தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : இலக்கியவாதி [பாகம் 5]
- சத்யராஜ்குமார்

பேயறைந்த மாதிரி நின்றிருந்த கந்தசாமியைப் பார்த்து, " யார் இவர்? " என்றாள் மாங்கனி.

முப்பாட்டன் புன்னகையோடு அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தான். " இவன் என்னோட ப்ரெண்ட் கந்தசாமி. இவனுக்கு தற்கால இலக்கியத்தைப் பத்தியோ, இலக்கியவாதிகளைப் பத்தியோ பரிச்சயம் இல்லை. அதான் உங்களைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டான். "

கந்தசாமியிடம் திரும்பினான். " கந்தசாமி, மாங்கனி நீ சாதாரணமா நம்ம தெருவில் பார்க்கிற பொம்பளைங்க ரகத்தைச் சேர்ந்தவங்க இல்லை. ஆணாதிக்கவாதிகளுக்கு மட்டையடி கொடுக்கிற மாதிரி எழுதறவங்க. எழுதற மாதிரி வாழ்ந்தும் காட்டுவாங்க. அவங்க கவிதைகளை நல்ல புரிதலோட நீ படிச்சின்னா பெண் சமுதாயம் பத்தின உன்னோட மதிப்பீடுகளெல்லாம் தகர்ந்து நொறுங்கிப் போயிடும். "

முப்பாட்டனின் இலக்கிய ஜார்கன்களில் அடிபட்டு, பேந்தப் பேந்த விழிப்பதைக் கேவலம் ஒரு பெண்ணின் முன்னால் எப்படிக் காண்பிப்பது என்று பிற்போக்கு இலக்கியத்தனமாய் யோசித்த கந்தசாமி, வெறுமனே மண்டையை மட்டும் எல்லாம் புரிந்த மாதிரி ஆட்டி வைத்தான்.

ஹாலுக்குள் மைக் சத்தம் கேட்கத் துவங்க, " கூட்டம் தொடங்கிட்டாங்க. வாங்க உள்ளே போலாம். " என்றாள் மாங்கனி.

தப்பித்தோம், பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டபடி, முப்பாட்டனின் பின்னால் பூனைக்குட்டி மாதிரி பதுங்கிச் சென்றான்.

ஒரு குட்டி சினிமா தியேட்டர் போல இருந்த ஹாலின் குஷன் இருக்கைகளில் ஆங்காங்கே மனிதத் தலைகள் தெரிந்தன. பின் வரிசையில் இடத்தைப் பிடித்து உட்கார்ந்தார்கள்.

பின்னாலிருந்த ஒரு கோஷ்டி, " ஹலோ மாங்கனி, இங்க வாங்களேன். " என்று கூப்பிடவே, அவள் அங்கு சென்று விட்டாள்.

மெர்க்குரி வெளிச்சத்தில் பளீரிட்ட விழா மேடையில் யாரோ யாருக்கோ சால்வை போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தையைப் போல கந்தசாமி சுற்றும் முற்றும் பார்த்தான். பெண்களைப் போல ஜடா முடி வளர்த்த ஆண்களையும், ஆண்களைப் போல க்ராப் வெட்டிக் கொண்ட பெண்களையும் ஒரு முறைக்கு இரண்டு முறை குழப்பத்தோடு பார்த்துத் தெளிந்து கொண்டிருந்தான்.

" புக் எழுதின எட்டாம் புலிகேசி யாருடா? " என்றான் கந்தசாமி.

" கறுப்புச் சட்டையோட மேடையில் மய்யமா உக்காந்திருக்காரே... அவர்தான். "

" விருமாண்டி மீசைக்காரரையா சொல்றே? "

" பேரலல் சினிமான்னு ஜல்லியடிச்சுட்டு வந்த அந்த கேவலமான படத்தை இங்க எதுக்கு இழுக்கறே? "

விருட்டென்ற அவனது அனகோண்டா சீறலை கந்தசாமி சற்றும் எதிர்பார்க்கவில்லை. கமல் மெனக்கெட்டு நடித்த ஆஸ்கார் ரேன்ஜ் படம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். எட்டாம் புலிகேசியின் மீசை அப்படி இருந்ததென்றுதானே சொல்ல வந்தான். அதற்கேன் இப்படி ஒரு கோபம்?

" அது வந்து ஒரு அடையாளத்துக்காக... "

" சரி, சரி. இனிமே அந்தப் படத்தைப் பத்திப் பேச்செடுக்காதே. இப்ப அதைப் பத்தி பேச எனக்கு நேரமில்லை. விழாவைக் கவனிக்கணும். இந்த விருமாண்டி விவாதத்தை இன்னொரு நாள் நான் வெச்சிக்கத்தான் போறேன். "

அவன் மட்டும் அந்தப் படத்தின் பேரைச் சொல்கிறானே என்று திகைத்த கந்தசாமி பேச்சை மாற்றினான்.

" எழுதறவனுக்கு அடையாளம் முக்கியம்ன்னு அப்பவே நீ சொன்னப்ப எனக்கு சரியா புரியலை. இந்த ஹாலுக்குள்ளே வந்தப்புறம்தான் புரியுது. அதோ அங்க ஒரு சிவத்த ஆள் போனி டெயிலோட உக்காந்திருக்கார். மாங்கனிக்கு சிகரட். எட்டாம் புலிகேசிக்கு விருமா... " உதட்டைக் கடித்தவன், " பெரிய மீசை. ருத்ராட்சக் கொட்டையோட காவி டிரஸ்சில் பிரேமானந்தா மாதிரிக் கூட ஒருத்தரைப் பார்த்தேன். "

இவனிடம் பைக்கில் அழைத்துப் போ என்றது பெரிய தவறு என நினைத்தபடி முப்பாட்டன் ஏதோ சொல்ல வாயெடுத்த போது, திடீரென அரங்கத்தில் பெரும் சலசலப்பு எழுந்தது.

கூலிங்கிளாஸ் சகிதமாய் சுறுசுறுப்பாய் மேடைப் படிகளில் ஏறி வரும் அந்த இளைஞர்தான் சலசலப்புக்குக் காரணம் என்பதைக் கந்தசாமியால் உணர முடிந்தது.

முப்பாட்டனின் கண்கள் சுருங்கின.

" இந்த ஆளை யாரு இங்க வரச் சொன்னது? " என்றான் கோபமாக.

(தொடரும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors