நெஞ்சில் இத்தனை காலம் சுமையாய் கருவுற்றிருந்த குமுறல்கள் பிரசவிக்கட்டும் என நான் பொறுமையாய் இருந்தேன்.
'இப்போது சான்ஸ் கிடைத்தால் கச்சேரி செய்கிறீர்களா? நிஜமான மேதைகள் ஒளிந்து கொண்டிருக்கக் கூடாது", என்று நான் கேட்டேன்.
எது எப்படியோ பொது ஜனத் தொடர்பு எனக்கு அதிகம். சில சபா காரியதரிசிகள் என் நண்பர்கள். என் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பார்கள். பிருந்தாவின் வேகங்களுக்கு வடிகால் வேண்டுமென்று நினைத்தேன்.
"வாக்குக் கொடுத்தவர்களும் இல்லை. வாங்கிக் கொண்டவர்களும் இல்லை", விரக்தியாகச் சொன்னாள். இதற்குள் கொரிப்பதற்கு தேன்குழலும், குடிப்பதற்கு காபியும் வந்தன.
"உங்கள் கணவர் எப்படி?"
"பணம்! பணம் ஒண்ணுதான் அவர் லட்சியம். தவறான பாதையை நீக்கி அது அப்படி வந்தாலும் சரி. தனி வீடு, ஃப்ரிட்ஜ், டிவி, இப்படி வசதிகளின் மீது ஆசை கொண்டவர். அவர் சம்பளத்தில் அதெல்லாம் நிறைவேறுவது எந்தக் காலம்? 'உன்னை விட மட்டமான குரல். அவள் கச்சேரிக்கு பத்து வாங்குகிறாள். மாசத்தில் ரெண்டு கச்சேரி வந்து விடுகிறது' என்று அங்கலாய்ப்பார். 'நமக்கு யோகமில்லை. அந்த நாளிலிருந்து கச்சேரி தொடர்ந்திருந்தால் இப்போ ஃபேமஸ் ஆகியிருப்பாய்' என்று பொருமுவார். நான் நவராத்திரி, நலுங்கு, ஊஞ்சல் இதில் எல்லாம் விடாமல் பாடி ஆத்மதிருப்திப் பட்டுக் கொள்கிறேன்".
அவ்வளவுதான். முதல் நாள் இதற்கு மேல் சுமக்க என் நெஞ்சிலும் இடமில்லை. நேரமும் ஒத்து வரவில்லை.
பேராசைப்பட்ட மனம் மறுபடி அவளை சந்திக்க வேண்டும் என்று கூச்சலிட்டது. பண்பாடவெல்லவென்று அடக்கினேன். இருவருமே சமூகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டவர்கள். தவிர என் மனம்தான் இப்படித் துடிக்கிறது. பிருந்தாவின் மனசு புரியாமல் அலைந்தால் எப்படி? நானாவது ஆண்மகன். என் வேகங்கள், அவளுக்கு வேதனையை ஏற்படுத்தி விட்டால்?
உணர்ச்சிகளுக்குக் கடிவாளமிட்டேன். அடம் பிடிக்கும் குழந்தையை சமாதானப்படுத்துவது போல் சினிமா, நாடகம், ஷேத்ராடனம் என்று தீனி போட்டுப் பார்த்தேன். ஊஹும்... ஒன்றும் சரிபட்டு வரவில்லை.
சீ... வீடாவது? குடும்பமாவது? எல்லாரையும் உதறித் தள்ளிவிட்டு அவளுடன் உலகத்தின் எந்த மூலைக்காவது ஓடி விட்டால் என்ன என்று கூட எண்ணினேன். இளைஞனின் வேகமல்ல இது. நான் சம்பாதிக்கத் தெரிந்தவன். அவளைப் பட்டினி போடமாட்டேன்.
என் குடும்பத்துக்கும் ஓரளவு சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனால், என் நீட்டிய கரங்களைப் பற்ற அவளுக்குத் துணிச்சல் இருக்குமா? அவள் குழந்தைகள், இத்தனை காலமும் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயர், இதைத் தாண்டி வருவாளா? எந்த தைரியத்தில் இப்படி எல்லாம் சிந்திக்கிறேன்?
கேவலம் ஒரு நாள் பழக்கம்! சர்க்கஸ் பாரில் நீட்டிய கையை எதிர் ஊஞ்சல் ஆள் பிடிக்காமல் விட்டு விட்டால் அவன் கதி என்ன ஆகும்? அவளைப் பார்க்கவில்லையே தவிர விழித்திருந்தாலும், தூங்கினாலும், சாப்பிட்டாலும், வேலை செய்தாலும், சினிமா பார்த்தால் கூட அவள் நினைவுதான்!
அது ஏன் அப்படி என்றுதான் புரியவில்லை? இது அவளுக்குப் பிடிக்குமா? இதை ரசிப்பாளா? அவளைப் பற்றி நான் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. வழிதான் தெரியவில்லை.
இந்த சமயம் ஒரு சபா நண்பர் குறுக்கிட்டார். 'டிசம்பர் கச்சேரியில் பெயர் போட்டிருந்த ஒரு பாடகிக்கு உடம்பு சரியில்லை. வேறு ஆளை ஏற்பாடு செய்யப் போகிறேன். இது ஒரு அவஸ்தை' என்று அவர் புலம்ப, நான் ப்ருந்தா பெயரை சிபாரிசு செய்ய, 'ஆளை அழைத்துக் கொண்டு வந்து விடு' என்று அட்வான்ஸைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.
இந்த முறை ப்ருந்தாவின் கணவரும் இருந்தார். அட்வான்ஸை கையில் வாங்கினதும் சிரித்தார். 'எனக்கு வர முடியாது. உங்க பொறுப்பு' எனக் கைகழுவியும் விட்டு விட்டார்.
என் ப்ருந்தா... ஆம்...
அவள் கண்கள் என் உணர்ச்சிகள் தவறில்லை என்று சொல்லியது.
கச்சேரிக்குப் போனோம். 'இரண்டு பாட்டுக் கேட்டுவிட்டுப் போய் விடுவேன்' என்றுதான் ப்ருந்தாவிடம் சொன்னேன். வேறோரு முக்கியமான வேலை இருந்தது. என் மைத்துனன் ஊரில் இருந்து வந்திருந்தான்.
"முடிந்தால் போங்கள்", என்றால் அவள் புன்னைகையுடன். நிஜமாகவே முடியவில்லை. அவள் என்னை எவ்வளவு தூரம் உணர்ந்து கொண்டிருக்கிறாள்!
சாகித்யங்களை பக்தி பூர்வமாக வார்த்தைகளை சிதைக்காமல் பாடிய விதம் என்னை சிலிர்க்க வைத்தது.
பாரதியாருக்கும் ஒரு காதலி இருந்திருப்பாளோ என்று எனக்கு சந்தேகம்.
'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடிலோ... கண்ணம்மா"
நானே அவளால் தழுவப்பட்டேன்.
கச்சேரி முடிந்து வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசிக் கொள்ள வில்லை. டாக்ஸியிலிருந்து இறங்கியதும் சன்னமான குரலில் கேட்டாள்.
"நீங்கள் ரொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டேன்."
"உங்க கேள்வி பங்கப் படுறாப் போல நான் என்ன செய்தேன்?"
"கச்சேரியைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லலே?"
"தன்னைத் தானே புகழ்ந்துக்கறது முகஸ்துதி"
"மறுபடி எப்போ?" அவள் துனிசல் என்னை திகைக்க வைத்தது.
"கச்சேரி சான்ஸ் கிடைச்சா தான் பார்க்க வரணுங்கறதில்லை... இந்த மனசு எப்பவும் உங்களை வரவேற்க காத்திண்டு இருக்கும்".
(கங்கை வழியும்)
|