தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : சுய சாசனம் [பாகம் : 14]
- பாஸ்டன் பாலாஜி

ராணியோடு வந்த பாதையை மனதில் கொண்டு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள் பொன்னி. ஆந்தையும் அசந்திருந்த நேரம். அதோ சரிவு. தாமரைக் குளம். அவளுக்கு அதைப் பார்க்க அழுகையாக வந்தது.

நீந்தக்கூடாது என்று முடிவோடு பாயப் போனவளை தடுத்து நிறுத்தியது அந்தக் குரல்.

"லுங்கியோட விழுந்தா ஊர் கேவலமாகப் பேசும். மேலும் பண்ணையாரைக் கண்டு பயப்படறவங்கதான் அதிகமாவாங்க... இதிலே இருக்கிற புடவையைக் கட்டிக்கிட்டு விழு."

திடுக்கிட்டுத் திரும்பினாள். செல்வம் கையில் அவள் பெட்டி.

"நீ... நீங்களா? நான்..." அவளுக்குப் பேச்சே வரவில்லை.

"அத்தான் என் நிலைமை. நான் கற்பழிஞ்சவ... அந்த நாகலிங்கம் என்னைப் பழி வாங்கிட்டான்".

செல்வம் அமைதியாக இருந்தான்.

"அப்படி ஏதாவது நடந்திருக்குமுன்னு எதிர்பார்த்ததுதான். குளத்துக்குப் போனவளைக் காணோமின்னா பின்னே என்ன நினைக்கிறது?"

"இனிமே நான் உயிரோடு இருக்கணுமா?", பொன்னி விசித்தாள்.

"முதல்லே சேலையைக் கட்டு, யாராவது வந்தாலும், அப்புறம் மெல்ல நடந்துக்கிட்டே பேசலாம்". பெட்டியைத் திறந்து ஒரு புடைவை, ரவிக்கையை எடுத்துக் கொடுத்துவிட்டு செல்வம் திரும்பிக் கொண்டான்.

"ஆமாம், ஏதோ வெறி நாய் முன்னாலே அம்மணமா நின்னாச்சு... இனிமே என்ன கௌரவம்!" பொன்னியின் சலிப்பு அவன் காதுகளில் விழுந்தது.

"பொன்னி, தோட்டத்துலே இருக்கறப்போ காக்கா எச்சம் போட்டதேன்னு எச்சலை துப்பியா பழத்தை சுவாமிக்கு நைவேத்யம் பண்றோம்? திருடன் வந்து சிலையைத் திருடறான். சிலையைக் கண்டுபிடிச்சதும் கோவில்லே பாதுகாக்கறதில்லையா? திரும்பலாமா?"

"திரும்புங்க"

"உன்னைக் காப்பாத்தக் கையில்லேன்னுதானே குளத்துலே விழப்போனே?"

"அத்தான்" அருகில் ஓடிவந்த பொன்னி தயங்கினாள்.

"ஏன் அங்கியே நிற்கிறே? நீ என்னைக்கும் என் பொன்னிதான். கையில்லாத எனக்கு கையாயிருப்பேன்னியே! வாக்கு தவறலாமா? எனக்கு ஆறுதலா என்ன சொன்னே! மறந்து போச்சா... பகையாளி எந்த நோக்கத்தோட திட்டம் போடறானோ அதுபடியே நடந்தா வெற்றியடைஞ்சவன் அவனேதான். உங்க கையை ஒடிச்சா நான் உங்களைக் கலியாணம் பண்ணிக்க மாட்டேன். நீங்க வேற வேலைக்கு போக முடியாதுங்கறது அவன் திட்டம். அதைத் தூளடிக்கணும். அவன் முன்னே சீரும், சிறப்புமா வாழ்ந்து காட்டணுமின்னு சவால் விட்ட என் பொன்னியா கோழை மாதிரி சாகத் துணிஞ்சா?"

பொன்னி விசித்தாள்.

"பாரம் குறையுமட்டும் அழுதுடு. பண்ணையாரோட இரண்டாவது குறி நீ! என் பலமான உன்னை நாசப்படுத்திட்டா ஒண்ணு தற்கொலை பண்ணிப்பே! இல்லே... அவங்ககிட்டேயே சிறையிருப்பேன்னு அவங்க கணக்கு போட்டு வெச்சிருக்காங்க. நீ செத்துட்டா நானும் ஏகாங்கியா அவங்க காலடியிலே கிடப்பேன். அது உனக்கு சம்மதம்தானா? பிறக்கும்போதே இருந்த கைகள் போச்சு. ஆனாலும் நான் வாழலியா?

நீ மனசார அவனைக் கட்டி அணைச்சாயா? அவனுக்கு உடன்பட்டாயா? சோரம் போனயா? இல்லையே. எப்புறம் ஏன் மனசிலே உறுத்தல்? குறிப்பிட்ட தேதியிலே கலியாணம் நடக்கலேன்னா ஊர் என்னைக் கெக்கலி பேசாதா? உன் தற்கொலைக்கு விதவிதமாக காரணம் சொல்ல மாட்டார்களா?"

பொன்னி சுமைதாங்கிக் கல்லின் மேல் சோகமாக உட்கார்ந்திருந்தாள்.

"நீங்க என்ன சொன்னாலும் அது எனக்குச் சரிப்படலை. உங்களைத் தொடவே நான் லாயக்கில்லாதவன்னு மனசு சொல்லுது. இதோட நான் எப்படி மணவறையில் உட்கார்ந்து தாலிக் கட்டிக்கறது, தூய்மையா எப்படி குழந்தைப் பெத்துக்கறது? உங்களுக்கு என்கிட்டே வரும்போதெல்லாம் நான் கறைபட்டவ என்கிற எண்ணம் இல்லாமையா போகும்?"

"தூத்தெறி... என்ன பேச்சு பேசிட்டே? நொண்டிங்கற அனுதாபத்திலேதான் எனக்கு மாலையிடறேன்னியா? இதோ பார்... உனக்கு சரின்னு படறவரை நமக்குள்ளே கணவன் மனைவி உறவு வேண்டாம். முன்னேயே நாம் பேசி வச்சிருந்தபடி நாம வாழ்க்கையிலே காலை ஊனிக்கறவரை, தலை நிமிர்கிறவரை, உனக்கு இருபது வயசாகிறவரை புள்ளை பெத்துக்க வேண்டாம். காலம் எப்படிப்பட்ட புண்ணையும் ஆற வெச்சுடும்.

ஏம் பொன்னி... தவறி சாக்கடையிலே விழுந்தவன் அதிலேயேவா கிடக்கான்? அப்புறம் செண்ட், சோப்பு, பூ எதுவும் உபயோகிக்கறதில்லையா? அவன் வாசனைக்கே அருகதையில்லாதவன்னு நீ சொல்ற மாதிரி இருக்கு. மலம் காலிலே ஒட்டிட்டா காலையா வெட்டறோம்? வயித்திலே கட்டி வந்துட்டா கட்டியை ஆபரேஷன் பண்ணிக்கறமே தவிர சாப்பிடாமயே இருக்கறதில்லே. இது ஒரு விபத்து... இதுலேயிருந்து குணமாக்கிக்கறதுதான் புத்திசாலித்தனம். தற்கொலை செஞ்சுக்கறதில்லே!

மகாத்மா காந்தி என்ன சொல்லி இருக்கார்! நீ எத்தனை படிச்சிருக்கே... விதவைகளையும், பலாத்காரம் செய்யப்பட்டவங்களையும் நெஞ்சிலே துணிவோட வாலிபர்கள் ஏத்துக்கணும்னு சொல்லலை? நான் தியாகமா நினைச்சு ஏத்துக்கலை. உன் மேலே நான் வைச்ச அன்பு அத்தனை குறுகினதில்லை. என் முன்னாலே வைச்சு அந்த நாகலிங்கம் உன்னைக் கெடுத்திருந்தாலும் நான் இதே முடிவைத்தான் எடுப்பேன்... சீ பைத்தியம்... ஏன் அழறே? கண்ணைத் தொடச்சிக்கோ".

"அத்தான்" அருகில் ஓடிவந்த பொன்னி, "இருங்க... குளத்திலே குளிச்சிடறேன்..."

புடைவையைக் களைந்துவிட்டு, பெட்டியைத் திறந்து ஒரு சின்னத் துண்டோடு முங்கி முங்கி எழுந்தாள். பிடாரி அம்மனை வணங்கினார்கள் இருவரும்.

(தொடரும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors