தமிழோவியம்
தராசு : கோக்கை புறக்கணிக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
- மீனா

Cokeஉலகின் மிகப்பெரிய குளிர்பான கம்பெனியான கோக கோலாவிற்கு எதிராக கொலம்பியாவில் கோக் பாட்டலிங் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அடக்க வன்முறையாளர்களை ஏவிவிட்ட புகாராலும், இந்தியாவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக எழுந்த புகாராலும் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழகம் தங்கள் கல்லுரி வளாகத்தில் கோககோலா குளிர்பானங்களைத் தடை செய்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தான் நியூயார்க் பல்கலைக் கழகம் தங்கள் பல்கலைக்கழகத்தில் கோககோலா குளிர்பானங்களைத் தடை செய்தது. அமெரிக்காவின் இந்த இரண்டு பெரிய பல்கலைக் கழகங்களின் நடவடிக்கையால் கோககோலா நிறுவனம் சற்று ஆடிப்போயுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோக் போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க ஆகும் செலவை விட பலப்பல மடங்கு லாபம் வைத்து வியாபாரம் செய்து வருகின்றன. இக்குளிர்பானங்களின் தரமும் சுமாராகத்தான் உள்ளன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் குளிர்பான பாட்டில்களில் புழுக்கள் நெளிவது தொடர்பான புகார் எழுந்ததுடன் சரி.. சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை - அக்குளிர்பானங்களை வாங்கிக் குடிக்கும் நம் ஜனங்களும் அந்தப் புகார்களை நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்காவில் கோக், பெப்சி போன்ற பானங்களின் தரம் இந்தியத் தரத்தை விட பல மடங்கு அதிகமாகவும், விலை குறைவாகவும் உள்ளன. அப்படி இருந்தும் அந்நாட்டு பல்கலைக் கழகங்களும் மக்களும் அந்நிறுவனத் தயாரிப்புகளை புறக்கணித்துள்ளார்கள்.

ஆனால் இந்தியாவில் நாம் என்ன செய்கிறோம்? கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களைக் குடிப்பதால் உடலுக்கு கேடு வருமே தவிர நன்மை ஒன்றுமே கிடையாது என்பது நன்றாகத் தெரிந்தும் - இத்தகைய பானங்களை விட பல மடங்கு குறைந்த விலையில் தரமான உள்ளூர் தயாரிப்புகளான குளிர்பானங்கள், பழரசங்கள், இளநீர் முதலியவை கிடைத்தாலும் ஏதோ ஒரு மோகத்தில் அதிக பணத்தைச் செலவழித்து உடல் ஆரோக்கியத்திற்கு கொஞ்சமும் உதவாத இத்தகைய கார்பனேடட் குளிர்பானங்களை குடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறோம். மேலை நாடுகள் எல்லாம் இந்தியக் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் மதித்து நமது கலாச்சாரத்திற்கு வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் நமது பழக்கவழக்கங்களை மேலை நாட்டு மக்கள் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டு வருகிறோம்.

நமது நாட்டு முலதனங்களை வைத்துக்கொண்டு ஒரு பொருளைத் தயாரித்து அதை நம்மிடமே பல மடங்கு லாபம் வைத்து விற்ற கதை வெள்ளயர்களிடம் நாம் அடிமைப்பட்டிருந்தபோது மட்டுமல்லாது விடுதலை அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் தொடர்ந்து வருகிறது. இத்தகைய மிகப்பெரிய பன்னாட்டுத் தொழிற்சாலைகளால் இந்தியாவில் நசிந்த சிறு வியாபரங்கள் எத்தனை எத்தனை? வெள்ளயர் ஆட்சிக்காலத்தில் - அவர்கள் நம்மை அடிமைகளாகக் கருதியபோது நாம் எப்படி அவர்கள் நம்மைச் சுரண்டுவதை எதிர்த்து போராடினோம் என்பதை மறந்து, சுதந்திரப் பிரஜைகளாக - நம் முழு சுய உணர்வுடன் மற்றவர்கள் நம்மைச் சுரண்டுவதை நாமே ஆதரித்துவருகிறோம்.

கோடைக் காலங்களில் கோக் போன்ற பானங்களைக் குடிக்காமல் பழச்சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களைப் பருகுங்கள் என்று என்னதான் மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறினாலும் ஒரு கோக் குடிப்பதில் ஏற்படும் சுகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்ற நிலை பரவலாகவே இந்தியாவில் காணப்படுகிறது. அமெரிக்க தயாரிப்புகளை அமெரிக்காவே புறக்கணித்தாலும் அத்தயாரிப்புகளுக்கு ஆதரவு தர நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் நிச்சயம் இத்தகைய அமெரிக்க கம்பெனிகளுக்கு உண்டு. ஆகவே இனி வரும் காலங்களிலாவது நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளாமல் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய தயாரிப்புகளை புறக்கணித்துவிட்டு  - உடலுக்கு நலன் சேர்க்கும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிக்க ஆரம்பிப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors