தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் [::முடிவுரை ::]
- நல்லடியார்

வாசக நண்பர்களே,

இதுவரை வஹீ (வேத வெளிப்பாடு) மனநோயின் அறிகுறி என்ற காழ்ப்புணர்வு கலந்த இறக்குமதி செய்யப்பட்டக் குற்றச்சாட்டை குர்ஆன், ஹதீஸ் மூலமும், சமூக, வரலாற்று, அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவக்குறிப்புகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆதாரங்களுடன் வைக்கப்பட்ட இம்மறுப்புத்தொடரைப் பார்த்தோம்.

பின்னூட்டங்கள் என்ற பெயரில் வெவ்வேறு புனைப்பெயரில் தேவையற்ற திசை திருப்பல்கள், தனி மனித துவேசம், ஏளனம் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகள் சொல்லப்பட்ட போதிலும், மிகுந்த பணிகளுக்கிடையிலும் என்னால் முடிந்தவரை அந்தந்த தொடரில் விளக்கியும் தேவைப்பட்டால் மறுத்தும் உள்ளேன். நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனல்ல. நானும் இவ்வகையானப் பின்னூட்ட எதிர்வினைகளில் சில இடங்களில் நிதானம் தவறியுள்ளேன் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், இத்தொடரின் அவசியம் ஏன் என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


உலகின் பெரும்பாலான மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கையை அம்மதம் சாராத மற்றும் அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட மதத்தின் பிரதிநியாகத் தன்னைக் கருதும் ஒருவரின் அறியாமையும் காழ்ப்பும் கலந்த அவதூற்றை தமிழ் வாசகர்களுக்கு தெளிவு படுத்துவதே இத்தொடரின் நோக்கம்.

நம் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுடன் இதுவும் ஒன்று எனச்சென்றிருந்தால், நல்லடியார் என்ற நபரே அறியப்படாமல் எங்கோ ஒரு இணைய தளத்தில் அளவளாவிக் கொண்டிருக்கும் கோடி பேரில் நானும் ஒருவனாகவே இருந்திருப்பேன். எனினும், எத்தனையோ தமிழ் முஸ்லிம்கள், இதனைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற வசவுகளாலும் அவதூறுகளாலும் இஸ்லாம் வீறு கொண்டு வளர்ந்து வரவே செய்யும் போது, 'அரைகுறை ஞானிகளும் அமானுடக் கேள்விகளும்' என்ற ஒன்பது வாரத் தொடர் அவசியமா? எனக் கேட்கலாம்.

முஹம்மது என்ற தனிமனிதரை அல்லாஹ் தன் அடியார்களுக்கு போதனை செய்யும் கடைசித்தூதுவராக தேர்ந்தெடுத்து, சோதனைகளிலும் துயரங்களிலும் பங்கெடுக்க வைத்து தனக்கு அறிவிக்கப்பட்டபடி ஓரிறையை நம்பிக்கை கொண்டு 1400 வருடங்களாக இன்று உலகின் 160 கோடிக்கும் அதிகமான நம்பிக்கையாளர்களைக் கொண்டும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் வேகமாக வளர்ந்தும், இஸ்லாம் அல்லாத நடுநிலையானவர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதமாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் எடுத்தியம்பிய மார்க்கத்தை,பொருந்தாக் காரணம் கொண்டு குற்றம் சாட்டும் தனிநபரின் அல்லது சிறு குழுவின் நோக்கம் என்னவாக இருக்கும்?

இந்து மதத்தை தன் பிடியில் வைத்து, ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்குப் பின் இந்து மதச் சகோதரர்களிடம் அவர்களின் மதத்தின் மீதான பிடிப்பு நழுவுகிறதோ என்ற ஐயத்தில் உழலும் தீவிர(இந்துத்துவா)வாதிகளின் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் இது போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தேடிப்பிடித்து மொழி பெயர்த்துப் பகை வளர்ப்பது. சகோதரர்களாக, அண்டை வீட்டுக்காரர்களாக, சக ஊழியர்களாக, நண்பர்களாகப் பழகி வரும் நம்மிடையே தேவையற்ற கசப்புணர்வை வளர்ப்பதன் மூலம் இந்துத்துவம் நிலைநாட்டப்படும் என்று தவறாக நம்பும் பிறழ்-நம்பிக்கையாளர்களுள் ஒருவர்தான் 'அமானுட' நேசகுமார்.

நாகூர் ரூமி அவர்கள் இஸ்லாத்தை தமிழ் இணைய குழுமங்களில் அறிமுகப்படுத்தியதை சகிக்க முடியாமல், மதத் தீவிரவாதங்களை எதிர்க்கும் பொதுவான சமூக ஆர்வலராக அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் எழுத்துத் திறமையால்(?) தன்னை முற்போக்கு இந்துத்துவவாதியாக பல்வேறு பதிவுகளிலும் நிரூபித்து நிலைதடுமாறிய பின்னூட்டங்களிலும் காண முடிந்தது.

உலகில் எத்தனையோ விசயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் இருக்கும்போது, குர்ஆனை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்த மக்களுக்கும், பிற்காலத்தில் அதனை தங்கள் வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கொண்டுள்ள மக்களுக்கும் இல்லாத அவநம்பிக்கையும் சந்தேகமும் ஒரு தனிநபருக்கு மட்டும் வந்தது ஏன்? சமூகப் பொறுப்பா? சமத்துவ ஈடேற்றமா? துவேஷமா? அல்லது தன் நம்பிக்கைக்கு சாவு மணி அடிக்கும் ஒரு கொள்கை என்ற தேவையற்ற காழ்ப்புணர்வா? ஆம்! காழ்ப்புணர்வு கலந்த அவநம்பிக்கைதான் இத்தகைய அமானுடக் கேள்விகளின் ஊற்றுக்கண்!!

இப்படி இன்னொருவரின் ஆன்மீக நம்பிக்கையை தனக்கு தோதான காரணங்களை தேடிப்பிடித்து ஒப்பிட்டு நோக்கும் அவநம்பிக்கையை ஒரு மனநலக் குறைபாடா என்றால் அதனை முழுவதுமாக மறுக்க இயலாது. அதே வேளை, இதனை மனநோய் என்றும் வரையறுக்க இயலாது.

இப்படிப்பட்ட மனநிலைக்கு உள்ளானவர், மற்றவரை எதிரியாகப் பார்ப்பது மட்டுமின்றி, விவாதக் களத்தில் இறங்கி விவாதத்தைத் திசைதிருப்பவும் செய்கிறார். இந்த அவநம்பிக்கை கேடு விளைவிக்கக்கூடியதா என்றால் அதற்குப் பதில் ஆம் என்பதாகவே இருப்பதால் அதனைப்பற்றிய ஒரு சிறு அலசலை இங்குப் பார்ப்போம்.

ஒருவருக்கு அவநம்பிக்கை தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய சொந்த அனுபவங்களே. இவ்வாறு ஒருமுறை அவநம்பிக்கை என்னும் இந்நிலைக்கு ஆளானவர், தாம் அவநம்பிக்கை கொண்டுள்ள நபரின் அல்லது கொள்கையின் நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, எங்கே குறை காணலாம் என்கிற ஒரே நோக்கில் தான் செயல்படுவார். அதே வேளை இவர் அவநம்பிக்கை கொண்டுள்ளவர் செய்யும் நல்லெண்ண முயற்சிகள் கூட இவரின் அவநம்பிக்கையை அதிகரிக்குமே தவிர குறைப்பதில்லை.

எனவே அவநம்பிக்கை கொண்டுள்ளவர், தன் கருத்தைச் சரியென நிறுவ எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார். 

அவநம்பிக்கைக்கு அடிமையானவர் முதலில் தம் எதிராளியின் மீது கருத்து வேற்றுமையை வலிந்து உண்டாக்குவார். இதனால் சுமுக உறவு பாதிக்கப்படும். பின்னர் கருத்து வேற்றுமையைத் தகராறாக்க (conflict) முயல்வார். அதனால், இவரது அவநம்பிக்கைக்கு உள்ளானவர், ஒரு கட்டத்திற்கு மேல் எதிர் நடவடிக்கை (retaliation) எடுக்கும் அளவிற்குத் தள்ளப் படுவார்.

அவநம்பிக்கைகளைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

(1) முன்னெச்சரிக்கை கலந்த அவநம்பிக்கை:

இதற்கு உதாரணமாக, சாலையைக் கடக்கும் ஒருவர் தூரத்தில் வரும் வாகனம் தன் மேல் மோதிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் விரைந்து சாலையைக் கடக்கும் மனநிலையை இதற்கு ஒப்பிடலாம்.

இது நம்மில் எல்லோருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் பொதுவான மனப்பாங்கு. இதனால் தன் நலம் மேலோங்கி இருக்கும் அதே சமயம் பிறருக்கு தீங்கு செய்யும் நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

(2) அதீத அவநம்பிக்கைகள்:

இந்த அவநம்பிக்கைகள் மிகச்சிறிய அளவிற்கே இருக்கும் போது நன்மை பயப்பனவாக உள்ளன. அதாவது இதன் மூலம் நாம் நமக்குச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டு பிறரைப் பாதிக்காவண்ணம் செயல்படுவது.

இதற்கு உதாரணமாக நெருப்புச்சுவர்களைக் (firewall) குறிப்பிடலாம். எப்போது இந்த எல்லைகளைக் கடந்து அவநம்பிக்கை செல்கிறதோ அதனால் தீமைகள் விளைய பெருமளவில் வாய்ப்புள்ளது. இது ஒரு நிலைக்கு மேல், பேரச்சமாக (paranoid) உருவெடுத்து அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய மனநலனைப் பாதிக்கும். இந்நிலைக்கு ஆளானவர் தன் சக்தியை, தான் அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய செயல்களைத் தீயனவாக உருவகப் படுத்தப் பெரும் பாடுபட்டுத் தன் முழு ஆற்றலையும் நேரத்தையும் செலவழிப்பார்.
 

அவநம்பிக்கையால் பாதிக்கப்பட்ட எவருக்கும் அதை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவே.

இதனை எவ்வாறு கண்டறிவது? ஒருசில வழிமுறைகள் உள்ளன: 

அ) அடுத்தவர் எதைச் செய்தாலும் அதன் மீது சந்தேகம் (suspicion) கொள்வது

ஆ) ஒத்துழைப்பை, ஒருவருக்கொருவர் அல்லது ஒன்றுக்கொன்று சார்புடைமையை (interdependence) பலகாலமாகத் தொடர்ந்து மறுதலித்தல் (chronic denial).

இ) அடுத்தவர் செயல்களைத் தேவையின்றி மிக நுணுக்கமாகக் கண்காணித்தல் (microscopic monitoring)

ஈ) ஒரு பேச்சுக்குக் கூட நன்மைதரும் ஒத்துழைப்பு (constructive cooperation) நல்க மறுத்தல்

உ) அடுத்தவர் செயல்களைப் பொதுமைப் படுத்தி (generalize) தன் கருத்தை மட்டுமே சரியென நிறுவப் பாடுபடல்

அதீத அவநம்பிக்கையின் தாக்கத்தால் பாதிக்கப் பட்டிருப்பவர், தனது நிலையை விட்டுச் சற்றேவிலகி, யார் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளாரோ அவருடைய இடத்தில் தன்னை இருத்தி, நிலைகளைச் சீர் தூக்கிப் பார்க்கவேண்டும். இதுவே அவநம்பிக்கை குறைந்து, மனநலம் சிறக்க சிறந்த வழியாகும். எல்லாத் தீவிரவாதங்களுக்கும் இஸ்லாமியக் கொள்கைகளே காரணம் என்று நம்பும் திரு.நேசகுமாரிடம் மேற்கண்ட உளவியல் காரணங்கள் மொழி பெயர்ப்புத்தொடரிலும், அடுத்தடுத்த வலைப்பூ கட்டுரைகளிலும்,பின்னூட்டங்களிலும் பிரதிபலித்தன.


தனது கட்டுரையில் இஸ்லாத்தின் அடிப்படையை மேற்கத்திய அறிஞர்களின் போர்வையில் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை ஆட்டம் காண வைக்கலாம் என்ற நப்பாசையில் முஸ்லிம்கள் மற்றும் முஹம்மது நபி மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்திவரும் திரு.நேசகுமாருக்குச் சில கேள்விகளை

முன்வைத்து விளக்கம் பெற விரும்புகிறேன்:

1) சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் அறியப்பட்ட முரண்பாடுகள், அதாவது திருக் குர்ஆனில் உள்ள முரண்பாடுகள், பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்கள் என்னவென்று எழுத முடியுமா? அல்லது சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற பெரியவர்களின் பெயர்களில் எதையாவது எழுதினால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் தனது சொந்தக் கருத்தை எழுதினாரா? 

2) சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் அரிய கண்டுபிடிப்பில் முரண்பாடுகள் எவையேனும் இருந்தால் அதற்கு பதில் எழுதும் தகுதியும், திறமையும் பல முஸ்லிம்களுக்கு இருக்கின்றன. ஆகவே சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் அறியப்பட்ட முரண்பாடுகளை இங்கே எழுத வேண்டுகிறேன். இல்லையென்றால் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

3) சரியான பயிற்சி இல்லையென்றால் இப்படித்தான் பல பிரச்சனைகள் உருவாகும். நபிகள் நாயகத்திற்குச் சரியான பயிற்சி இல்லை என்பது பல யோகிகளின் கருத்து என்றுஎழுதியிருந்தார். நபிகள் நாயகத்தின் கருத்துக்களை உரசிப் பார்த்த இந்து மதயோகிகள் யார் யார்? 

4) யோகிகள் என்றால் என்ன பயிற்சிகள் வேண்டும்? அதில் எத்தனை படிகள் உள்ளன? இவையனைத்தையும் ஒழுங்காக முடித்தால் இவர் "இந்த யோகி" என்று எந்தப் பல்கலைகழகத்தில் அல்லது குரு குலத்தில் யோகிகளுக்கான குணாதிசயங்களையும், கல்வித் தகுதிகளையும் வரையறுத்தனர்? எந்த யோகி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையும் கருத்துக்களையும் உரசிப்பார்க்கும் தகுதி பெற்றுள்ளார்? எதை வைத்து என்றும் திரு.நேசகுமார் ஆதாரங்களுடன் விளக்குவாரா?

5) யோகிகளைப் பற்றியும் அவர்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களைப் பற்றியும், யோகிகள் வழிவந்த தற்கால சாமியார்களின் செயல்களின் விளவுகளைப் பற்றியும் எழுதினால் அதற்கான உளவியல் காரணங்களை விளக்க முடியுமா?
 
6) இஸ்லாம்தான் உலகத் தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் காரணம் என்று "வன் உரையை, எழுத்து தீவிரவாதத்தை" கட்டவிழ்த்து விட்டிருக்கும் அன்பரே, பின்வரும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் எதுவாக இருந்தது, யார் இதற்கெல்லாம் காரணம் என்று விளக்கம் தரமுடியுமா?


அ) ஈராக் யுத்தத்தில் இதுவரை 25000 மேற்பட்ட அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று மரணம் அடைந்துள்ளனர். புஷ்ஷின் கொள்கைகளுக்காக 2000க்கு மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் ஈராக் மக்கள் மேல் புனிதப் போர்? செய்துள்ளனர். இதன் அடிப்படைக் காரணம் என்ன? இஸ்லாமா? ஜனநாயகமா? எரிபொருளா? சதாம் ஹுசைனா? (விளக்கம் சொல்வாரா?)
 
ஆ) 2000த்திற்கு மேற்பட்ட முஸ்லீம்கள் குஜராத்தில் இந்துத் தீவிரவாதிகளால் இனப் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக முன்னால் பிரதமர், ஜனாதிபதி உட்பட உண்மையான இந்தியர்கள் தலை குனிந்து நின்றனர். அஹிம்சையை போதித்த காந்தியடிகள் பிறந்த மண்ணில் இப்படி ஒரு இனச்சுத்திகரிப்பா? என உலகமே அதிர்ந்ததே! இதற்குக் காரணாமாயிருந்த பரிவாரக் கூட்டங்களுக்கு அடிப்படையாக இருந்தக் கொள்கை என்ன? இத்தீவிரவாதத்திற்கு வித்திட்டது யார்?
 
இ) பாபர் மசூதி தரைமட்டாமாக்கப்பட்டு மும்பையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள், பெண்கள்,குழந்தைகள், இந்துத் தீவிரவாதிகளால் படுகொலைச் செய்யப்பட்டனர். இந்துத் தீவிரவாதிகளுக்கு அடிப்படையாக இருந்த கொள்கைகள் யாவை?

ஈ) அப்பாவி முஸ்லிம் பெண்களை நிர்வாணப்படுத்தி, தெருத் தெருவாக நடத்திச் சென்று கடைசியில் கற்பழித்துக் கொன்று அத்துடன் நில்லாமல் அந்த ஊர்வலத்தை வீடியோ படம் எடுத்த சூரத் நகர இந்துத் தீவிரவாதிகளுக்கு தீனி போட்ட அந்தக் கொள்கைகள் எங்கிருந்து பெறப்பட்டன? மொழிபெயர்ப்பாளர் பதில் சொல்வாரா?

உ) பக்கத்து நாடான இலங்கையில் இதுவரை 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணாமாயிருந்த கொள்கைகள் என்ன அன்பரே? இஸ்லாமா?

ஊ) வியாட்நாமில் லட்சோப லட்ச மக்கள் கொல்லப்பட்டு வெறும் மண்டையோடுகள் மட்டும் கூடாரம் கூடாராமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் காரணாமாயிருந்தது இஸ்லாமா?

எ) போஸ்னியாவிலும், குரோஷியாலும், கொசோவாவிலும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுவரை தோண்டி எலும்புகள் எடுக்கப்பட்டு வருகிறதே, இதற்கெல்லாம் காரணாமயிருந்த அடிப்படைக் கொள்கைகள் யாவை?
 
ஏ) 1984ல் 2700க்கு மேற்பட்ட சீக்கியர்களை டெல்லித் தெருக்களில் ஓட ஓட விரட்டி, கொன்று தீர்த்தனரே. அதற்கெல்லாம் காரணாமாயிருந்த கொள்கைகள் யாவை?
 
சகோதரரே, மனம் பிறழ்ந்து கண்டதையும், கேட்டதையும் எழுதி தனது புளுத்துப் போன சிந்தனைகளுக்கு உரம் தேடும் நீங்கள்தான் சரியான பயிற்சி இல்லாமல் சிந்தித்தும் எழுதியும் வருகிறீர்கள். மனித குலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை மதம் அல்லாத காரணங்களுக்காகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் என்னால் எழுத முடியும். அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பதில் தர முடியுமா?

மொழிபெயர்ப்பாளர் துவக்கத்திலிருந்தே, தன்னை நடுநிலையாளராகக் காட்டிக்கொள்ள முயன்றும் அவ்வப்போது தோற்றுவிடுகிறார். பொங்கிவரும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை அவரால் அடக்க முடியாமையே இதற்குக் காரணமாகும். இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் அவருக்குக் கொம்பு சீவி விடுவதுதன் மூலம் தங்களின் உண்மையான முகங்களை வெளிக்காட்டி வருகிறார்கள். தமிழகத்தை இன்னொரு குஜராத் ஆக்கத்துடிக்கும் இந்துத்துவாவின் பன்முகங்களில் இது ஒரு முகமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படி இருந்தாலும் இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே எழுந்துவரும் எதிர்ப்பலைகளைக் கணக்கிட்டால் இது ஒரு சுண்டைக்காய் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி முடிக்கிறேன்.


சுயகுறிப்பு :

நான் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பெரும்புலமை பெற்றவன் அல்லன். இத்தொடருக்குத் தேவையான தகவல்களை குர்ஆன், ஹதீஸ் மற்றும் நம்பகமான இணைய தளங்களிலும், என் பார்வையில் பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலும், புத்தகக் குறிப்புகளிலிலுமிருந்து எடுத்துள்ளேன். இத்தொடர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தேவையான அளவுக்கு பதிலளித்து விட்டேன் என நம்புகிறேன். மேற்கொண்டு விளக்கங்கள் தேவைப்பட்டால் பின்னூட்டம் வைக்கலாம் அல்லது எனக்கு மடலிடுங்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நிச்சயம் பதிலளிப்பேன். (இன்ஷா அல்லாஹ்).

இத்தொடரின் சில பின்னூட்டங்களில் விவாதிக்கப்பட்ட இதர விசயங்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூற்றை என்னால் முடிந்தவரை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்துள்ளேன் என்ற மனநிறைவோடு இத்தொடரை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.

பிரபல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தமிழிணைய வாசகர்களுக்கு வழங்கி வரும் தமிழோவியத்தில் அடியேனின் எளிய கருத்துக்களை சுதந்திரமாக எடுத்து வாசகர்களுக்கு முன் வைப்பதற்கு வழி திறந்து வய்ய்ப்பு தந்ததற்கும், முகம்மது நபியின் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லும் முகமாக எனது மறுப்புரையைத் தொடராக வெளியிட ஒப்புக் கொண்டதற்கும், தமிழோவியம் திரு.கணேஷ் சந்திரா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

நடுநிலையாக பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர்களுக்கும், இஸ்லாம் குறித்து மேலதிக பின்னூட்டங்களை வழங்கியவர்களுக்கும், மாற்றார் தோட்டத்து மல்லிகை வாசமாக மணத்த இதர பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கும், மேலதிக விளக்கங்கள் கொடுக்க எனக்கு வாய்ப்பளித்து, என்னைத் தட்டியும் தட்டிக் கொடுத்தும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசகர்களுக்கும் என் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு! நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ன்றும் உண்டாவதாக!

Copyright © 2005 Tamiloviam.com - Authors