Tamiloviam
செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : பின்தொடரும் பூனைகள்
- ஹரன்பிரசன்னா
| Printable version |  

இரண்டாம் பூனை
 
பூனைகளை நம்பாதீர்கள் தோழர்களே
அவை ஆழ்மன அழுக்கின் சின்னங்கள்
உலகம் பெற்ற சாபத்தால்
பிறந்துவிட்ட சைத்தான்கள் பூனைகள்
பூனைகளின் கண்கள்
சைத்தான் கைகளிலிருக்கும் அப்பம்
அது உங்களை அவைபால் ஈர்க்கும்
நான் சொல்கிறேன் கேளுங்கள்
ஓ தோழர்களே
பூனைகளை நம்பாதீர்கள்

(வெங்கட், பத்தாம் வகுப்பு, ம.தொ.நல ஒன்றிய மேல்நிலைப் பள்ளி)

வயதுக்கு மீறி வளர்ந்திருந்த அக்கா வயதுக்கு மீறிய காரியம் ஒன்றைச் செய்தாள். பக்கத்துவீட்டுக் கோவிந்தனுடன் ஓடிப்போனாள். வீட்டில் எல்லோரும் அக்காவைத் திட்டித் தீர்த்து அழுது புரண்டார்கள். "ஒரே பேத்தி.. வயத்துல சுமந்துக்கிட்டு இருக்கா.. அவளைப் பார்க்க ஒரு நாதி இல்ல.. நா ஏன் இன்னும் சாகாம இருக்கேனோ" என்ற பாட்டியின் புலம்பலைத் தொடர்ந்து, அதற்காகவே காத்திருந்த மாதிரி, எல்லோரும் மனம் கனிந்து அக்காவை வீட்டுக்குக்குள் ஏற்றினார்கள். வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்த அக்கா என் மேல் அளவு கடந்த பாசத்தோடு என்னிடம் அத்தானின் புகழைப் பாடுவாள். நான் பதில் சொல்லாமல் கேட்டுக்கொள்வேன். "நாலு வருஷத்துக்கு முன்னாடியே உன்ன வயசுக்கு மீறின வளர்ச்சின்னான் கோவிந்தன்" என்று நான் சொல்லவில்லை.

திடீரென ஒருநாள், "பூனையில்லாமல் வீடு வெறிச்ன்னு இருக்கு" என்று சொல்லி ஒரு பூனையை வீட்டுக்குள் கொண்டு வந்தாள். அத்தான் கோவிந்தன் சம்பந்தமே இல்லாமல் "பூனை ரொம்ப அழகு. உன்னை மாதிரியே" என்று சொல்லி வைத்தான்.

ஐந்து வயதில் என் மனச்சித்திரத்தில் உறைந்து போன பூனைக்கும் இதற்கும் அதிக வித்தியாசங்களில்லை. சாம்பல் நிறக்கோடுகள். கரும்பச்சைக் கண்கள். வெள்ளை நிறத்தில் மீசை. ஆனால் மடியில்லை. ஆண் பூனை. பூனைகளை நம்பக்கூடாது என்று எத்தனையோ முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டாலும் அதன் விளையாட்டில், அழகில் மெல்ல நான் என் நம்பிக்கையை இழந்தேன்.

இப்போது யாரும் என்னைத் தடுக்கவில்லை. என் இஷ்டப்படி பூனையுடன் விளையாடினேன். பூனைக்குப் பெயர் ஏதும் வித்தியாசமாக வைக்காமல் புஸி என்று அழைத்தோம். அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கூட நான் "புஸி, பாஸ்! பாஸ்! பாஸ்!" என்றழைத்தால் தூக்கத்தைக் கலைந்துவிட்டு ஓடி வரும். நான் எப்போது அழைத்தாலும் அதற்கு எதாவது தின்னக்கொடுப்பேன் என்று புரிந்துவைத்திருந்தது.

என் கண்டிப்பும் அதற்குப் புரிந்திருந்தது. "ஏய்!" என அதட்டினால், தான் ஏதோ தவறு செய்கிறோம் எனப் புரிந்துகொண்டு அமைதியாகும். என் செருப்புச் சத்தம் கேட்கும்போதே சத்தமில்லாமல் வந்து காலை உரசும். அரைக்கண்ணைத் திறந்து வாலை செங்குத்தாக மேலே தூக்கி காலை உரசினால் அது கொஞ்சுகிறது என்று புரிந்துகொள்வேன். என் அக்காவிற்குப் பூனையைக் கொஞ்சுவதை விடவும் முக்கியமான வேலை அத்தானைக் கொஞ்சுவது. அதனால் பூனையை மறந்துவிட்டிருந்தாள்.

எப்போதுமே காலம் ஒரே போல் இருந்துவிடுவதில்லை. இதை மிகுந்த துயரத்துடன் சொல்கிறேன்.

வரண்டாவில் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தேன். பெரிய வராண்டா. இரண்டு மரத்தாலான தூண்கள் உண்டு. பூனை காலை நேரத்தில் வெறி பிடித்த மாதிரி விளையாடும்போது இந்தத் தூண்களில் ஏறி இறங்குவது வழக்கம். ஒரு தூணின் பின்னிருந்து தரையோடு தரையாக பூனையின் வால் ஒன்று அசைந்தது போல இருந்தது. புஸியின் பழக்கப்பட்ட சாம்பல் நிற வாலாகத் தெரியவில்லை. இருந்த இடத்திலிருந்து தலையை நீட்டி தூணின் அந்தப் புறம் பார்த்தேன். ஏதோ ஒரு வெள்ளைப்பூனையின் மேலே புஸி படுத்திருந்தது. வெள்ளைப்பூனையின் வால் வெண்மையும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருந்தது. புஸியின் வாய் வெள்ளைப்பூனையின் உச்சந்தலையைக் கவ்விக்கொண்டிருந்தது. புஸி தன் கால்களால் வெள்ளைப்பூனையைப் இறுக்கப்பிடித்துக்கொண்டிருந்தது. லேசான உறுமலையும் கேட்டேன். பொறி தட்டவும் புஸியின் அநாகரீகச் செயலில் கோபம் கொண்டு கையிலிருந்த நோட்டால், ஏய் என்று அதட்டிக்கொண்டே ஓங்கி அடித்தேன். எதிர்பாராத தாக்குதலால் பயமும் கோபமும் ஒருங்கே எழ, வழக்கமாக எழும் மியாவ் சத்தத்திலிருந்து முற்றிலும் வேறாக, நினைத்தாலே கிலியை ஏற்படுத்தவல்ல ஒரு சத்தத்துடன் சீறியபடி திரும்பியது. கோபத்தில் அதன் உடலெங்குமுள்ள மயிர்கள் விறைத்து நிற்க, கரும்பச்சைக் கண்கள் சீற்றத்தை உமிழ, கோபத்துடன் உர்ரென்றது.

இப்படிப் பூனையின் மயிர்கள் விறைத்துப் பார்ப்பது மிகச் சில சமயங்களில்தான்.

நான் கடைக்குச் செல்லும்போது என் கூடவே புஸியும் வரும். நாய்களைத் தெருவில் கண்டால் சட்டென அருகிலிருக்கும் மரத்தில் தாவி ஏறிவிடும் அல்லது திறந்திருக்கும் ஏதேனுமொரு வீட்டிற்குள் ஓடிவிடும். எதிர்பாராத ஒரு தருணத்தில் தெருநாய் ஒன்று புஸியை மடக்கிவிட்டது. நான் கல்லைத் தேடி ஓடினேன். புஸி செய்வதறியாமல் அங்குமிங்கும் நோக்கியது. மரமில்லை. எந்தவீட்டின் கதவும் திறந்திருக்கவில்லை. தான் மாட்டிக்கொண்டது அறிந்த பின்னர் எதிர்க்கத் துணிந்தது. அதன் உடலெங்கும் மயிர்கள் விறைத்தெழ, வால் மேல் நோக்கி செங்குத்தாக விறைப்பாக, வாலிலும் உரோமங்கள் சிலிர்த்தெழுந்து நின்றன. மிகுந்த கோபத்தோடு புஸ் என்ற சீறலோடு வலது முன்னங்கையின் பிளவுகளிலுள்ள நகங்களைக் காற்றில் கீறியது. இத்தனை வேகத்தை எதிர்பார்க்காத நாய் மெல்ல பின்வாங்கியது. இரண்டு முறை குரைத்துவிட்டு ஓடிப்போனது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் உறைந்துபோனார்கள். அதன்பின் புஸி தெருவில் மிகப்பிரசித்தம்.

அப்படியொரு சீற்றத்தை இப்போதும் சீறியது. அதன் வாயில் வெள்ளை நிறத்திலான கோரைப்பற்கள் மிக தீர்க்கமாகத் தீட்டப்பட்டு எதற்கும் தயார் நிலையில் இருப்பதாகத் தோன்றியது. இதனிடையில் வெள்ளைப் பூனை ஓடிவிட்டிருந்தது. நான் அதே இடத்தில் அசையாமல் அடுத்து என்ன செய்யவேண்டுமெனத் தெரியாமல் நின்றேன். பூனையின் சீற்றம் படிப்படியாகக் குறைந்தது. அதன் சிலிர்ப்படைந்திருந்த மயிர்கள் படியத் தொடங்கின. புஸியின் கோபம் தணிந்ததை அறிந்து, குனிந்து தடவிக்கொடுக்க முனைந்தேன். நான் மீண்டும் அடிக்க வருவதாக நினைத்த புஸி கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்காத வகையில் என் ஆள்காட்டி விரலை மிகக்கடுமையாகக் கடித்தது. நான் கையை உதறியும் கூட அதன் பற்கள் என் ஆள்காட்டி விரலை விடவில்லை. மீண்டும தன் உரோமங்கள் சிலிர்த்தெழ, கரும்பச்சைக் கண்கள் கனல் உமிழ, போருக்குத் தயாரான புலியின் உறுமலுடன் மிக ஆழமாகக் கடித்தது புஸி.

பூனை என்பது ஒரு மிருகம். மனதின் ஆழத்திலிருந்து ஒட்டுமொத்தப் பூனையினத்தையே வெறுத்தேன்.

<< முதல் பூனை

மூன்றாம் பூனை >>

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |