தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : இலக்கியவாதி [பாகம் 8]
- சத்யராஜ்குமார்

மீண்டும் அந்த பொதுக் கழிப்பறையில் பைக்கை நிறுத்தி உடை மாற்றிக் கொண்டு முரளியானான் முப்பாட்டன்.

சினிமாவில் காட்டும் அம்னீஷியா மாதிரி எல்லாமே மறந்து போய் டிபிகல் முரளியாய்க் கெஞ்சினான்.

" டேய் கந்தசாமி, தயவு செஞ்சு நடந்த விஷயம் எதையும் நம்ம தெருவில் மூச்சு விட்டுராதே. அப்ஸூக்கு தெரிஞ்சதுன்னா பின்னி பெடலெடுத்துருவாரு. "

" சொல்ல மாட்டேண்டா. ஆனா அந்த டிரஸ் போட்டதும் நீ ஏன் அருள் வந்த மாதிரி சாமியாடறேன்னு எனக்குப் புரியலை. "

" ப்ளீஸ்... அதைப் பத்தியெல்லாம் இப்ப பேச வேண்டாம். " என்று கந்தசாமியின் இலக்கிய சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.

oo00oo

மறுநாள் வழக்கம் போல மொட்டை மாடியில் தீவிரமாய் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது - அந்த அதிசயம் நடந்தது.

" கந்தசாமி... "

மெல்லிய குரல் கேட்டது.

பெண் குரல்.

சுற்றும் முற்றும் பார்த்தான்.

" கந்தசாமி, இங்கே! இங்கே பாரு. "

பின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ரமா.

ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான்.

வலியப் போய் பேச முற்பட்டாலும், நழுவிப் போய் விடும் ரமாவா கூப்பிடுகிறாள்.

" கந்தசாமி, எக்சர்சைஸ் பண்ணி முடிச்சிட்டு பின்கட்டு சுவருக்கு வாயேன். உன் கிட்ட கொஞ்சம் பேசணும். "

தோ, இப்பவே வரேன் என்று சொல்லலாம் போல மனசு ஒரு துள்ளு துள்ளியது. அடக்கிக் கொண்டான். வீரம் என்பது பயமில்லாததைப் போல நடிப்பது என்று கமல்ஹாசன் குருதிப் புனலில் சொன்னதைப் போல, பெண்களிடம் கம்பீரமாய் இருப்பது என்பது வழியாததைப் போல காட்டிக் கொள்வது என மனசுக்குள் ஒரு எண்ணம் புரண்டது.

சே, ஒரே நாளில் எப்படி இத்தனை இலக்கியத்தனமாய் யோசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று கொஞ்சம் திடுக்கிட்டான்.

" கந்தசாமி, வருவே இல்லே? "

மீண்டும் ரமா கேட்டதும்தான் அவளுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை என்பது உறைத்தது.

" வரேன். "

உடற்பயிற்சியை நிறுத்தாமல் லேசாய்த் தலையை மட்டும் ஆட்டி பதில் சொன்னான்.

பயிற்சி முடிந்த பின், அவசர அவசரமாய்க் குளித்து விட்டு, ரமாவுக்கு படிய வாரிய தலை பிடிக்குமா இல்லை ஸ்டைலாக துவட்டிக் கொண்டே பேசினால் பிடிக்குமா... சென்ட் போட்டுக் கொண்டு போய் நிற்போமா இல்லை வெறும் சோப் வாசனையே போதுமா என்கிற மாதிரி சில பட்டி மன்றத் தலைப்புகளின் கீழ் யோசித்து, மூளையைப் பலமாய்க் குழப்பிக் கொண்ட பின் - ஒரு வழியாய் பின் கட்டுச் சுவருக்குப் போய் எட்டிப் பார்த்தான்.

ஏதோ ஒரு பாடப் புத்தகத்தின் இடுக்கில் ஆட்காட்டி விரலை நுழைத்துக் கொண்டு அவள் வீட்டு கொல்லைப் புறத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ரமா.

" ரமா... "

கந்தசாமி கூப்பிட்டதும், ஒரு சின்ன சிரிப்புடன் சுவரை நோக்கி வந்தாள். கந்தசாமிக்கு உச்சி முதல் பாதம் வரை என்னவோ ஒரு சிலிர்ப்பு மின்னல் மாதிரி ஓடிற்று.

அவளுடைய சிரிப்பிலிருந்த சிநேகத்தை இத்தனை நாளில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. அண்ணாச்சி கடையில் அவள் முட்டை வாங்கிக் கொண்டிருந்த போது, ' டைம் எத்தனை ? ' என்று கூட பேசி்ப் பார்த்திருக்கிறான். ' ம்? என் வாட்ச் ரிப்பேர் ! ' என்று கடுகடுவென்றுதான் பதில் சொல்லி விட்டுப் போயிருக்கிறாள்.

சுவரின் மேல் கைகளைப் படர்த்தி, மோவாயைக் கையின் மேல் தாங்கிக் கொண்டு, " கந்தசாமி, நீ மாடு மாதிரி எக்சர்சைஸ் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சிட்டிருந்தேன். உனக்கு இலக்கியத்தில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இருக்கா? "

நேற்று உஷா குரங்கு என்று சொன்ன போது பின் மண்டையில் விழுந்த அந்த ணங்-கின் வீரியத்துக்கு சற்றும் குறையாமல் இன்னொரு ணங் இப்போது ரமா மாடு என்ற போது விழுந்தது.

" ரமா, எ.. என்ன திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி? "

" இன்ட்டர்நெட்ல உன்னோட போட்டோ பார்த்தேன். உன் கூட வெள்ளை ஜிப்பா போட்டு ஓட்டைக் கண்ணாடியோட நிக்கறது முரளியா? " என்றாள்.

(தொடரும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors