தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : திருத்தொண்டனுக்கு இந்திரா பார்த்தசாரதியின் பதில்
-

சென்ற இதழில் திருத்தொண்டன் அவர்கள் எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதியிடன் 3 கேள்விகளை எழுப்பினார், அதற்கு பதில் இதோ.

பதில் : திருத்தொண்டன் எழுப்பியிருக்கும் கேள்விகளை நானே பலதடவைகள் எனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தோன்றிய பதில் இதுதான்.

Indira Parthasarathyஸ்டாபனத்தை (Establishment) எதிர்த்துப் புரட்சி செய்கிறவர்களுடைய கோட்பாடுகளே, அவர்கள் காலத்துக்குப் பிறகு, புதியதொரு ஸ்தாபனபமாக இறுகிக் அவர்களுடைய கோட்பாடுகள் கொச்சைப்படுத்தப் படுகின்றன என்பதுதான் வரலாற்றின் துயரம். இன்று இலங்கையிலுள்ள பெரும்பான்மையான பௌத்த வெறியர்களுக்கும், புத்தருக்கும் என்ன சம்பந்தம்? ஏசுநாதருக்கும், இன்று அமெரிக்காவிலுள்ள கிறித்துவ மத யுத்த வெறியர்களுக்கும் என்ன சம்பந்தம்? 'இஸ்லாம்' என்றால், 'அமைதி, சமாதானம்' என்று போதித்த நபிநாயக அடிகளுக்கும், இன்றைய ஜிஹாத் வாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இராமாநுஜர் கண்ட வைணவத்துக்கும், இன்று ஸ்தாபனமாக இறுகிவிட்ட வைணவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அன்று தம்முடைய திருக்குலத்துச் சிஷ்யர்
(தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த) நூலுக்கு, பிராமணராகிய பிள்ளைலோகாசாரியார் சம்ஸ்கிருதத்தில் வியாக்கியானம் எழுதினார். இன்று, வைணவ ஆசாரச்சீலர்கள் இவ்வாறு செய்வார்களா?

முதல் மூவர் (பொய்கை, பேய், பூதம்) பாடல்களில் பிற மத விரோதம் எதுவுமில்லை. பின்னவர் பாடல்களில் ஆங்காங்கே அருகிக் காணப்படும் பிற மத விரோதச் செய்யுட்கள், ஆழ்வார்கள் காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட இடைச்செருகல்களாக இருக்கக்கூடும்.

ஓதுவார்கள், கருவறையிலிருந்து, தேவாரப் பண்களை ஓத இயலுமா? இயலாது. ஏனென்றால் அவர்கள் அந்தணர்கள் இல்லை. வைணவத்தில், அருச்சகர்கள் கருவறையிலிருந்து பிரபந்தம் சொல்லமுடிகிறது. காரணம், அவர்கள் பிராமணர்கள். சைவம், தமிழுக்குக் கருவறையில் இடமளிக்க மறுக்கிறது. வைணவம், அந்தணரல்லாதருக்குக் கருவறையில் இடமளிக்க மறுக்கிறது. ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடுகிறவர்கள் சுமக்க வேண்டிய சிலுவை இது. எதுவும் ஸ்தாபனம் ஆகாமல் தனிக் குரலாக ஒலித்தால், வரலாற்றில் இருக்க இயலாது. சான்று, சார்வாகம். ஸ்தாபனமாகிவிட்டால் கொச்சையாகிவிடும். ஆங்கிலத்தில் இதை Catch-22 situation என்பார்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors