தமிழோவியம்
தராசு : உதவி தொடரட்டும்
- மீனா

கடந்த வாரம் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு அடங்கிவிட்டாலும் ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி கொடுத்த நமது உள்ளக் குமுறல் அடங்காது. மரணத்தைத் தழுவிய அந்த ஒரு சில நிமிட நேரத்தில் அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும் போது ஏற்படும் மன வேதனை எழுத்தில் எழுதிட முடியாத சோகம். சர்வதேச அளவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உலகமெங்கிலும் இருந்து ஏகப்பட்ட உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்வதாக உறுதியளித்துள்ளனர். நமது மத்திய அரசும் தேவையான உதவிகளைச் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆனால் நமது மாநில கட்சிப் பிரமுகர்கள் இதையும் அரசியலாக்க நினைப்பதுதான் பெரும் வேதனை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளே நடைபெறவில்லை என்ற ரீதியில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆளும் கட்சியைக் குறைக்கூறுவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் "இவைகள் எல்லாம் கற்றுக்குட்டிகளின் பிதற்றல்கள் " என்ற ரீதியில் முதல்வர் பதிலளிப்பதும் அரசியல் தலைவர்களின் முதிர்ச்சியின்மையை தெளிவாகக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசை குறை கூறுவதை ஒரு பக்கம் வைத்துக் கொண்டாலும், தங்கள் கட்சித் தொண்டர்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தலைவர்கள் ஏதாவது உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார்களா என்றால் பெரும்பாலானத் தலைவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதே உண்மையான நிலவரம். மக்களின் தொண்டர்களாக - தோழர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்கள் தேவையான நேரங்களில் போட்டோவிற்கு போஸ் கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்ததென்று நினைத்துக் கொள்வதை எங்கே போய் சொல்லி அழ?

அரசின் கடமை மக்களைக் காப்பது - அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. எதிர்கட்சிகளின் கடமை - இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் ஆளும் கட்சியுடன் கைகோர்த்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செய்வது. ஆனால் பெரும்பான்மையானத் தலைவர்கள் வெறும் வார்தை தோரணங்களை மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நிலைமை இப்படி என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பண உதவி செய்யும் நேரத்தில் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் நிற்பார்கள் - பணத்தைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள..

இந்நிலையில்  பொது சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் சிலர் வெறும் வாய் வார்த்தைகளுடனும், முதல்வர் நிவாரண நிதிக்குப் பணம் கொடுப்பதுடனும் நிறுத்திக் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாகவும் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமாகவும் செய்து வருவது மிகவும் பாராட்டப்படவேண்டிய செயலாகும். மனிதாபிமான அடிப்படையில் தேவையான நேரத்தில் தேவையான உதவிகளை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துவரும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

ஆகவே தலைவர்களே!! அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே!! பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் மக்கள் நமது சகோதர சகோதரிகள். அவர்களது பரிதாப நிலையை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்த்து ஆத்மார்த்தமாக உதவி செய்ய முன்வாருங்கள். அடுத்தவரைக் குற்றம் கூறியே வாழுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு மனதார உதவி செய்யப் பழகுங்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors