Tamiloviam
ஆகஸ்ட் 26 2004
தராசு
வேர்கள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
வானவில்
திரையோவியம்
சிறுகதை
கட்டுரை
கோடம்பாக்கம்
பேட்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : அல்பேனியாவைத் தேடி - 2
- கௌரி ராம்நாராயண்
| Printable version |  

வலையில் அல்பேனிய கவிதைகளைப் படித்தபின் நிஜ அல்பேனியாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இதோ சுருக்கமாக அந்தத் தகவல்கள் :

அல்பேனியாவின் பூர்வீகம் பற்றி இன்னும் சரித்திரம் திட்டவட்டமாக முடிவு கட்டவில்லை. தென்கிழக்கு ஐரோப்பாவின் மிகத் தொன்மையான இனத்தவர் இவர்களே என்பதில் ஐயமில்லை. ஆனால் எப்பொழுது, எங்கிருந்து பால்கன் (Balkon) தீபகர்ப்பத்திற்கு வந்து சேர்ந்தார்கள்?

அல்பேனியர் ஆரிய வம்சத்தின் இல்லிரிய (Illiria) இணையைச் சேர்ந்தவர்கள். ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாவது இரவு நினைவிருக்கிறதா? அதில் மூழ்கிய கப்பலிலிருந்து தப்பி எதோ திசை தெரியாத கரையில் வந்து விழுந்த நாயகி வியோலா (Viola) "இது என்ன நாடு?" என்று கேட்கிறாள். "இது இல்லிரியா அம்மணி!" என்று பதில் வருகிறதே, அந்த இல்லிரியாதான் இன்றைய அல்பேனியா. (ஆனால் நாடக இல்லிரியா கவியின் கற்பனைக் கணமே. ஷேக்ஸ்பியர்தான் தன் "தாய் தீவை" விட்டு வெளியே கால் வைக்கவே இல்லையே.

நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டதாக இறுமாப்பு கொண்ட யவனர்கள், அல்பேனியரை காட்டுமிராண்டிகள் என்று கருதினார்கள். அப்படியானால் யவன தெய்வங்களும் காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேணும். ஏனென்றால் யவனர்களின் யர்வேசுவரனாகிய ஸ்யூஸ் (Zeus, அல்பேனியர் இவரை Zot என்பர்) புண்ணியஸ்தலமாக (Oracle) கொண்ட டோடோனா (Dodona) அல்பேனியாவில் உள்ளது. மேலும் அல்பேனியாவின் வானைமுட்டும் சிகரங்களில்தான் கிரேக்க தெய்வங்கள் வசித்திருக்க வேண்டும்.

ஒரு சுவாரசியமான உண்மை என்னவென்றால் அண்டை நாடுகளைவிட அதிகமாகவே அல்பேனிய சமூகம் பெண்ணுரிமைகளை மதித்தது. ஆணுக்குச் சற்றேறக்குறைய சமமாகவே பெண் கருதப்பட்டாள். ஆண் உறவு தவிர்த்து கன்னி விரதம் பூண்ட பெண்களுக்கு ஏக அந்தஸ்து, மதிப்பு - இன்றும்கூட.

யவன ஆதிக்கத்திற்குப் பிறகு பல்வேறு இனத்தாரின் தாக்குதல்களை சந்தித் அல்பேனியா பைஸாண்டைன் (Byzantine) சாம்ராஜ்ஜியத்தில் அடங்கியது. கிருத்துவம் பரவியது.

14ம் நூற்றாண்டில் துருக்கி அல்பேனியாவைக் குறிபார்த்தது. துக்கினியூண்டு அல்பேனியா பிரம்மாண்டமான துருக்கி ஒட்டோமான் (Ottomon) சாம்ராச்சியத்தை எதிர்த்து தோல்வியுறச் செய்த விந்தையைக் கண்டு பிரமிக்காத சமகால ஐரோப்பியரே இல்லை.

வெற்றியின் காரணம்?

துருக்கி சுல்தான்கள் அல்பேனிய உயர்குடியினர் வீட்டுப் பிள்ளைகளை தமது தலைநகருக்கு அழைத்துச் சென்று தம் மேற்பார்வையில் வளர்த்தா¡கள். ராஜ விசுவாசத்தையும், கப்பம் கட்டுவதையும் நீடிக்கச் செய்யும் தந்திரம்.

அதுபோல் கதறக் கதற தாயிடமிருந்து பிடுங்கிச் சென்று வளர்க்கப்பட்ட ஸாகண்டர் பெக் (skenderbeg 1405-1468) என்ற சிறுவன் போர்த் தொழில்கள் கற்று துருக்கருக்குத் தோள்கொடுத்து தீரச் செயல்கள் புரிந்தான். பட்டம் பதவிகள் பெற்றான். அவன் துருக்கனாகவே மாறி விட்டதாகத் தோன்றியது.

ஆனால் திடீரென்று ஒருநாள் இளைஞனைக் காணவில்லை. சொந்த ஊருக்கே தப்பித்துப் போய் அதை துருக்க ஆட்சியிலிருந்து மீட்டு, அல்பேனியக் கொடியை கோட்டையின் மேல் ஏற்றினான். இரண்டு தலை கொண்ட கருப்புக் கழுகு பொறித்த சிவப்புக் கொடி இன்று சுதந்திர அல்பேனியாவின் கொடியும் அதுவே.

"நான் சுதந்திரத்தை எங்கிருந்தோ கொண்டுவரவில்லை. இதோ, இங்கே உங்கள் நடுவில் அதைக் கண்டேன்" என்று கர்ஜித்த அந்த மாவீரன் எப்படியோ எல்லா அல்பேனிய சிற்றரசர்களையும் ஒன்றுசேர்த்து துருக்கியரை ஒருமுறையல்ல, இரண்டு முறையல்ல - 24 முறை முறியடித்தான். அவன் மறைவுக்குப் பின்னால்தான் ஒற்றுமை குலைந்த அல்பேனியர் துருக்கியின் இரும்புப் பிடியில் சிக்கினர்.

400 வருட துருக்க ஆட்சியில் பண்பாட்டுச் சிதைவுகள், அரசியல் இழப்புகள், கட்டாய மதமாற்றங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசீய உணர்வு பீறிட்ட வேளையில் பிளவுகளை மீறி மக்களை ஒன்றுபடுத்த அல்பேனிய தலைவர்கள் உபயோகித்த வாசகம் இந்தியாவுக்கு! நன்றாகவே பொருந்தும். நமது மதம் இஸ்லாமும் அல்ல, கிருத்துவமும் அல்ல. அல்பேனியரின் மதம் அல்பேனியஸம்தான்.
1912ல் சுதந்திரம். ஆனால் உலகப்போரில் அல்பேனியாவே உருத்தெரியாமல் போய்விடுமோ என்ற நிலைமை. அண்டை நாடுகள் அதைப் பிய்த்துப் பிடுங்கி பங்கு போட்டுக் கொள்ள போட்டி போட்டன. இந்தக் கட்டாய பாகப்பிரிவினையை தடுத்தவர் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் (Woodrow Wilson) அப்போதும் ஜனநாயகம் உள்ளங்கை நெல்லிக்கனியாக வந்துவிடவில்லை. கம்யூனிஸ அவதிகளுக்குப் பிறகுதான் ஸ்திரப்பட்டது.
ஸ்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? அதுவும் நவீன யுகத்தில்? சமீபகாலங்களில் பால்கன் தீபகர்ப்பத்து கொந்தளிப்புகள் உலகத்தையே கலக்க வில்லையா? மதத்தின் பெயரால் ஓர் இனத்தையே அழிக்கும் அசுர வெறியை பாஸ்னிய - செர்பியப் போர்களில் கண்டோமே மீண்டும்! அண்டைநாட்டு அல்பேனியாவின் நிலைகுலைந்த சோகங்கள் தொடர்கின்றன.

நண்பர்கள் சிறு வட்டங்களில் கூடி
பொழுதைப் போக்கும் காதல் கீதங்கள்
மீட்டும் நினைவுகள்
என் அன்பே!
எழுதத் துவங்கினேன் உனக்கு
ஒலித்தது அபாயச் சங்கு
தன்னிலை - சற்று - புரியவில்லை
அள்ளினேன் என் உடமைகளை
உன்னையுந்தான், என் வெற்று மடலில்...

ஓயாப் போர்கள். ஆக்கிரமிப்புகள். ஆண்டாண்டுகளாக நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அபாயச் சங்குகளால் நிலைகுலைந்த மக்கள் புலம் பெயரத் தொடங்குகிறார்கள். புள்ளி விவரங்கள் அல்பேனிய ஜனத்தொகையில் நான்கில் ஒரு பங்கிற்குமேல் புலம் பெயர்ந்துவிட்டதாக அறிவிக்கின்றன. புலம் பெயர்ந்தவர்களுக்கும், பெயராதவர்களுக்கும் தேவை ஒன்றுதான். பாதுகாப்பு. ஸ்கெண்டர்பெக் எங்கே?

ஸ்கெண்டர்பெக் ஒரு மனிதனே அல்ல, ஒரு தத்துவம்தான் என்று சொல்வோரும் உண்டு. அது எப்படியோ ஒரு காலத்தில் அவன் ஐரோப்பாவிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்தான்.

இருபத்தி ஐந்தாம் முறை போரில் வென்றதும் துருக்கியர் ஸ்கெண்டர்பெக்கின் கல்லறையைத்தான் முதலில் தேடினர். அந்தத் தலைவனை அவமானப்படுத்துவதற்கோ, அலங்கோலப்படுத்துவதற்கோ அல்ல. அவன் கல்லறையை உடைத்து, பிளந்து, தோண்டி அந்த வீரனின் எலும்புகளைத் திருடி தாயத்தாக போட்டுக் கொண்டார்களாம். யானை செத்தாலும் ஆயிரம் பொன்னல்லவா?

ஸ்கெண்டர்பெர்க்கைப் பற்றி எவ்வளவோ கதைகள், உபதைகள், பாடல்கள், பிரான்ஸ் தேசத்து ரோன்ஸபிர்ட் (Ronsbird), அமெரிக்க லாங்பெலோ (Longfellow) கூட அவனைப் பற்றி கவிதை புனைந்தார்களே!

ஸ்கெண்டர்பெக் என்ற பெயரைக் கண்டதும் இந்தப் பெயரை எங்கேயோ, எப்போதோ கேட்டிருக்கிறோமே என்று தோன்றியது. கூடவே பண்டைய காலத்து அல்பேனிய வீரனைப் பற்றி எப்படி தெரிந்திருக்க முடியும் என்ற ஐயம்.

மறுபடியும் பிளாஷ்பேக். நான் பாவாடைச் சட்டைச் சிறுமி. எட்டு வயதிருக்கலாம். அப்போதுதான் எனக்கு யக்ஞேவா சாஸ்திரி நண்பரானார்.
என்ன, பெயரே ஒரு மாதிதரி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? அவரே ஒரு மாதிரிதான். Ecentric. 35-40 வயது வித்தியாசம் வேறே. அதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்.

யக்ஞா ருக்மினி தேவியின் சகோதரர். பரத நாட்டியக் கலையின் மறுமலர்ச்சிக்கு மையமாகத் திகழ்ந்த ருக்மிணி தேவியேதான்.

பிராமண சமூகத்தில் பிறந்து வளர்ந்த 16 வயது ருக்மிணி ஜார்ஜ அருண்டேல் என்ற ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து மதராஸ் பட்டணத்தில் நடந்த மெரீனா ஊர்வலத்தில் உரத்த குரலில் கண்டனம் எழுப்பியவல் யக்ஞாவேதான். பாவம், பிற்பாடு தாமே ஒரு அமெரிக்க மாதைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அன்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பிரம்மஞான சங்கத்து உறுப்பினரான ருக்மிணியம்மா சதிராட்டம் கற்றுக் கொள்வேன் என்று புரட்சி செய்தபோது யக்ஞா கண்டம் தெரிவிக்கவில்லை. சகோதரி நடனம் கற்றுக் கொள்ள மத்த நல்லுர் ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை முதலில் அணுகியவர் யக்ஞாவேதாம்.

யக்ஞா மாமாவைப் பார்த்தால் அவரை சிநேகிதராக்கிக் கொள்ளலாம் என்றே தோன்றாது. அவருக்கு சிரிக்கத் தெரியுமா என்றே சந்தேகமாயிருக்கும். நிர்த்தாட்சண்ய பாவம். மெலிந்த தேகம். தேக்கு நிறத்தை வெள்ளை பஞ்சகச்சமும் அரைக்கை பனியனும் எடுத்துக் காட்டும். தடித்த சட்டம் போட்டம் மூக்குகண்ணாடி. முடியை பின்தள்ளி வாரியபடி துருத்திக் கொண்ட விசால நெற்றி. பழைய சாய்வு நாற்காலி இருப்பதே தெரியாமல் மெளனம் சாதித்துக் கொண்டிருப்பவர். சொற்சிக்கனம் என்றால் யக்ஞாவிடம் கற்க வேண்டும். நாம் போனால் முதல் வார்த்தை உதிர்ப்பதற்கே அரைமணி ஆகும். ஆனால் அவர் பேசவில்லை என்று நாம் உணர்வதற்கே இடமில்லாமல் மனைவி நாக்மா ஓயாமல் பேசித் தீர்ப்பார். அரை நூற்றாண்டு இந்தியாவில் கழித்த பிறகும் நார்மாவுக்கு எந்த இந்திய மொரியும் பேச வராது. அதனால் என்ன? நார்மாவைப் பிடிக்காதவர்களே கிடையாது. எப்போதும் இன்சொல், சரணம், கலகலப்பு. குழந்தைகளிடம் ரொம்பவே பிரியம்.

ஆனால் என்னவோ தெரியவில்லை. அம்மா நார்மா வீட்டுக்குப் போகலாமா என்று கேட்டால் உடனே யக்ஞா மாமாவை நினைத்துக் கொண்டுதான் சரி என்பேன்.

அடையார் காந்தி நகரிலிருந்து நதியோரம் பரந்திருந்த பிரம்மஞான சங்க சோலைக்கு சைக்கிளிலேயே செல்வோம். தெருக்களில் ஈ காக்காய் இருக்காது. தாழ்ந்த அடர்ந்து படர்ந்த மரங்கள் சாலைகளின் இருபுறமும் அன்புகாட்டும். அலையோசை துல்லியமாகக் கேட்கும்.

பாடிக் கொண்டே அப்பா பெடலை மிதிப்பார். அவளைக் கட்டிக் கொண்டே பின்சீட்டில் ஒட்டிக் கொள்வேன்.

அடையாறு கடலில் சங்கமிக்குமிடத்தில் யக்ஞாவின் வீடு தோப்புக்குள் ஒளிந்து கொண்டிருக்கும்இ அங்கே எப்போதும் அலையோசையுடன் சவுக்கின் சோக சுருதி.

யக்ஞாவும் நார்மாவும் மாடியில் வசித்தார்கள். கீழே வயதான ஐரோப்பியர், மனைவி இல்லாதவர். எப்போதாவது தென்படுவார்.

வீட்டை நெருக்கி அணைத்த வாசமலர் மரங்கள் Fransipani என்ற ஒருவித சண்பக ஜாதியைச் சேர்ந்தவை. மாடியில் நடுஹாலைச் சுற்றிய வராண்டாவில் பூத்து சொறிந்து போதையளிக்கும் மஞ்சள் பூசிய வெண்பூக்கள். நிலாவேளையில் நாம் கிறுகிறுத்து தூணில் சாய்வோம்.
வீட்டின் பின்னே புன்னை சவுக்குடன் பின்னி பிணைந்து நிற்கும். அதற்கு அப்பால் வெள்ளி மணல் விரிப்பு, நீலக்கடல். எப்போதோ தென்படும் ஓரிரு மீனவரை விட்டால் ஆளரவமே இல்லாத வனாந்திரம்.

ஹாலில் சொற்ப பொருள்கள், புத்தகங்கள். ஓரிரண்டு அற்புதமான சிற்பங்கள். காளிங்க நர்த்தனம் இன்றும் கண்முன் நிற்கிறது. கண்ணன் முகத்தில் கோணச் சிரிப்பு. என்னைப் பார்த்துதான் என்று என் குழந்தை உள்ளம் மகிழும்.

இந்த வீட்டில் வாரம் ஒருமுறை மாலை மங்கும் வேளையில் மேற்கத்திய சங்கீத வினிகை நடக்கும். பழைய கிராமபோன் LP ஒலித்தட்டுக்கள் 150 வாத்தியங்கள் சுருதி சேர்ந்து பொங்கி வரும் நாதவெள்ளத்தில் அலையோசையும் இலையோசையும் ஸ்தம்பித்து விடும். நிலா தயங்கி எட்டிப் பார்க்கும்.

இந்த அந்நிய சங்கீதத்தைக் கேட்க ஐந்து ஆறு தலை நரைத்த முதுகு வளைந்த, சுருக்கம் விழுந்த ஐரோப்பியர்கள் வருவார்கள். அனைவரும் பிரம்மஞான சங்க உறுப்பினர்கள். தாய்நாட்டை விட்டுப் பிரிந்து இந்த கிழக்காசிய நாட்டில் ஆண்டாண்டுகளாக தொண்டு செய்த அந்த வெள்ளையருக்கு அந்தச் சங்கீதம் என்னவெல்லாம் உணர்த்துமோ! சோபான், மோஸார்ட், பீதோவன் படைப்புக்கள் என்ன சலவைகளை ஏற்படுத்துமோ! ஆனால் முகத்தில் ஏதாவது நிழலாட வேண்டுமே! ம்ஹ¤ம் கற்சிலைகள்தான். மூச்சு விடுவதுகூட தவறோ என்று பயப்படுவது போல இருக்கும். தும்மல், இருமல் என்றால் சட்டென்று எழுந்து வெளியே போய்விடுவார்கள். அடங்கிய பின்தான் மீண்டும் உள்ளே நுழைவார்கள்.

ஒலித்தட்டு வினிகை முடிந்ததும் அவர்கள் கலைந்து போவதில் கூட சமசான அமைதி. காலைத் தட்டி, தலையாட்டி, தாளம் போட்டு, கையை நீட்டி, பேஷ் சபாஷ் என்று கூவும் கர்நாடக இசைக் கச்சேரி பாங்கு மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவர்கள் சங்கீதத்தை அனுபவிக்கும் முறையும் விநோதம், அந்த இசையும் புது அனுபவம்.

வேறு யாரும் அருகில் இல்லாவிட்டால் யக்ஞா சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்காருவார். பிறகு மெல்ல பேச்சு கொடுப்பார். நாம் கவனமாக கேட்கிறோம். ஆர்வத்தோடு கேட்கிறோம் என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் நிறையவே பேசுவார். "உனக்கு யார் பாட்டு ரொம்பப் பிடிக்கும்-" என்று கேட்பார். நான் உடனே "ஜி.எஸ்.பி." என்று சொல்வேன். என்னை ஒருவிதமான இரக்கத்துடன் பார்த்துக் கொண்டே, "உண்மையான இசை என்றால் பிருந்தாம்பாவிடம் கேட்கணும்" என்பார். உடனே என் கண்முன் மூக்கண்ணாடி அணிந்த கடுமையான முகம் ஒன்று "புத்தி ரா...து" என்று அழுத்தம் திருத்தமாக, ஆனால் கமகத்தோடு உச்சரிக்கும் தோற்றம் அச்சுறுத்தும்!

ஒருதரம் இயற்கையின் இசை, மனிதன் இயற்றிய இசை என்று நாங்கள் சர்ச்சை செய்தது நினைவிருக்கிறது. (எனக்கு வயது ஒன்பதேதான்). அப்போது ஸ்கிரியாபின் என்ற மேதை எப்படி சமுத்திர ஒலிகளை சங்கீதமாக உருவகப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லி அந்த ஒலித் தட்டை போட்டும் காண்பித்தார்.

அப்படித்தான் ஒருநாள் யக்ஞா மாமா ஆவகா என்றால் என்ன என்று விளக்கினார். அந்தோனியோ விவால்டியின் (Antonio vivaldi) ஆவராக்களை குறிப்பிட்டு, "ஸ்கெண்டர்பெக்கைப் பற்றி விவால்டி ஒரு ஆபரா படைத்திருக்கிறார் பாரு, அதில் வீர ரஸம் சொட்டும்" என்றது எப்படியாவது அந்த ஆபராவைக் கேட்கவேணும் என்ற ஆவலைத் தூண்டியது. ஆனால் ஸ்கெண்டர்பெக் யார் என்று கேட்கத் தோன்றவில்லை. இன்றுவரை நான் அந்த ஆபராவைக் கேட்கவும் இல்லை.

<< பக்கம் 1 பக்கம் 3 >>

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |