை காச்மூச்ன்னு க‌த்துறார்.  எங்க‌ளுக்கெல்லாம் வேலை வெட்டி இல்லேன்னு நெனைச்சீங்க‌ளா ? ஸார், கொஞ்ச‌ம் நீங்க‌ எடுத்துச் சொல்லுங்க‌" என்று த‌லைமை ஆசிரியரைப்பார்த்துச் சொன்னார்.

"நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ன்னு தெரிய‌லை. ஊர் பிர‌ச்னையை எழுத‌வேணாம்ங்கிறீங்க‌ளா? யார் இதுக்கு பொறுப்புன்னு சொல்லுங்க‌?

அவ‌ங்க‌ளைச் செய்ய‌ச்சொல்லி எழுதுறேன்.  இல்ல‌ க‌லெக்ட‌ர் க‌த்துறார்ன்னா சொல்லுங்க‌..ஊரோட‌ அவ‌ல‌ம் தீர‌ க‌லெக்ட‌ர் க‌வ‌னத்துக்குன்னு நாளைக்கே எழுதிடுறேன்," என்றேன். இது ஏத‌டா வ‌ம்பாப் போச்சு என்ற‌வாறு அதிகாரிக‌ள் ஒருவ‌ருக்கொருவ‌ர் பேசிக்கொண்ட‌ன‌ர். பின்ன‌ர் த‌லைமை ஆசிரிய‌ரை அழைத்து த‌னியாக‌ப் பேசின‌ர்.

இறுதியில் டி.டி.ஓ. என்ற‌ழைக்க‌ப்ப‌டும் கோட்ட‌ வ‌ள‌ர்ச்சி அதிகாரி (கிருஷ்ணபிள்ளை என்று நினைவு) சாந்த‌மாக‌ என்னிட‌ம் வ‌ந்து," இது கொஞ்ச‌ம் நிதி ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து. முறையா அதுக்கெல்லாம் அனும‌தி வாங்கீட்டு எவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் ரோடு வ‌ச‌தி லைட் எல்லாம் போடமுடியுமோ போட்டுருவோம். தெருவிள‌க்குக‌ளை எல்லாம் இன்னும் ரெண்டுநாள்ள‌ போட்டுருவோம்.பாம்புக‌டி ம‌ருந்தை அதிக‌ அள‌வில‌ ஸ்டாக் வ‌ச்சுக்க‌ அனும‌தி கேட்டு இருப்ப‌தாக‌ ம‌ருத்துவ‌த்துறையில‌  சொல்லீருக்காங்க‌. இது ச‌ம்ப‌ந்த‌மா ந‌ம்ப‌ எம்.எல்.ஏ.கூட‌ காலையில‌ போன்ல‌ பேசினார். ஏற்பாடு ப‌ண்ணீருவோம். நீங்க‌ பேப்ப‌ர்ல‌  இனிமே இதுப‌த்தி எதுவும் கொஞ்ச‌ நாளைக்கு எழுத‌ வேண்டாம். நான் உறுதி குடுக்குறேன்,நீங்க பேப்பர்ல எழுதுறதுக்கு முன்னாடி, என் முகவரிக்கு எதா இருந்தாலும் எழுதுங்க. நான் ஆக்சன் எடுக்கிறேன். என்னதம்பி சரியா?" என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு அந்த அதிகாரிக‌ள் ப‌ற‌ந்து போனார்க‌ள்.

அவ‌ர்க‌ள் போன‌ பிற‌கு த‌லைமை ஆசிரிய‌ர் என்னிட‌ம் வ‌ந்து," ஏண்டா, ஏங்கிட்ட‌ கூட‌ சொல்ல‌லை? என்றார்.

ஏன்னா, த‌லைமை ஆசிரிய‌ர் எங்க‌ப்பா!

(எங்க‌ப்பாவிட‌ம் போய், இந்த‌ ஊர்ல‌ மிஸ்ட‌ர்.ஆல்ப‌ர்ட் ஃபெர்ணான்டோங்கிற‌வ‌ர் யார் தெரியுமா? தின‌ம‌ல‌ரில் அவ‌ர் எழுதி இருக்கார். அது விச‌ய‌மாப் பாக்க‌ணும் என்ற‌தும் "என்னோட‌ ச‌ன்" தான் என்றிருக்கிறார். உட‌னே, ஸார் என்ன‌ செய்யிறார்? என்று கேட்க‌, எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு லீவில‌ இருக்கான் என்று சொன்ன‌வுட‌ன் அதிகாரியின் சுருதி கொஞ்ச‌ம் மாறி, "நீங்க‌ வாத்தியாரா இருக்கீங்க‌. அர‌சாங்கத்துக்கு எதிரா எல்லாம் எழுத‌ப்ப‌டாதுன்னு கொஞ்ச‌ம் க‌ண்டிப்பா சொல்லுங்க‌. ச‌ரி எங்க‌ பிர‌ச்னை முடிஞ்ச‌மாதிரிதான். ஒங்க‌ பைய‌னைக் கூப்பிடுங்க‌ நாங்க‌ளும் சொல்லீட்டுக் கெள்ம்புறோம் என்று தாம்தூம்ன்னு எகிறி இருக்காங்க. எங்க‌ப்பா," நீ எழுதுன‌து எல்லாம் ச‌ரிதான். இல்லைன்னா இவ‌ங்க‌ளாவ‌து இந்த‌ ஊர்ப‌க்க‌ம் எட்டிப்பாக்கிற‌தாவ‌து," என்று சொல்லி என் எழுத்தார்வ‌த்தை அணைத்துவிடாம‌ல் ஊக்க‌ம் கொடுத்தார்க‌ள்.)

இது ந‌ட‌ந்த‌ ம‌றுநாளே தெருவிள‌க்கு எரிஞ்சுது! ஒரு ப‌த்துநாள் இருக்கும். மெயின் ரோட்டுல‌ இருந்து கிராம‌த்துச் சாலையைப் ப‌டு சுறுசுறுப்பாக‌ப் போட்டார்க‌ள். ஊரில நண்பர்கள் வட்டாரத்தில் ஒம் பேரு பேப்பர்ல வந்துருச்சுடா என்று ஒரே ரகளை.

அதன் தாக்கம்தான், பேப்ப‌ர்ல‌ வ‌ந்தா ஆகாத‌ காரிய‌ம்கூட‌ ஆகும்போல‌ இருக்கேன்னு  என்னை எழுத்துத்துறை ஈர்க்க,எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. எழுதினேன்.எழுதிய‌து எதுவும் குப்பைக்குப் போகாம‌ல்
தின‌ம‌ல‌ரில் பிர‌சுர‌மாகிய‌து. செய்திக்கு வித‌வித‌மாய் த‌லைப்புக் கொடுப்பேன். அப்போது தின‌ம‌ல‌ருக்கு ம‌துரையில் மேல‌மாசிவீதியில் அலுவ‌ல‌க‌ம் ம‌ட்டுமே இருந்த‌து. நெல்லையிலிருந்து அச்ச‌டித்து வ‌ரும். ம‌துரை தின‌ம‌ல‌ர் மேனேஜ‌ராக‌ இருந்த‌ திரு.க‌ணேச‌ன் அவ‌ர்க‌ள் என்னை உற்சாக‌ப்ப‌டுத்தினார்.

எங்க‌ள் ப‌குதிக்கு ப‌குதி நேர நிருப‌ராக‌ தின‌ம‌ல‌ர் நிய‌மித்த‌து. அப்புற‌ம் மாவ‌ட்ட‌ , மாநிலம், வெளிமாநிலங்கள், வார இதழ்கள் மற்றும் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் பலப்பல! இன்றைக்கும் எழுதுகிறேன் என்றால் என‌க்கு முக‌வ‌ரி த‌ந்த‌ தின‌ம‌ல‌ர்தான் என்ப‌து உயிரும் உணர்வுமாய்

எப்போதும் என்னில் உறைந்திருக்கும்! இதை வெளிப்ப‌டுத்த‌ வாய்ப்ப‌ளித்த‌ த‌மிழோவிய‌த்துக்கு என்னினிய‌ ந‌ன்றிக‌ள் என்னித‌ய‌த்திலிருந்து "அரும்பு"கிற‌து.

Copyright © 2005 Tamiloviam.com - Authors