Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 2
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

இனிமையானப் பாடல்களை கேட்பது ஒரு சுகம். அவ்வாறே பாடுபவர்களோடு அளவளாவதும் ஒரு சுகம். அதற்காகத்தான் பாஸ்கரிடம் ஆசையாகக் கேட்டேன்.

பாஸ்கரோ சிரித்தான். "அது அந்த கொத்தவால் சாவடி கிராக்கிதான்! இரு, கூப்பிடறேன்".

"வத்சல், வத்சல்... கொஞ்சம் பிருந்தாவைக் கூட்டிண்டு வாயேன். உங்க ரசிகர் ஒருத்தர் பாரட்டணுங்கறார்னு சொல்லு. 'விருட்'னு வந்துடுவா"!

கூப்பிட்டு கால் மணி நேரம் கழித்து, ஏற்கனவே எண்ணெய் குடுத்தியாக இருந்த முகத்தை, மேலும் சுருக்கிக் கொண்டு வந்தாள் நண்பனின் மனைவி. நண்பனுக்குக் கோபம் வந்தால் வத்தல் என்று கத்துவான்; பொருத்தமான பெயர்.

வத்சலாவுக்கு என் மேல் நல்ல அபிப்ராயம் கிடையாது. கதைக்குதவாத நண்பன். வெட்டித் தண்டம். காலணாவுக்குப் பிரயோஜனமில்லை; என்பதெல்லாம், அவள் உரகல். பின்னே! மாசத்திலே ரெண்டு சம்பளமா தருகிறார்கள்? இருபது தேதிக்கு மேல் இவர்களுக்குக் கடன் கொடுக்க? நானும் அந்த வர்க்கம்தானே! முந்திக் கொள்வேன்.

"உனக்காவது கதைப்பணம் வரும். நான் எங்கேடா போவேன்?" பாஸ்கர் நிஜமாகவே அப்பாவி. வத்சலா நேரிடை.

"வணக்கம்".

 

சிந்தனைச் சுழலிலிருந்து இழுத்து வந்த குரல், மறுபடி எங்கே தள்ளுகிறது.

"இவங்கதான் பிருந்தா. இவ புருஷனுக்கு ஜவுளிக் கடையிலே வேலை. கொஞ்சம் முன்னே 'மலைப் பொழுதினிலே' பாடினவங்க. பிருந்தா, இவன் என் கூட வேலை பார்க்கிறான். கொஞ்சம் எழுத்துப் பித்து. இந்த வாரம் கூட இதிலே கதை பிரசுரமாயிருக்கு. கொஞ்சம் சங்கீதக் கிறுக்கன். உங்களைப் பார்க்கணும்னு துடிச்சான். இப்போ வெட்கப் பட்டுண்டு..."

பாஸ்கர் பேசுவது ரொம்ப தூரத்தில் இருந்து கேட்டது.

பெண்மைக்கே உரிய சாகசம். முதலில் பார்வையை இழுத்துக் கொண்டு சமாளித்தவள் அவள்தான்.

"வணக்கம்... என்ன பேர்லே எழுதுவீங்க"?

என்னமோ வாய் பதில் சொல்லியது. அர்த்தமில்லாத உதட்டசைவுகள்.

எனக்கும் அவளுக்கும் என்ன உறவு? உலகில் முந்தின நிமிடம் வரை தெரியாதிருந்து இப்போது சொந்தம் கொண்டாடத் துடிக்கும் இந்த உணர்வுக்குப் பெயரென்ன?

வீட்டுக்கு வந்தேன். பேசாமல் மொட்டை மாடியில் ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு விண்மீனை எண்ணிக் கொண்டிருந்தேன்.

நான் எதனால் அடிபட்டேன்? சினிமாவில் எட்டு வில்லன்களோடு மோதிய களைப்பு. ஏதோ மூச்சு முட்டுகிறார் போல் இருந்தது.

என் தர்மபத்தினி இருக்கிறாளே. அவளுக்கு இங்கிதம் என்றால் கிலோ என்ன விலை என்று தெரியாது.

"ஏங்க சாப்பிட வரலியா? சன்னில் 'அலைகள்' ஆரம்பிச்சாச்சே!", அவளுடைய உலகமெல்லாம் சாப்பாடு, புடவை, நகை, தெருவம்பு, பணம் இவ்வளவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் இவற்றில் இருக்கும்.

"போன இடத்திலே சாப்பிட்டுட்டேன். நீ சாப்பிடறதுதானே?"

"இதை அப்பவே சொல்றதுக்கென்ன?" முணுமுணுத்துக் கொண்டே கீழே போய் விட்டாள்.

எனக்குத் தனிமை வேண்டும். நிதானமாக எண்ணங்களைக் கோர்வைப்படுத்தி அசை போட நேரம் வேண்டும். 'செவிக்கு உணவில்லாத போதுதானே வயிற்றுக்கு ஈய வேண்டும்!'

இங்கே செவி வழி பாய்ந்த தேனருவி, எதிரில் நின்று கண்வழி பேசி, நெஞ்சில் நிறைந்து ஜீரணிக்க முடியாமல் திணறுகிற போது சாப்பிடாவது? பிருந்தா புண்ணியத்தில் கொலஸ்ட்ரால் குறையட்டும்.

நான் இப்படியெல்லாம் பினாத்துகிறதைப் பார்த்து பிருந்தாவை இருபது வயதுக் குமரி என்று முடிவுகட்டி விடாதீர்கள். அவளுக்கும் வயது முப்பத்தைந்திலிருந்து முப்பதெட்டுக்குள் இருக்கலாம். காதருகில் லேசான நரை கூட... இப்போது புரிகிறதா எங்கள் காதலின் மகத்துவம். இதென்ன கிழட்டுக் காதல் என்கிறீர்களா? அதான் காதலுக்கு கண், வயது எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டேனே!

நானென்ன பெண்களையே பார்க்காதவனா? பேசாதவனா? என் மனைவி குரூபியா? அவள் மேல் ஆசையில்லாமலா மூன்று குழந்தைகளைப் பெற்றாள்! பிருந்தாவும் தன் புருஷன் மேல் பிரியமில்லாமலா நான்கு குழந்தைகளுக்குத் தாயாயிருப்பாள்? அவள் லேட்டஸ்ட் குழந்தைக்கு வயது ஆறு. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அம்மாவை அழைக்க மூன்று தரம் வந்துவிட்டது. தாயைப் போலவே பேசும் விழிகள்.

முதலில் நின்றுகொண்டே தயங்கித் தயங்கிப் பேசியவள் அப்புறம் எதிரே சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். அந்த முகத்திற்கே விழிகள்தான் அழகு. பிரசுரமாகிறதோ, இல்லையோ நான் எழுத்தாளனில்லையா? விழிகள் பேசிய கதைகளை நான் புரிந்து கொண்டேன். சகோதர பாசம், அது இதுவென்றெலாம் சொல்லி என்னை ஏமாற்ற முடியாது.

தன் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். பெரிய பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறானாம். இரண்டாவது பையன் எட்டாவது. மூன்றாவது பையன் ஐந்தாம் வகுப்பு.

வெறும் சதைவெறியை காதலென்று நினைத்த காலமும் உண்டு. அப்போ எனக்கு பத்தொன்பது வயது. மீசை அரும்பத் தொடங்கி இருந்தது. பதினாலு வயது அம்புலு ஆற்றங்கரைக்கு வந்து தண்ணீர் முகர்ந்து கொண்டு போகும் போது அசட்டுப் பார்வைகள் பார்த்துக் கொள்வோம்; அசடென்று இப்போதுதான் தெரிகிறது.

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |