வைதேகி நான் வேலை செய்த ஆபீஸுக்கு அடிக்கடி வருவாள், தன் அண்ணனைப் பார்க்க. அப்படி ஏற்பட்ட தொடர்பு. வலிய கிடைப்பதை பசிப்பவன் விடுவானா? நானோ ஏகாதசி. அவளோ சமைத்த உணவு. அப்புறம்?
வைதேகியை ஒரு நாள் மறுபடி கடை வீதியில் சந்திக்க நேர்ந்தது.
"செல்வம், ஏன் வரவில்லை? என்னை மறந்தே விட்டாயா?" என்று துளைத்து எடுத்து விட்டாள். விசிட்டிங் கார்டை வேண்டுமென்றே பிருந்தா கிழித்துப் போட்டதை சொன்னால் சும்மா விடுவாளா? தொலைந்து விட்டதாகக் கூறினேன்.
அவளுக்கு மொத்தம் ஆறு குழந்தைகளாம். அதிலே இரண்டு ரெட்டையாம்.
"செல்வம்... உன்னிடம் நான் வாழ்ந்தது கொஞ்ச காலம். அதிலே ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் மறுபடி அனுபவிக்க வேண்டும். ஏன், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்! உன் குழந்தையை நான் சுமக்க வேண்டும்.
நான் வேர்த்து விறுவிறுத்துப் போனேன்! இன்னும் இவள் மாறவே இல்லையே. இது ஆபத்து. இவள் புருஷன் சி.எஃப்..ஓ.... ஃப்ளாட் பானல் டிவி, புது வீடு, புது பென்ஸ் காரு என்று வசதியாக வைத்திருக்கிறானாம். என்ன கொள்ளை! திமிர் பிடித்து அலைகிறாள். அவள் கணவன் இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறதாம். சினிமா, டிசம்பர் கச்சேரி, ஓவியக் கண்காட்சி என்று அலைகிறாள் பொழுது போகாமல். இவள் கண்ணில் நான் ஏன் பட்டேன்?
"உங்கள் வைதேகியைப் பார்த்தேன். 'உன் மயக்கத்தில்தான் செல்வம் என்னிடமிருந்து ஒதுங்குகிறாரா?' என்று கோணி ஊசியால் கோழிக்குஞ்சை குத்துகிறாப் போல கேட்டாள்! என்ன யோசனை? வந்த இடத்திலும் வைதேகி ஞாபகமா?"
ப்ருந்தாவுக்கும் வைதேகிக்கும் நடுவில் சில காலம் நான் மத்தளமாய் இருந்தேன். அவளால் ஏற்பட்ட தலைவலிகளைப் புரிந்து கொண்டு நிவாரணம் அளித்தவள் என் ப்ருந்தாதான்!
"என்ன இது குழந்தை மாதிரி... இன்னிக்கு அவர் இல்லே. பசங்களை அழைச்சிண்டு எக்ஸிபிஷன் போயிருக்கார். எனக்குப் பிறந்த நாள்னு சொல்லி உங்க வைதேகியை அழைச்சிண்டு வாங்கோ".
ப்ருந்தாவுக்குப் பொடி வைக்காமல் பேசவே தெரியாது. அவளுடைய ஸ்பெஷாலிடியே அதுதானே. வியாதியும் அவள்தான். மருந்தும் அவள்தான்!
"நீங்கள் மூச்சு விடக் கூடாது. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற நிபந்தனையைக் கேட்டதும் எனக்கே சிறிது அச்சமாகத்தான் இருந்தது 'என்ன செய்யப் போகிறாளோ' என்று.
வைதேகி வந்தாள்.
"ஒரு ஸ்வீட், ஒரு காரம் தருவித்தும் காபி தயாரித்தும் இருந்தாள் ப்ருந்தா.
எதையோ எதிர்பார்த்து உதறிக் கொண்டிருந்தேன்.
மெதுவாகப் பேச்சுத் தொடங்கியது. சங்க இலக்கியங்களுக்கு இழுத்தாள் ப்ருந்தா. பேச்சு சூடு பிடித்து விட்டது. ராதை, அகலிகை ஒருத்தரை விடவில்லை. வைதேகி என்னை அடிக்கடி முறைத்தாள். நடுவிலே புகுந்து பேச்சை திசை மாற்றினால் "உனக்குப் போய் பரிந்து கொண்டு வந்தேனே" எனபது போல் ப்ருந்தா முறைத்தாள்.
"நீங்கள் அன்றைக்கு 'செல்வத்துக்கு உன் மேல் மயக்கம்! என்னை ஒதுக்குகிறார்' என்று குற்றம் சாட்டினீர்கள். அதற்கு இன்றைக்கு பதில் சொல்கிறேன். உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளால் வடித்து விட முடியாது. ஆத்ம பரிவர்த்தனை தனி! அப்படியே அவர் என்னிடம் மயங்கினாலும் சதை வெறிக்கு நான் ஆட்பட்டவளல்ல..."
எதில் போய் முடியுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தபடியே வைதேகி விருட்டென்று எழுந்தாள்.
"அப்பொழுது நான் வெறி பிடித்தலைகிறேன் என்கிறாயா? நான் 'பளிச்'சென்று சொல்கிறேன். நீ ஆத்ம பாஷை என்று முலாம் பூசிகிறாய். நளாயினி உத்தமிதான். பத்தினியாயிருந்தவள் அடுத்த பிறவியிலாவது பதி சுகம் அனுபவிக்க ஐந்து முறை மந்திரத்தை ஓதி பாஞ்சாலியாகப் பிறந்து ஐந்து விதமான ஆடவர்களை அடைந்தாள். அவள் மறுபிறவியிலும் நளாயினியகவே இருந்திருக்கலாமே? செக்ஸ் யாருக்கும் அலர்ஜி இல்லே.... என்னைப் போல் அவசரக் குடுக்கைகள் வெளிப்படையாய் காட்டிக் கொண்டு முழிக்கிறோம்! செல்வம்... உனக்குப் பிடிக்கலேன்னா நேரிடையா சொல்லி இருக்கலாம்! இவள் உனக்கு வக்கீலா? பேஷ்... நல்ல ஏற்பாடு!"
புறப்பட்டவளைத் தடுத்தாள் ப்ருந்தா.
"நில்... நீ என்னிடம் கேட்டதற்கு நான் பதில் சொன்னேன். அவரை ஏன் இழுக்கிறாய்? செக்ஸ் அலர்ஜி இல்லாவிட்டாலும் அளவுக்கு மீறினால்.... சர்க்கரை ருசிக்கிறது என்று சாப்பிட்டால் நீரழிவு வருகிறது. அரிசிச் சோறே அதிகமானால் கொழுப்பு உண்டாகிறது".
"தாங்க்யூ" வைதேகி போய் விட்டாள்.
"என்ன ப்ருந்தா?" மனத் தாங்கலாக இருந்தது. பாவம், வைதேகி.
"இது ஆபரேஷன் கேஸ்... முதலில் கஷ்டமாக இருந்தாலும் பலன் நல்லதாக இருக்கும். அடாடா... காதலி முகம் வாடினால் தாங்கவில்லையாக்கும்! அப்புறம் பிடிக்காதது போல் நடிப்பானேன்...?"
அப்பப்பா, ப்ருந்தா பொல்லாதவள். அப்படி ப்ருந்தாவை மறுபடி எப்போது பார்ப்பேன்? இரவுகளில் என் மனைவியை அணைத்திருக்கும் போது அவளில் ப்ருந்தாவை நான் பார்க்கிறேன். மனைவியாகத் தோற்றம் மாறுபடும்போது உதறி விடுகிறேன்.
"என்ன மனிதரோ?" அவள் அலுத்துக் கொள்வாள்.
அதையே ப்ருந்தா என்னிடம் சொன்னபோது எனக்கு வியப்பக இருந்தது! உறவுகளுக்கு இப்படி ஒரு பாலமா? ஒரே சமயங்களில் ஒரே மாதிரி கம்பியில்லா இணைப்பு அலைவரிசையா?
இனி ப்ருந்தாவின் நினைவுகள்தான் எனக்குத் துணையோ?
(கங்கை வழியும்)
|