தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : இலக்கியவாதி [பாகம் 1]
- சத்யராஜ்குமார்

உஷ்ணத்தில் உடம்பு கொதித்தது. மூச்சிறைப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது. தெறித்துக் கிழிந்து விடுவதைப் போல் உடலோடு இறுகியிருந்த பனியன் வியர்வை வெள்ளத்தில் நனைந்தது. இனி மேலும் முடியாது என்பதைப் போல நரம்புகள் ஒத்துழைக்க மறுத்துத் தளர்ந்தன.

டம்பெல்ஸை பொத்தென்று கீழே போட்டான். மொட்டை மாடி சுவற்றை இரு கைகளாலும் பிடித்தபடி குனிந்து, வாய் பூராவும் மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான் கந்தசாமி.

மாலை நேரத்துச் சூரிய ஒளியில் அவன் புஜங்கள் பச்சை நரம்புகள் புடைக்க வியர்வை ஈரத்தில் மின்னின.

'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ...'

முணுமுணுவென்ற அந்தக் குரல் எப்போது நின்றது?

பின் வீட்டையும், பக்கத்து வீட்டையும் உற்றுப் பார்த்தான். புகை போக்கி வழியே வெட்கத்தோடு நெளியும் அடுப்படிப் புகையைத் தவிர எந்தச் சலனமும் இல்லை.

கையில் புத்தகத்துடன் மொட்டை மாடியை அளந்து கொண்டிருந்த நைட்டி உஷாவும், மிடி ரமாவும் எப்போது மறைந்தார்கள்?

நரம்புகள் தெறிக்க, சதைகள் உருள உடற்பயிற்சி செய்யும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் வெறும் பிரமையா, சே !

" கந்தசாமி... "

குரல் கேட்ட திசையில் குனிந்து பார்க்க,எதிர் வீட்டிலிருந்து முரளி கையசைத்தான்.

" உன்னோட உதவி வேணும் கந்தசாமி ! "

மெலிதாய் கோடு போட்ட சட்டையை பேன்ட்டுக்குள் நுழைத்து, பெல்ட்டின் பக்கிள்ஸ் பளபளக்க கையில் ஃபைலோடு நின்றிருந்தான்.

" டிராப் பண்ணணுமா? "

" ஆமா. வேலை விஷயமா அம்பிகை டெக்ஸ்டைல்ஸ் மேனேஜரை பார்க்கணும். பஸ்ஸுல போனா லேட் ஆயிடும். "

" இப்பதான் எக்ஸர்சைஸ் பண்ணி முடிச்சேன். குளிக்கணும். பத்து நிமிஷம் ஆகும். பரவாயில்லையா ? "

" பஸ் பிடிச்சு போக எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். நீ பதினஞ்சு நிமிஷத்தில் குளிச்சு ரெடி ஆகி வந்தாலே போதும். "

இறுக்கிப் பிடித்த பனியனைக் கழற்றி வியர்வையைப் பிழிந்து, உடம்பு பூராவும் துடைத்துக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கினான் கந்தசாமி.

பக்கத்து வீட்டிலிருந்து குரல் கேட்டது.

" உஷா, அதுக்குள்ளே படிச்சு முடிச்சிட்டியா? இந்த வருஷம் ப்ளஸ் டூ. ஞாபகத்தில் வெச்சிக்கோ. "

" நிம்மதியா படிக்கறதுக்கு இந்த வீட்டில் ஒரு இடம் இருக்கா? கீழே வந்தா டிவி சீரியல். மேலே போனா... "

" மேலே போனா என்னடி? என்ன முணுமுணுக்கறே? "

" அங்க ஒரு குரங்கு கரணை கரணையா சதையைக் காமிச்சிட்டு உவ்வே.... அதைப் பார்த்தாலே வாந்தியா வருது. "

கந்தசாமிக்குப் பிடரியில் அறைந்த மாதிரி இருந்தது. இவர்களுக்கு என்னதான் பிடிக்கும்? சினிமாவில் கமல்ஹாசனும், விக்ரமும் காண்பித்தால் ரசிக்கிறார்கள். இங்கே ஒருவன் மாங்கு மாங்கென்று பாடுபட்டு பில்டப் செய்வது உவ்வேயா?

வெறுப்போடு தண்ணீரை அள்ளி மேலே கொட்டிக் கொண்டான்.

அன்னை சத்யா பஜார் சென்ட்டை தெளித்துக் கொண்டு தயாராகி வெளியே வந்த போது இன்னமும் வாசலில் காத்துக் கொண்டிருந்தான் முரளி.

எச் பியில் வாங்கின ஹாண்டா ஸ்ப்லெண்டரை உதைத்து வெளியே தள்ளிக் கொண்டு வர, முரளி பில்லியனில் தொற்றிக் கொண்டான்.

" வேலையெல்லாம் எப்படிப் போகுது கந்தசாமி? "

" போகுது. நைட் ஷிஃப்ட் மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. உனக்கு என்னடா ஆச்சு? நாலு மாசத்தில் மூணு வேலையை உதறித் தள்ளிட்டே? "

" எதுவுமே ஒத்து வர மாட்டேங்குது சாமி. தினமும் காலைல நீ பைக்ல போறப்ப அப்பாகிட்ட இருந்து எனக்கு ஒரு அர்ச்சனை இருக்கும். உன் கூட படிப்பை முடிச்சவன் ஒழுங்கா வேலைக்குப் போறான். பைக் வாங்கிட்டான். நீ ஒரு இடத்தில் ஒரு மாசத்துக்கு மேல தங்க மாட்டேங்கிறேன்னு ஏத்து விழுது. தலவிதி. "

சில்லென்று குளிர்காத்து முகத்தில் அறைந்ததில் சட்டென மூட் மாறினான் முரளி.

" ஆனா, ஒரு நாள் இந்த உலகத்துக்கு நான் யார்ங்கறது தெரியும் கந்தசாமி. என்னோட இன்னொரு முகம் நம்ம தெருவுல யாருக்குமே தெரியாது. "

" என்னடா பாட்சா மாதிரி என்னமோ புலம்பறே? "

கந்தசாமியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் முரளி சட்டெனக் கத்தினான். " ஒரு நிமிஷம் இங்கே பைக்கை நிறுத்து. "

அது ஒரு பொதுக் கழிப்பறை. அங்கே போய் முரளி செய்த காரியம் கந்தசாமியை திடுக்கிட வைத்தது.

(தொடரும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors