தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : கனலை எரித்த கற்பின் கனலி [பாகம் : 3]
- செல்வன்

இன்னொரு கருத்தையும் சொல்லியிருந்தேன்

"...உதாரண புருஷன் என்று சொல்லும் வாழ்வை இவர்கள் வாழவில்லை.இவர்கள் வாழ்ந்தது போல் வாழ வேண்டும் என நினைத்தால் நாம் தப்பு செய்கிறோம் என்று அர்த்தம்..."

நாம் பின்பற்ற வேண்டியது ராமனோ,கண்னனோ அல்ல.ராமனை போலவோ கண்ணனை போலவோ நம்மால் வாழவே முடியாது.அனைத்தையும் கடந்த சச்சிதானந்த பிரம்மம் ராமன்.காம,குரோத,மத,மாச்சரியம் என அனைத்தையும் கடந்து உள் நிற்கும் கடவுள் அவன்.ஆசையும்,பாசமும்,காமமும்,நிரம்பிய நாம் சச்சிதானந்த பிரம்மமாக ஆகவே முடியாது.கடவுளை போல் வாழ கடவுளால் மட்டுமே முடியும்.நம்மால் முடியாது.

கடவுள் போல் நம்மால் வாழ முடியாது என்றால் பிறகு யார் போல் வாழ முடியும்?

பக்தன் போல் வாழ முடியும்.ராமாயனத்திலும்,பாரதத்திலும் நாம் பின்பற்றி வாழ வேண்டிய உதாரணங்கள் ராமனும் கண்னனும் அல்ல.நாம் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் ராமாயணத்தில் அனுமன், மகாபாரதத்தில் அர்ச்சுனன்.

அர்ச்சுனன் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அவனுக்கு பகவான் காட்டிய பெருங்கருணையின் அளவு நமக்கு தெரியும்.அர்ச்சுனன் அந்த அளவுக்கு நல்லவன் கிடையாது.மிகுந்த பொறாமை கொண்டவன்.கர்ணன் மேலும்,ஏகலைவன் மேலும் அவனுக்கு அவ்வளவு பொறாமை.காமத்தை கட்டுப்படுத்தியவன் அல்ல அர்ச்சுனன்.ஆற்று மணலை எண்ணினாலும் எண்னலாம்,அர்ச்சுனன் மனைவியரை எண்ண முடியாது என்பார்கள்.

ஆனால் இவன் மேல் கண்ணன் காட்டும் பிரியத்துக்கு எல்லை உண்டா?இவனுக்கு தேரோட்டியாக வருகிறான்.இவனுக்கு துன்பம் நேரும்போது ஓடி வந்து காக்கிறான்.இவன் கேட்டதை எல்லாம் கொடுக்கிறான்.

கண்ணனுக்கு பிரத்யும்னன் என்ற மகன் உண்டு.ஆனால் அவனை கண்ணன் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.அர்ச்சுனன் மேல் காட்டியதில் அரை சதவிகிதம் பாசம் கூட பிரத்யும்னன் மேல் கண்ணன் காட்டுவதில்லை.பிரத்யும்னன் கடைசியில் உலக்கை அடிபட்டு கண்னன் கண்முன் சாகிறான்.கண்ணன் அதை கண்டுகொள்வதில்லை.ஆனால் அர்ச்சுனுக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்ணன் பறந்தோடி வருகிறான்.

அர்சுனனுக்காக கண்ணன் பொய் சொல்கிறான்,பித்தலாட்டம் செய்கிறான்,யுத்த தருமத்தை மீறுகிறான்,தூது போகிறான்,தேரோட்டி நிலைமைக்கு கூட போகிறான். பெற்ற மகனை கண்டுகொள்ளாத கண்ணன் அர்ச்சுனன் மேல் ஏன் இத்தனை பையித்தியமாக இருக்கிறான்?

ராமாயணத்தில் கூட இதை பார்க்கலாம்.தசரதன் ராமனின் தகப்பன்.ஆனால் அவன் மீது ராமனுக்கு பெரிய அளவில் ஒட்டுதல் கிடையாது.புத்திர சோகத்தில் திளைத்து கொடூரமான மரனத்தை தசரதன் அடைகிறான்.பெற்ற தகப்பனுக்கு வைக்காத கொள்ளியை ராமனும்,லட்சுமணனும் ஜடாயுவுக்கு வைக்கிறார்கள்.

"தர்மத்தை மீறமாட்டேன்" என்று சொல்லி தசரதனின் உயிர் போக ராமன் காரனமாகிறான். ஆனால் சர்வசாதரணமாக வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்று அதே தருமத்தை சுக்ரீவனுக்காக மீறுகிறான்.

பெற்ற தகப்பன் செத்து அன்னை விதவைகோலம் பூணும்போது அவன் அழுகிறானே தவிர பெரிதாக ஒன்றும் செய்வதில்லை.ஆனால் அவனுக்காக போரிட்டு உயிர் துறந்த ஒரு குரங்கை கூட அவன் சாக விடுவதில்லை.கடைசியில் அத்தனை குரங்குகளையும் மீண்டும் உயிர் பிழைக்க வைக்கிறான்.ஜடாயுவுக்கு அந்த வினாடியே விஷ்ணுவாக மாறி மோட்சம் அளிக்கிறான்.பெற்ற தகப்பனுக்கு செய்யாத இத்தனை காரியங்களையும் மற்றவருக்காக அவன் செய்கிறான்.

ஏன் இப்படி செய்தான்?

முன்பு சொன்னதை மறுமுறை இடுகிறேன்

இப்போது புரிகிறதா என்று பாருங்கள்.

"ராமன் நல்ல மகனல்ல,நல்ல நண்பனல்ல,நல்ல கணவனல்ல.நல்ல சகோதரனுமல்ல.நல்ல மன்னனுமல்ல,ஈடு இணையற்ற வீரனுமல்ல"

ஆனால்

"அவன் நீதியும்,நேர்மையும்,கருணையும், காருண்யமும் நிறைந்த கடவுள்"

Copyright © 2005 Tamiloviam.com - Authors