Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 14
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று சைகை காட்டினாள். ஹார்லிக்ஸ் கரைத்து வந்து கொடுத்தேன்.

"செல்வம்... நன் இப்போ எவ்வளவு ரிசர்வ்டா இருக்கேன்! நான் கல்யாணம் ஆகிறதுக்கு முன்னே ரிசர்வ்ட் டைப்பே இல்லை"

பேச்சை நிறுத்த வேண்டுமே! தொண்டை வறண்டு விடப் போகிறது. டாக்டர் பார்த்தால் கோபிப்பார். நிறுத்த வழி? நோயுற்ற உடம்பில் 'சுள் சுள்'ளென்று கோபம் வருகிறது. மென்மையாய் அந்தப் பஞ்சு மனம் நோகாமல் எப்படி முடியும்? மறுபடி ஆரம்பித்து விட்டாள்.

"உட்காருங்கள் செல்வம்... நன் ரொம்ப கலாட்டாப் பண்ணுவேன். எங்க கும்பல்லே எனக்கு கிளியோபாட்ரான்னு பட்டம். ரொம்ப வாய் துடுக்கு. அப்பா இல்லாத பொண்ணுன்னு அம்மா செல்லம். பதினெட்டாம் பெருக்கு, கோலாட்டம்னு எங்க குழு திமிலோகப்படும்.

'அதோ அவன் குண்டா இருக்கான். அவன் பக்கத்திலே போற ஈர்க்குச்சியை எடுத்து, அதோப் போற சோளத் தட்டை பக்கத்திலே வெச்சா சரிசமமா இருக்காது?' இப்படி யெல்லாம் ஜோடிகளை மானசீகமா பிரிச்சு, சேர்க்கறதிலே ஒரு ஆனந்தம்! அந்தப் பாவம்தான் எனக்கு ஜோடி சரியா அமையலியோ?"

"என்னம்மா... என்னம்மா இதெல்லாம்?" விக்கலெடுத்தது. தண்ணீர் கொடுத்தேன்.

"ஒரு தடவை ஊரிலேயிருந்து தூரத்து சொந்தம் வந்திருந்தாங்க. அதிலே ஒருத்தன் கொஞ்சம் வழிசல். ரொம்ப ஹிம்சையா யிருந்தது. இராத்திரி நான் படுக்கற இடம் வரை வந்து காலைச் சுரண்ட ஆரம்பிச்சான். ஒரு கிஸ்ஸாவது வேணுமாம்! 'ஐயோ அம்மா, தேளு, தேளு'ன்னு கத்தி... எல்லாரும் ஓடி வந்து... பாவம் திணறிப் போயிட்டான். அப்போ அவன் மூஞ்சி போனதைப் பார்க்கணுமே"! மலர்ந்த முகத்தில் வலி வந்தது தெரிந்தது.

நர்ஸ் வந்து ஊசி போட்டு விட்டுப் போனாள்.

"ஸிஸ்டர்... நீங்க பேசிட்டீங்களே இவரா, அவரான்னு தெரியலேன்னு... இவர்தான்"

"சாரி" ஸிஸ்டர் ஓடியே போய் விட்டாள்.

"என்ன விஷயம்?" எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

"நேத்து ஒரு வேடிக்கை செல்வம்... 'ஏம்மா செகப்ப ஓராளு வராரு! அவரும் கட்டிலாண்டை போயி ரொம்ப நேரம் பேசுராரு... அந்த கறத்தாளு வந்தாலும் கதவு மூடிக் கெடக்கு... அந்தம்மா புருசன் யாரு?" இப்படி ஆயா கேட்கிறா".

'இன்னா எளவோ ஆயா? பொது வார்டிலே சேர்த்தவன் புருஷன். கறத்தாளு ஸ்பெஷல் வார்டிலே சேர்த்தாரு! வைப்பாட்டனாயிருக்கும்' நர்ஸ் சொல்லிட்டு இடி இடின்னு சிரிச்சா... இந்த நர்ஸ் புதுசு. 'அவரை நான் பார்க்கணுமே'ன்னா... அதுதான் அறிமுகப் படலம் செய்து வைத்தேன்".

இடையில் ஆயா வந்து தன் வேலையை செய்து விட்டு ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனாள்.

"நான் எங்கே நிறுத்தினேன்... ஆ, மறுநாள் அவன் என்னைப் பழி வாங்கற மூடில் இருந்தான். எல்லாரும் தூங்கப் போனப்புறம் நான் நைசா எழுந்து எங்க மாமாவோட மாமியார், பாட்டியை என் ரூமிலே படுக்கச் சொன்னேன். அவங்க தூங்கற வரை முழிச்சிட்டிருந்தவ... தூங்கின பிறகு எழுந்து நைசா தாழ்வார இருட்டிலே போய் ஒண்டிக்கிட்டேன். நான் போட்ட கணக்கு தப்பலே!"

ப்ருந்தா எதையோ நினைத்துக் கொண்டு கொஞ்சம் சிரித்தாள். வெள்ளமே நிறுத்திக் கொள்ளட்டும் என்று அவளை விட்டு விட்டேன்.

"நல்ல தூக்கம். ரொம்ப நாழி முழிச்சிண்டிருந்தது அந்தக் கரடுமுரடு தரையிலே கூட அசத்திட்டது. பாட்டி 'கடன்காரா, இழவெடுத்தவனே... உன் முழியே சரியில்லை! தூணுக்குப் புடவை கட்டி இருந்தாக் கூட துளைச்சுப் பார்க்கற சென்மம்'னு கூப்பாடு போட்டுட்டிருந்தாள். பின்னே பாட்டியைக் கட்டிப் பிடிச்சா சும்மா விடுவாளா? ஏற்கனவே பாட்டிக்கு தான் பேரழகிங்கற எண்ணம்... மறுநாள் காலையில் அந்த கும்பல் இடத்தை காலி செய்து விட்டது. இப்போ அவனுக்கு ஆறு பெண்கள். பிள்ளையே இல்லே... ஃபங்க்ஷன்கள்லே பார்த்தா 'ஹி, ஹி'ம்பான்"!

ப்ருந்தாவுக்கு நிறைய வியர்த்தது.

"ஏன் ப்ருந்தா... காலன் வீட்டுக் கதவை தட்டித்தான் ஆகணுமா? இப்போ இந்தக் கதையெல்லாம் அவசியம் சொல்லித்தான் ஆகணுமா?"

"என் பேச்சு உங்களுக்கு போரடிக்க ஆரம்பிச்சாச்சா?"

இப்படியெல்லாம் கேட்டால் என்ன பதில் சொல்வது?

"உன் உடம்புக்காகத்தான்! அப்புறம் என்ன நடந்தது?" அசௌகரியமான மௌனத்தைக் கலைக்க விரும்பினேன். வெய்யிலில் உலர்த்திய வற்றலாக சுருங்கிய முகம் எண்ணெயில் பொரிந்த வற்றலாக பூரித்தது. மறுபடி தொடர்ந்தாள்.

"ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அதை கேட்டீங்க... நீங்க ரொம்ப ரசிப்பீங்க... எங்க குழுவிலே ஒருத்திக்கு கல்யாணம். பணக்காரின்னு அவளுக்கு கர்வம். மாப்பிள்ளையும் ரொம்ப அழகு... பணம்! கொஞ்சம் கலாட்டா பண்ணனுங்கறது எங்க குழுவிலே சிலரோட ஆசை.

சாந்தி முகூர்த்தத்துக்கு அலங்காரம் பண்ண ஆன செலவிலேயே என் கல்யாணத்தை நடித்தி முடித்திருப்பார்கள். கப்பல் மாதிரி அமைப்பு. வெல்வெட் மெத்தை, தலையணை... நாங்கள்லாம் போய் பார்த்தேம். எங்களுக்கெல்லாம் சரியான வரவேற்புமில்லே!

'கொல்லன் பட்டறைக்கு ஈக்கு என்ன வேலை'ன்னு ஒரு அம்மா முணுமுணுத்தாங்க. ஏக எரிச்சல்லே இருந்தோமா? நிறைய ஊவா முள்- தெரியலே... புது பூந்தொடப்பத்திலே இருக்குமே... பூவோடு கலந்து போட்டுட்டு வந்துட்டோ ம்!"

"அடப்பாவிகளா?" அந்தத் தம்பதிகளை நினைத்த போது பாவமாக இருந்தது. பூனை போல் இருக்கும் என் ப்ருந்தாவுக்கா இத்தனை குறும்பு? ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் அவளைச் சூழ்ந்து கொண்டு "முதல் இரவு குத்தல் யாருக்கு ஜாஸ்தி உனக்கா, அவருக்கான்னு கேட்டோ ம்".

"என்ன சொன்னாள்?"

"ரொம்ப ஆவலோ? போர்வையை விரிச்சு கீழே படுத்துட்டாங்களாம்!"

இரண்டு பேருமே சிரித்தோம்.

"செல்வம்... நன் போட்ட ஒவ்வொரு ஊவா முள்ளும் விசுவரூபம் எடுத்து அவர் வாயிலிருந்து வருகிறது. வினை விதைத்தவள் அதன் அறுவடைக்கு பயந்தால் ஆகுமா? பிளான் போட்டுக் கொடுத்து செயலாக்கறது நான்தானே? இப்படி மனசைத் தேத்திண்டிருக்கிற சமயத்திலேதான் உங்களை சந்திச்சேன்.

அந்த நாளிலே எங்க பாட்டி காசிக்குப் போகணும்னு புலம்பிண்டிருப்பா. வயசான காலத்துலே அது ஒரு லட்சியம்; எல்லைக் கோடு. அங்கே முழுக்குப் போட கங்கை இல்லாட்டா... காசிக்கு ஏது பெருமை? கங்கை ஓடாட்டா எத்தனை பேர் போவா? சிவனும், சக்தியும் எல்லா இடத்துலேயும்தான் இருக்கா! காசிக்குப் போய்தான் தரிசனம் செய்யணுமா? இல்லே, அம்பாளும் ஸ்வாமியும் இருக்கிற இடத்திலே எல்லாம் கூட்டம் கட்டி ஏறுகிறதா?

என்கிட்டே திறமை இருந்திருக்கலாம். அதை வாய்ப்பு என்கிற மேடையிலே ஏத்தி பிரகாசிக்க வைத்தது பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த மாதிரின்னு..."

பேச முடியாமல் இருமல் வந்து விட்டது. "ப்ருந்தா, நீ அனாவசியமா கவலைப்படறே..."

"எனக்கு ஒரே ஒரு ஆசை செல்வம். அதை மட்டும் சொல்லிட்டு ஒரேடியா வாயை மூடிண்டுடறேன். பொதுவா இனி பிறவி வேண்டாம்னு கேட்கறவாதான் அதிகம். சிலர் ஈரேழு பிறவிக்கும் காதலராக இணைவோம் என்று வேண்டிப்பா! எனக்கு கண்டிப்பா அடுத்த ஒரெ ஒரு பிறவி வேணும். உங்களுக்காக காத்திண்டிருப்பேன். உங்க கடமையெல்லாம் முடிஞ்சு, ஆயுசு முடிஞ்சு வாங்க... நீங்க மறுபடி பிறந்தப்புறம்தான் நான் ஜனிக்கணும். உங்களையே கணவரா அடையணும். அம்மி மிதிச்சோ, மோதிரம் மாட்டிண்டோ ... நடக்குமா செல்வம்/ நடக்கணும். எனக்குனு ஆண்டவன்கிட்டே கேட்ட வரம் இது ஒண்ணுதான்.

அட, என்ன இது... எனக்கு தைரியம் சொல்லிட்டு நீங்க கோழையா! சே... நான் ரொம்ப குழப்பறேன் இல்லே. கண்ணைத் துடைங்க. மனசும், உடம்பும் உங்களுக்கே சொந்தமாகணும்னு நான் ஆசைப்பட்டதை வெளியே சொன்னது..."

டாக்டர் உள்ளே நுழைந்தார்.

"ப்ருந்தா... செல்வம் சார், ரொம்ப நேரமா பேசிட்டிருக்கீங்க போல இருக்கே! நாளை ஆபரேஷன் செய்யப் போற பேஷண்டுக்கு அது நல்லதில்லே... உங்க ஒத்துழைப்பு இருந்தாத்தான்..."

"எஸ் டாக்டர்" நான் வெளியே வந்து விட்டேன்.

ஆபரேஷன் முடிந்த ப்ருந்தா இரண்டு நாள் கழித்து ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்தாள். இரவு நேரங்களில் ஏதோ புலம்பினதாக சொன்னார்கள். மயக்க நிலையில் இரண்டு வாரம் இருந்தாள். 'செல்வம், 'செல்வம்' என்று குழறினாள். அப்புறம் எல்லாம் முடிந்துவிட்டது.

எனக்காக அவள் அங்கு காத்திருப்பாள். இங்கு என் கடமை முடிய அந்திமக் காலத்தை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன். அவள் பகிர்ந்த விஷயங்களை நினைக்கிறேன்.

'அடேய், நீ பாலைவனத்தில் பயணம் செய்யப் போகிறாய்' என்பதை நினைவூட்டி உணவும் நீருமாக நிரப்பி விட்டாள். அவைகள்தான் இந்த ஒட்டகத்தை நடத்திச் செல்கின்றன.

(கங்கை முடிந்தது)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |