தமிழோவியம்
அறிவிப்பு : தமிழோவியத்தின் பிறந்தநாள்
-

Tamiloviam 4th Birthdayஇந்தப் புத்தாண்டு தினத்தில் தமிழோவியம் தனது ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது. இத்தனை ஆண்டுகளாக தமிழோவியத்தில் எழுதி வந்த - எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், எங்கள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பாஸ்டன் பாலாஜி, பா.ராகவன் மற்றும் ரஜினி ராம்கி அவர்களுக்கும்
எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2005 ஆம் ஆண்டில் தமிழோவியத்தின் மைல்கற்களாக குறிப்பிடப்பட வேண்டியவைகளில், தமிழோவியம் குறித்து கல்கி வார இதழில் வெளிவந்த செய்தியும், தமிழோவியத்தில் புதிய பகுதியாக வெளிவந்த ஜோதிடமும், ஸ்ரீகாந்த் இசையமைத்த H1Bees ஆடியோ விற்பனையும், தமிழோவியம் தீபாவளி மலரும் முக்கிய இடம் பெறுகின்றன.

இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருந்த எங்கள் எழுத்தாளர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் குறிப்பாக தமிழோவியம் வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்கு அளித்த வந்த ஆதரவையும், பங்களிப்புகளையும் தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தமிழோவியத்தில் தாங்கள் படிக்க விரும்பும் புதிய படைப்புகள், புதிய பகுதிகள், புதிய தொழில்நுட்பம் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவற்றைச் செயல்படுத்தக் காத்திருக்கிறோம்.

- ஆர்


ஓர் இலவசத் தமிழ் மின்னிதழ் நடத்துவதில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் சந்தித்துக்கொண்டிருந்த போதிலும், வாரம் தவறாமல், சுவாரசியம் குறையாமல் பல கட்டுரைகளையும் தொடர் பகுதிகளையும் (சற்றே சுமாரான) கதைகளையும் வழங்கிவரும் தமிழோவியத்தின் பணி சந்தேகமில்லாமல் பாராட்டப்பட வேண்டியது. இது ஒரு தனி மனிதனின் உழைப்பு என்கிற வகையில் தொப்பி தூக்கியே ஆகவேண்டும். நான்காவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழோவியம், எதிர்வரும் ஆண்டில் இன்னும் சிறப்பாகச் செயல்பட எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி வாழ்த்துகிறேன்.

- பா.ராகவன்


You must really be proud of Tamiloviam stepping into its fifth year. I appreciate your and Meena's effort in making it better and better day by day. Last year was

really great for Tamiloviam to be recognized and mentioned in magazines like Kalki. I wish all success and get many more readers in 2006.

- Padma


ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழோவியம் மின்னுலகில் மேலும் மின்ன வாழ்த்துக்கள்!!
 
- சத்யராஜ்குமார்


Congratulate and wish Tamiloviam for its 4th Anniversary and all the best for all its future endeavour.
 
Best regards
- Chithran

ஞாயிறு மதியம் இரண்டு மணி இருக்கும். உண்ட களைப்பு. கொஞ்சம் 'சியஸ்டா'வாக சின்னத்திரை ஓடினாலும், கண்மூடும் நேரம். செல்பேசி பாட ஆரம்பித்தது. 'எவண்டா இவன்... இந்த நேரத்தில...' என்னும் சோம்பேறித்தனத்துடன் எடுத்தால் 'தமிழோவியம்' கணேஷ் சந்திரா. கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடமாக சனி, ஞாயிறுகளில் என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தாலே தமிழோவியமாகத்தான் இருக்கணும் என்று எண்ண வைக்குமளவு, விடாது பங்களிக்க வைக்கிறார்.

அவர் என்னை படுத்துவதால், நானும் அவரை நிறையவே வைவதுண்டு.

பொறுமையாக நான் சொல்லும் புலம்பல்களைக் கேட்டுக் கொள்வார். என்னுடைய நூற்றியெட்டு அட்வைஸ்களை பதின்மூன்றாவது தடவையாக காதில் போட்டுக் கொள்வார். புதிய தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டால், அந்த டெக்னாலஜி, தமிழோவியத்தில் எப்படிக் கொண்டு வரலாம் என்று யோசிப்பார். மதிக்காமல், மிஸ்ட் கால் ஆக்கினாலும், விடாக்கண்டராக பிடித்து விடுவார்.

விளம்பரங்களின் ஆயுள்காலமாக நூறு தடவை பார்வையில் படுவதை சொல்வோம். வலையகத்தின் டெம்ப்ளேட்டிற்கு ஆறு மாதம். இந்த மாதிரி மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு உண்டான 'பெஸ்ட் ப்ராக்டிஸசை' தமிழோவியம் தொடர்ந்து செயலில் காட்டுகிறது. வார்ப்புருவை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்ணுக்குக் குளிர்ச்சியாக மாற்றி வருகிறது. பழைய பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றி வைத்திருக்கிறது.

எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதுடன் நிற்காமல், அதன்மேல் சென்று தொடர்ச்சியாக அவர்களின் படைப்புகளைத் தொடர ஊக்குவிக்கிறது. நான்கு வருடங்களாக அசராமல் செயல்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் வலைப்பதிவு நடத்துகிறேன். பல சமயங்களில் 'மயக்கமா கலக்கமா' என்று உணர்ந்ததுண்டு. போற்றுவார் போற்றும்போது மனது றெக்கை கட்டிப் பறந்தாலும், தூற்றுவார் நாக்கின் மேல் பல் அருவாள் போட்டு குத்தும்போது 'I have got better things to worry about' என்று ஏறக்கட்டிவிட்டு, பெப்ஸி... சாரி 'ஆச்சி உங்கள் சாய்ஸ்' உமாவின் தொலைபேசியை முயற்சிக்கவும், குடும்பத்துடன் நியு ஜெர்ஸியின் உள்ளரங்கு விளையாட்டு பார்க் செல்லவும், நெட்·ப்ளிக்ஸின் ஆதிகால ஹாலிவுட் படங்களும் இக்கால ஸ்பானிஷ், இத்தாலிய, ப்ரென்ச் படங்கள் பார்த்தும் நேரம் கழிக்க மனம் எண்ணும்.

அவ்வாறு எல்லாம், மனம் கலங்காமல், தொடர்ச்சியாக வடிவிலும், உள்ளடகத்திலும், பல்சுவையிலும் மேம்படுத்தலுடன் தமிழோவியம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறே தொடர்ச்சியாக மேலும் வளரவேண்டும்.

'கஜினி'யில் சஞ்ஜய் ராமசாமி சொல்வது போல் 'தமிழோவியம் சிறப்பாக பெரிய அளவில் பேசப்படும் என்று சொன்னால் தன்னம்பிக்கை; அது என்னால் மட்டும்தான் முடியும்னு சொன்னா தலைக்கனம்'. எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு மதியமும் என்னுடைய தொலைபேசி சிணுங்காமல் இருப்பதும், தமிழில் இணைய எழுத்துக்கள் பேசப்படுவதும், வலையில் தமிழ்நுட்பம்தான் சிறந்த தொழில்நுட்பம் என்று கருதப்படுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

தமிழோவியத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

- பாஸ்டன் பாலாஜிநான்காண்டு வாழ்த்துக்கள்


காகிதத்தில் கோடுகளைக் கிழித்திங்கு
காணுவதை ஓவியமெனக் கொண்டாடும் புவியினிலே
தமிழ் எனும் தாளெடுத்து அதன்மீது
தரம் கொண்ட கருத்தோவியம் தீட்டி
தமிழர் மனம் குளிர சித்திரம் தீட்டிடும்
தமிழோவியம் கண்டதொரு நான்கு வருடம்

தமிழ் வாழும்; ஆம் ; தமிழ் வாழும்
தனிவழி கொண்ட விழுதுகள் நிறைந்த
தமிழ் எனும் ஆலவிருட்சம் அது ஆடாது
தனக்கென புகழ் படைத்த தனியான மொழியிது
கடல் பல கடந்து காததூரம் சென்றாலும்
கரையாது மொழிமீது அவர் கொண்ட பாசம்
தமிழோவியம் எனும் இலக்கியத்தடாகம்
தாகம் தீர்த்ததும் நான்கு வருடங்கள்

குழந்தை பிறந்து தவழ்ந்து நடந்து ஓடி
குதூகலம் கொடுத்து வயது நாலாயிற்று
இயற்கையாய் குழந்தைக்கு பெற்றோர் இருவரே
இந்தத் தமிழோவியத்திற்கு கிடைத்த பெற்றோர்
இகத்தினில் தமிழ் விரும்பும் அனைத்துத் தமிழரும்
இதயத்தில் தூக்கி வைத்து கொஞ்சிடுவார் இவ்விதழை

அழகிய புத்தகத்தில் அங்காங்கே எனக்கும்
அருமையாய் ஒன்றிரண்டு வார்த்தைகள் யாத்திட
கிடைத்த சந்தர்ப்பங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
கிளர்ந்தெழும் உணர்வுகளுடம் கூறிக்கொண்டு
நன்காண்டு நிறைவு காணும் தமிழோவியம் இவ்
நானிலத்தில் தமிழர்கள் விளையாடும் களமாக சிறக்க
உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வாசகனிவன்
உகுக்கின்றான் உன்னதமான வாழ்த்துக்கள்

வாழ்க ! வாழ்க சேவையால் என்றும்
தமிழ் வளர்க்க , தமிழனாய் வாழ்க

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors