தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : சுய சாசனம் [பாகம் : 2]
- பாஸ்டன் பாலாஜி

பொன்னிக்கு அத்தையின் ஊரான தாமரைக் குளம் மிகவும் பிடிக்கும். பெயருக்கேற்றபடி ஊரின் எல்லையில் அம்மன் கோவிலருகே அழகிய தாமரைக்குளம். எந்தக் கோடையிலும் வற்றியதில்லை. பெரிய ஏரி, தவிர இரண்டு குளம் இருப்பதால் பயிர் செழிப்பு. எல்லாவற்றையும் விட கோவில் திருவிழா. கடை கன்னிகளில், வளையலும், மாலையுமாக அத்தை மகள் ஆண்டாளுவும், வாங்கிக் குவிப்பார்கள். ரங்கராடினத்தில் ஏறி கமர்கட் ஒழுக ஒழுக சுற்றுவார்கள். பதினைந்து நாள் திருவிழாவும் பொன்னிக்கு படுகுஷிதான். அதுவும் போன வருஷமே லட்சுமி ஆளாக இருக்கிற பெண் என்று தடுத்து நிறுத்தி விட்டதால் இப்போது சொல்ல முடியாத சந்தோஷம்.

ஆண்டாளு இவளைப் பார்த்ததுமே கட்டிப் பிடித்துக் கொண்டு கூத்தாடினாள்.

"நாளைக்காடி காப்பு கட்டறாங்க?"

"ஆமாம்" என்று தலையசைத்தாள் ஆண்டாளு.

சிவகாமுவின் குடும்பம் பெரியது. நான்கு பிள்ளைகளுக்கும் பண்ணையில்தான் வேலை. மூத்த பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் மனைவிகளுக்கும் அங்குதான் வேலை.

"வாங்க அத்தை! எப்போ வந்தீங்க? ஊரிலே மாமா சௌக்கியமா?"

குரல் கேட்டு பளிச்சென்று திரும்பினாள் பொன்னி. மனசுக்குள் விளக்குப் போட்டால் போல் ஒரு வெளிச்சம். ஒரு விநாடி இருவரின் பார்வையே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டன.

முதலில் சுயநிலைக்கு வந்தவன் செல்வம்.

"ஆண்டாளு, அத்தைக்கு காபி கொடுத்தியா? அவுங்க காபி சாப்பிட்டு பழக்கமானவுங்க!"

"எல்லாம் சௌக்கியந்தான்! ஒங்க ஊர் திருவிழாவுக்கு வந்தாத்தான் ஆச்சின்னு அம்மா ஒத்தைக்காலிலே நின்னு கூட்டிட்டு வந்திருக்காங்க... ஊரிலே அறுப்பு சமயம். மாமா தனியா இருக்காங்க..."

"அதென்ன அப்படி சொல்லிட்டீங்க?" என்று செல்வமும்,

"இந்தாங்கத்தே, காபி" என்று ஆண்டாளும்,

"குளிக்க குளத்துக்குப் போகலாமா?" என்று சிவகாமியின் மூத்த மருமகள் ராஜாத்தியும் வர அந்த இடம் கலகலப்பானது.

இரண்டு உள்ளங்கள் மட்டும் தனிப்பட்டுப் போயின.

'அடேயப்பா, இடையிலே ஒரு வருசம்தானே வரலை... என்னமாய் வளர்ந்து விட்டாள்!' என்று செல்வமும்,

'சே, பாண்டியும், தாயமும் விளையாடிய செல்வம் அத்தானா இப்படி! என்ன அழகான மீசை... சட்டை போடாம, இந்த ஆம்பிளைங்களுக்குத் துளிக்கூட வெக்கமே இல்லை' இந்த ரீதியில் பொன்னியும் ஒருவரைப் பற்றி ஒருவர் அசை போட்டனர். அந்த அசை ருசியாக இருந்தது.

O

"ஆரு வீட்டிலே, ஆண்டாளு, அண்ணி, யாராச்சும் ஒரு டம்ளர் சுடுதண்ணி கொண்டு வாங்க". அந்தக் குரல் பொன்னியின் மனதில் ஒரே சமயத்தில் பயத்தையும், ஆவலையும் தூண்டின.

டம்ளரை நீட்டிய கையைக் கண்டு திடுக்கிட்டான் செல்வம்.

"நீ... நீ... வேற யாரும் இல்லே?"

"இன்னிக்குத் தீமிதி ஆச்சே. எல்லாரும் போயிருக்காங்க". பொன்னியின் நாக்கு தாளம் போட்டது.

"நீ போகலே?"

"நா... நா... உடம்பு சுத்தமில்லே... போகக் கூடாதுன்னு..."

"சுத்தமில்லேன்னா... குளிக்கலையா?" குறும்பாகக் கேட்டபடி டம்ளரை வாங்கினான் செல்வம்.

"ஆங்..." சடாரென்று தலைநிமிர்ந்த பொன்னி மெதுவாக சகஜ நிலைக்கு வந்தாள்.

"நீங்க போகலே?"

இல்லையென்று தலையாட்டினான் செல்வம்.

"ஏன்?"

"உன்னைப் பார்க்கத்தான்"

"நான் தனியா இருப்பேன்னு எப்படித் தெரியும்?"

"கௌளி சொல்லிச்சு"

"என்னன்னு?"

"பொன்னி விலக்காயி இன்னிக்கு இரண்டாம் நாள். திருவிழாவில் வரமாட்டா. நீ போய் அவ மனசைத் தெரிஞ்சுக்கன்னு..."

"சொல்லும்... சொல்லும்! ஊமை போல இருந்துக்கிட்டு என்னைப் பத்தி தெரிஞ்சு வெச்சிட்டிருக்கீங்களே!"

"பொன்னி... என்னதான் நடிச்சாலும் மனசு வேணுங்கறவங்களைச் சுத்திதான் வலை பின்னுது. உம்... நான் ஆசை வைச்சு என்ன பண்ண?! எங்களது ஏழைப்பட்ட குடும்பம். நீ ஒரே பொண்ணு... மாமா உன்னை எனக்குக் கொடுப்பாரா? உம் மாமன் மகன் பலவேசம், செந்தில் ரெண்டு பேரிலே ஒருத்தரைக் கட்டிக்குவே! ஏன்... உள்ளே போறே?"

கோபத்தோடு உள்ளே போகத் திரும்பிய பொன்னியின் கையை வெடுக்கென்று பற்றி நிறுத்தினன் செல்வம்.

"அட, ஆம்பிளைத்தனமா கையைப் பிடிச்சிட்டீங்களே! ஐயோ, என்னத்தான் சுடுது..."

"வென்னீர் கேட்டப்பவே கேட்டிருக்க வேண்டிய கேள்வி.. காய்ச்சலாயிருந்ததாலேதான் பாதி வேலையைப் போட்டுட்டு வந்தேன்".

"அய்யோ!"

"சே, விடு... அதான் மருந்து கிடைச்சுடுச்சே! காய்ச்சல் பறந்துடும்... பொன்னி! நிசமாவே என்னைக் கட்டிக்குவியா? ஏமாத்தாம பதில் சொல்லு".

பொன்னி லேசாக சிரித்தாள்.

"வாசல்லே யாரோ வர்ற சத்தம் கேட்குது. நீங்க படுத்துக்குங்க... பதிலை ரெண்டு நாள் பொறுத்து அம்மன் மஞ்ச நீராட்டு விழா இராத்திரி தென்னந்தோப்பில் சொல்றேன்".

பொன்னி ஓடி விட்டாள்.

(தொடரும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors