தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் [யாருக்கு வலிப்பு?]
- நல்லடியார்

வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் வஹீ அருளப்பட்ட விதத்தையும் ஆய்ந்த ஒரு சிலர், நபிகளாரின் உன்னத வாழ்க்கையையும் வஹீ அருளப்படுவதற்கு முன்னர் நபிகளார் தம் சமூகத்தில் பெற்றிருந்த நம்பகத் தன்மையையும் கருத்தில் கொண்டு, 'அவரால் குர்ஆன் எழுதப்படவில்லை அல்லது அதை எழுதுவதற்கான உள்நோக்கம் அவருக்கு இருந்ததில்லை' என ஒப்புக் கொண்ட போதிலும், 'அவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டார் அல்லது தாம் இறைச்செய்தி அனுப்பப்படும் தூதர் என்ற மனப்பிரமையில் உழன்றார்' என்ற அடிப்படையற்றக் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

வரலாற்றில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துச் செயல்பாடுகளும் ஆதாரங்களுடன் பதிந்து வைக்கப்பபட்ட ஒரு மனிதர் உண்டென்றால் அவர் முஹம்மது நபி மட்டுமே என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இவர்களின் இக்குற்றச்சாட்டை அணுகுவோம். முஹம்மது நபியின் வாழ்க்கைக் குறிப்புகளின் மூலம், நபிகளார் வாழ்ந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மனோதிடமான ஆளுமையுள்ளவராகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவராகவுமே (normal and sane life) அவர் அறியப்படுகிறார்.

மேலும் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தப் பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ ஓரியண்டலிஸ்டுகளுங்கூட 'இக்குற்றச்சாட்டில் உண்மையில்லை' என மறுக்கின்றனர். முஹம்மது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாகச் சுமத்தப்பட்ட அவதூறை மறுக்கும் பிரபல கிறிஸ்தவ ஓரியண்டலிஸ்ட் டேனியேல் சொல்வதாவது:

"Epilepsy as applied to the Prophet was the explanation of those who sought to amuse rather than to instruct" - Mohammad The Sublime Qu'ran and Orientalism p. 13.

"நபிகள் நாயகம் அவர்களுக்கு வலிப்பு நோய்  இருந்ததாகக் கூறுபவர்களது உள் நோக்கம், நபிகள் நாயகத்தைக் குறித்துச் சரியான தகவல் தருவதன்று; மாறாக, அவரை எள்ளி நகையாடுவதே".

மற்றொரு பிரபல கிறிஸ்தவ ஓரியண்டலிஸ்ட் ஜான் டேவன்போர்ட் (John Davenport) சொல்வதாவது:

"This remark that Muhammad has suffered the attacks of epilepsy is one of the false, awkward sayings of the Greeks by which they meant to stain the prestige of the propagator of a new religion, and turn the world of Christianity against his moral behavior and qualities." Udhri Taqsir, p.20

"முஹம்மது நபி வலிப்பு நோயால் அவதியுற்றார் என்பது, ஒரு புதிய மார்க்கத்தைச் சொல்பவரின் மரியாதையை மாசுமடுத்த கிரேக்கர்கள் பொய்யாகச் சுமத்திய குற்றச்சாட்டாகும். மேலும் கிறிஸ்தவ உலகை, நபியவர்களின் நடத்தைகளுக்கும் பண்புகளுக்கும் எதிராக வழி நடத்துவதுமாகும்."

முஹம்மது நபியின் மீதான வலிப்பு நோய் பற்றிய குற்றச்சாட்டுக்கு வரலாற்றில் எவ்வித முகாந்திரமும் இல்லாத போழ்து, கற்பனையாக இட்டுக் கட்டுபவர்கள், வலிப்பு நோய் பற்றிய குறைந்த பட்ச ஞானம் கூட இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரபல மருத்துவரும் இஸ்லாமிய அறிஞருமான டாக்டர். ஜாகிர் நாயக், வலிப்பு நோயின் கூறுகளையும் முஹம்மது நபியின் செயல்பாடுகளையும் ஆய்ந்து சொல்வதாவது:

வலிப்புகள் பலவகைப்படும். முக்கியமாக,

1) Grand mal = வலிப்பு அல்லது அதுபோன்ற ஒத்த தன்மையுடைய பாதிப்பு. அதாவது வலிப்பு வந்தவரைச் சுயநினைவிழக்கச் செய்து, உடல் அங்கங்களை உதறி, ஸ்தம்பிக்கச் செய்யும் இசிவு நிலை.

2) Petit mal = உடல் அங்கங்களை உதறலெடுக்கச் செய்து, தசைகளை இழுத்துக் கொண்டு கணநொடியில் தோன்றி மறைகின்ற இழுப்புடன் கூடிய இசிவு நிலை.

3) Focal Seizures = மூளையின் குறிப்பிட்ட பகுதியை பாதித்து, பிறகு அப்பகுதி கட்டுப்படுத்தும் அவையங்களைத் தாக்கும்.

4) Psychomotor = ஒரு சில நொடிகளுக்கு மட்டுமே நிகழ்கின்ற அரற்றலும், முனகலுமாக வார்த்தைகளோ சொற்றொடர்களோ இல்லா நிலை. இதில் பாதிக்கப் பட்டவர் அதீத மன அழுத்தத்தினால் எவ்வித நோக்கமுமின்றி உடைகளைக் கலைப்பது, பின் மீண்டும் சரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார். (http://en.wikipedia.org/wiki/Psychomotor_agitation)

கிராண்ட் மாலினால் பாதிக்கப்பட்டவர்கள், தமது உடல் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கப்பட்டு/ இசிவு ஏற்பட்டு, சுயநினைவிழந்து, உடல் அவையங்களை உதறியும் சில நேரங்களில் வலியினால் வீரிட்டும் அலறுவர். இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு அறிகுறியாக, பாதிக்கப்பட்டவர் தமது இயல்பு நிலையிலிருந்து விலகி, உடல் விறைத்து, மூச்சு வாங்கிக் கீழே விழுவர். இன்னோருக்கு உதறல் ஏற்படும்போது தலைவலி உண்டாவதற்கும் தன்னிலை மறந்து நாக்கைக் கடித்துக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.  இவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் சற்றுமுன் தமக்கு என்ன நடந்தது என்பதையும் அறியார்.

ஆனால், முஹம்மது நபிக்கு வஹீ அருளப்பட்டபோதெல்லாம், தன் உடல்நிலை/மனநிலை அனுபவத்தை மிகத்தெளிவாகப் பின்வருமாறு விளக்கினார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலமும் குர்ஆன் வசனங்களின் மூலமும் அறிய முடிகிறது.:

புகாரி 1:2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, "சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஒரு மனிதர் வடிவில் எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்" என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார்.

மேலும்,

''கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதைக் கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்'' என ஆயிஷா(ரலி) கூறினார்.

புகாரி 4:3 - "நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, 'போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!' (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி 'அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!' என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்'' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

குர்ஆன் 4:163 "(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (மற்ற) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக நாமே வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாமே வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்".

குர்ஆன் 42:51 "வஹீயாகவோ, திரைக்கப்பால் இருந்தோ, தான் விரும்பியதைத் தன் அனுமதியோடு வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் (நேரிடையாகப்) பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்".

முஹம்மது நபிக்கு வஹீ அருளப்பட்டச் சூழலைப் பற்றி சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புக்களை ஆய்ந்தால், மணியோசை கேட்பது போல் நபிகளார் உணர்ந்ததாகவும், ஜிப்ரயீல் நேரடியாக அவர் கண் முன்னே குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டியதாவும் அறிய முடிகிறது. இக்காரணிகளைக் கொண்டு குர்ஆன் அருளப்பட்ட சூழலில் முஹம்மது நபியின் நடவடிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமாயானால் முஹம்மது நபி கிராண்ட்மாலால் பாதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்து,

பெடிட்மாலால் (Petit mal) பாதிக்கப்பட்டவர்களில் எழுபது விழுக்காட்டினர் இருபது வயதுக்கு முன்பே பாதிக்கப்படுவர். இது கணநேர பாதிப்பே. இதனால் பாதிக்கப்பட்டவர் சுயநினைவு இழக்க மாட்டார்.  ஒரே நாளில் பலமுறை பாதிக்கப் பட்டாலும் தன்னிச்சையற்ற செயல்பாடுகள் அவருக்கு இரா. முஹம்மது நபிக்கு வஹீ அருளப்பட்ட நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால் பெடிட்மால் காரணியும் பொருந்தவில்லை.

அதெவ்வாறெனில், முதலாவதாகக் குர்ஆன் அருளப்பட்டபோது முஹம்மது நபியின் வயது நாற்பது. ஒவ்வொரு முறையும் வஹீ அருளப்பட்ட கால நீட்சியானது ஒருசில கணங்கள் அல்ல; மாறாகப் பல மணி நேரங்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் பெடிட்மால் காரணி, வஹீ அருளப்பட்ட சூழல்களுக்கு எதிராகவே இருக்கின்றது.

போகல் சீஜர் மற்றும் சைக்கோமோட்டார் பாதிப்பு என்பன வலிப்புடன் தொடர்புடையவைதாம். அவற்றால் பாதிக்கப்பட்டவர், பாதிப்பு ஏற்பட்ட மிகச்சற்று நேரத்தில் வீரிட்டு அலறி, பேசமுடியாமல் வார்த்தை தடுமாறுவர்.

குர்ஆன் முழுவதிலும் சொல்லப்பட்ட வார்த்தைகளை ஆய்ந்தால் மிகத்தெளிவாகவும், இலக்கிய தோரணையிலும், அழகிய உவமானங்களுடனும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கருத்துக்களுடன் உயர்ந்த சொல்வன்மையுடன் அவை சொல்லப்பட்டுள்ளன.

ஆக இந்த நான்கு காரணிகளும் முஹம்மது நபிக்கு வலிப்பு இருந்தது என்ற அவதூறைத் துடைத்தெறியும் மருத்துவ ரீதியான, மறுக்க முடியாத காரணங்களாகும்.

வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டவர்கள், அதிலிருந்து மீளும்போது சற்று முன் நடந்தவைகளை மறந்த நிலையில் இருப்பர். ஆனால் வஹீ அருளப்பட்டப்பின் தனக்கு அறிவிக்கப்பட்டதை மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் மனநிலையிலேயே நபிகளார் இருந்திருக்கிறார். இது வலிப்பு நோயுற்றவரின் மனநிலைக்கு முற்றிலும் மாறானாதாகும்.

இவையன்றி, தனைமறந்த நிலையில் சொல்லப்பட்டவற்றை எப்படி முஹம்மதால் திரும்ப சொல்ல முடிந்திருக்கும்? இந்தக் கேள்வியை நியாயமாக வஹி அருளப்பட்டதை நம்பிய அல்லது நம்பாமல் கேலி செய்த அன்றைய அரபிகளுள் எவராவது நிச்சயம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் வஹீ அருளப்பட்ட விதத்தை அறிந்தவர்களில் இக்கேள்வியை யாரும் கேட்டதாக ஒரேயொரு செய்தியைக்கூட வரலாற்றிலிருந்து அறியமுடியவில்லை.

மேலும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் பாரசீகமும் ரோமப் பேரரசும் வெல்லப்படும் வரலாற்று உண்மைகளையும், மனிதக் கருவின் படிநிலைகள், வானவியல் தத்துவங்கள், கடலியல் அற்புதங்கள் போன்ற அறிவியல் உண்மைகளையும் சொல்ல முடியுமா என டாக்டர்.கோயன்ராடு விளக்குவாரா? ஆகவே, 'முஹம்மது நபி வலிப்பு நோயால் அவதிப்படிருந்தார்' என்று சொல்வதை மருத்துவ ஞானம் உள்ள எவரும் கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்க முடியும்.

முஹம்மது நபிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட இட்டுக்கட்டல்களைப் பற்றி நார்மன் டேனியல் (Norman Daniel) அவர்கள் சொல்லும்போது,

"All writers tended - more or less - to cling to fantastic tales about Islam and its Prophet... The use of false evidence to attack Islam was all but universal." Norman Daniel, Islam and the West, One world Publications 1993, p.267

"மேற்கத்திய எழுத்தாளர்களின் நோக்கமானது, மிகையாகவோ அல்லது குறைவாகவோ இஸ்லாத்தைப்பற்றியும் முஹம்மது நபியைப்பற்றியும் ஆதாரமற்ற கற்பனையான உலகளாவியக் கட்டுக்கதைகளே (Tales)" என்கிறார்.

Daniel also goes on to explain: "At the worst there was the assertion of the fantastic, and its repetition without discrimination; at the best there was the selection of only those facts that served the purpose of controversy." ibid, p.268

மேலும் "அவ்வாறு வலிந்து திணிக்கப்பட்ட கற்பனைகள் படுமோசமான, சாதக பாதகங்களை அலசாமல் திரும்ப திரும்ப ஒப்புவிக்கப்பட்டவையே. அவை, வாக்குவாதத்திற்காக உள்நோக்குடன் தேடிப்பிடிக்கப் பட்ட மிகச்சில நிகழ்வுகள்" என்று விளக்கமும் கூறுகிறார்.

மேலும் வலிப்புக்கான காரணம், நோயின் அறிகுறி அல்ல. ஒன்றோடொன்று தொடர்புடைய அறிகுறிகளின் தொகுப்பு. நியூரான்கள் எனப்படும் மூளைக்கு மின் உணர்வுகளை அனுப்பும் நரம்பில் ஏற்படும் உபரியான மின்சக்தியால் ஏற்பட்ட தவறான செயல்பாட்டின் (Malfunction) தூண்டலால் ஏற்படும் சுயநினைவிழப்பைச் சரிசெய்ய ஏற்படும் உதறலே வலிப்பு.

மூளை நரம்பின் இந்த அசாதாரண நிலைக்குத் தனியொரு காரணம் இல்லை. மேலும் ஐம்பது விழுக்காடு வலிப்பு நோயாளிகளின் நோய்க்காரணியை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அவை பிறப்பின் போதான அல்லது பிறகு ஏற்பட்ட காயங்கள், பிறப்பிலிருந்து இருக்கும் குறைபாடுகள் (e.g. Cerebral Palsy), மூளையையும் தண்டுவடத்தையும் பாதித்து (Meningitis) நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய வியாதி, மன அழுத்தம் போன்றவை.

ஆனால் முஹம்மது நபியவர்களோ மனரீதியிலும் உடல் ரீதியிலும் சிறந்து விளங்கியதாகவே வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. மிகுந்த மன அழுத்தமுள்ள சந்தர்ப்பங்களிலும் கூட மனோவலிமையுடனும் திண்மையான மனநிலையிலேயே நபிகளார் இருந்திருக்கிறார்.

நபியவர்களின் வாழ்வு நிகழ்வுகளை நடுநிலையோடு அணுகும் ஒருவரால், நபியவர்களின் மீது சுமத்தப் பட்ட உலகாதாயம், அதிகார வெறி, அரபிகளை மட்டுமே ஒன்றிணைத்தல், வலிப்பு நோயால் அவதி போன்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாமே  தவறானவை என ஒதுக்கித் தள்ளப் படும் என்பதில் ஐயமில்லை

ஆக, டாக்டர். கோயன்ராடின் ஆய்வில் முன்வைக்கப்பட்ட மன நோய்க்கான காரணிகள், வலிப்பு மற்றும் உளவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் முஹம்மது நபியின் மீதான, முஸ்லிம்களின் மீதான, இஸ்லாத்தின் மீதான புரையோடிப்போன காழ்ப்புணர்வின் வெளிப்பாடே என்பது வெள்ளிடை மலை என்பதை இத்தொடரில் அலசப்பட்ட அறிவியல், உளவியல், சமூக காரணங்களின் மூலம் தெளிவு படுத்திவிட்டேன்.

டாக்டர். கோயன் ராடின் பின்புலத்தில் இருக்கும் இந்துத்துவா வாதிகளின் தொடர்பும், நேசகுமாரின் முஸ்லிம்கள் மீதான, முஹம்மது நபி மீதான காழ்ப்புணர்வுக்குக் காரணம் பற்றியும் இங்கு ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவற்றையும் பார்ப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors