தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : கனலை எரித்த கற்பின் கனலி [பாகம் : 4]
- செல்வன்

தன்மீது பக்தி செலுத்துவோரை அவன் என்ன விலை கொடுத்தேனும் காக்கிறான்.பக்தி செலுத்ததோரை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.அது பெற்ற தகப்பனாக இருந்தாலும் சரி,சொந்த மகனாக இருந்தாலும் சரி.

சீதை விஷயமும் அப்படித்தான்.

சீதையின் துன்பங்கள் எப்போதிருந்து ஆரம்பிக்கின்றன?

ராமனை திருமணம் செய்த நாளிலிருந்து அவள் சந்தோஷமாக,இப்படி ஒரு வாழ்வு யாருக்கும் கிடையாது என சொல்லும் வாழ்வு வாழ்கிறாள்.காட்டுக்கு போகும் சூழ்நிலை வரும்போதும் "ராமன் இருக்கும் இடமே அயோத்தி" என்ப சந்தோஷமாக போகிறாள்.காட்டில் கஷ்டப்பட்டாளா என்றால் கிடையாது.மாளிகையில் முன்பு இருந்தாள்,இப்போது பர்ணசாலையில் அவ்வளவுதான்..கண்நிறைந்த காதல் கணவன் அவள் கூடவே இருக்கிறான்.சந்தோஷமாக இருக்கும் அவள் வாழ்வில் சிக்கல் எப்போது வருகிறது ?

மாயமானை கண்டு ஆசைப்பட்டாளே..அப்போது தான் பிரச்சனை வருகிறது.

ஆசை துன்பத்துக்கு காரணம் என்று படித்து படித்து கண்ணன் கீதையில் சொல்வது இதனால் தான்.

அவள் ஆசைப்பட்டது ராமனாக இருந்தவரை அவன் அவள் கூடவே இருந்தான்.எந்த வினாடி மானை பார்த்து ஆசைப்பட்டாளோ அந்த வினாடியே அவளை பிரிந்து அவன் செல்கிறான்.

கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் அவன்.

நாம் கேட்டதை அவன் கொடுத்துவிடுவான். ஆனால் அதன் பின் அதனால் வரும் சுகதுக்கங்களை அதன் பின் நாம் தான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.

அதுநாள் வரை அவனை தவிர பெரிதாக எதையும் கேட்டறியாத சீதை முதல் முதலாக மாயமானுக்கு ஆசைப்படுகிறாள்.

பக்தன் கேட்பதை அவன் என்று தராமல் இருந்திருந்தான்?

சின்ன ஆசை தான்.ஆனால் எத்தனை அனர்த்தம் அதனால் விளைகிறது என்று பாருங்கள்.

ஒரு மாயமானுக்கு ஆசைப்பட்டு எத்தனை துன்பங்களை சீதை அனுபவித்தாள்?

சின்ன ஆசை இத்தனை துராக்கிரங்களை உண்டாக்குமா என்று கேட்டால் ஆம் உண்டாக்கும்.

பூனைக்குட்டிக்கு ஆசைப்பட்டு சம்சாரியான சாமியார் கதை தான் இங்கும் நடந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors