Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 5
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

ப்ருந்தா உள்ளே போய் விட்டாள். அதற்குள் ஐன்னல்களில், வராண்டாக்களில் ஏகப்பட்டத் தலைகள். உள்ளே போய் அவள் கணவனின் சம்பிரதாயமான நன்றியை பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

அதே விதமாய் என் சிந்தனைகள் ஒடினாலும் அதன் எதிரொலியின் அதிர்ச்சி ஒரு வாரத்துக்கு என்னை விடவே இல்லை.

முதலில் அவள் வீட்டை மாற்றி ஆக வேண்டும். இதை எப்படிச் சொல்வது, அவள் கணவன் ஒப்புக் கொள்ள வேண்டும். கடைக்குப் போக அவனுக்கு வசதியாக அந்த ஏரியாவில் அமைய வேண்டும். அவர்கள் வரும்படியில் வாடகை கொடுக்க வசதிப்பட்ட இடமாகவும் இருக்க வேண்டும். ஒரே குழப்பம்.

அடுத்த சான்ஸோடு நான் ப்ருந்தாவை சந்திக்கப் போகையில் இந்த யோசனையை அவளே சொன்ன போது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி! எண்ணங்கள் கூடவா ஒத்துப்போகும்?! இறைவன் செய்த தவறு... மனம் சேராத இருவருக்கு முடிச்சு போடுவது... சொர்க்கத்தில் எங்கள் திருமணங்கள் நிச்சயிக்கப்படும் போது இறைவனுக்கு தூக்கக் கலக்கமாக இருந்திருக்குமோ?

அப்பப்பா... "வீட்டுக்காக செல்வம் அலைகிறானே தெரியுமோ" என நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் பிரபலப்படுத்தி பேசும் அளவு அலைந்து அந்த வீட்டை பிடித்தேன். அது ஒரு அவுட்ஹவுஸ், முந்தைய வீட்டை விட வாடகை அதிகம் தான். ஆனாலும் ஒரு சௌகரியம். காம்பவுண்டுகள் உள்ள பணக்கார லொகாலிடி பங்களாக்கள். மற்றவர்களைப் பற்றிக் கேட்பது அநாகரீகம் என்ற கௌரவப் போர்வைக்குள் புகுந்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள்.

வீட்டு சொந்தகாரர்கள் ஹிந்தி ஃபிலிம் வினியோகஸ்தர். பாஷை தெரியாதது முதல் லாபம் என்றால், கார் வந்து நிற்பது சர்வ சாதாரணம். வருவோரும் போவோருமாய் இருபதால் என் வருகை ஒரு பொருட்டல்ல! என் பிருந்தாவைப் பார்க்க ஒரு வழி செய்தாகி விட்டது.

இதை அவள் கணவன் எப்படி எற்பானோ என்று நான் தயங்கிக் கொண்டே போக, "சீக்கிரமாய் ஒரு வீடு பார்க்க வேண்டும் செல்வம்... இங்கே இருக்கிறதுகள் பொறாமைப் பிண்டங்கள். ஒருத்தன் நாலு காசு வந்து வெள்ளையும், சொள்ளையுமாய் இருக்கக் கூடாதே? இவளுக்கோ எப்படியும் மாசம் இரண்டு சான்ஸ் கிடைக்கிறது..."

பிருந்தாவின் கணவன் அடுக்கிக் கொண்டே போக எங்கள் பரிபாஷையில் நான் பிருந்தாவைப் பார்க்க, என் ஆச்சரியத்துக்கு விடை அங்கே கிடைத்தது.


இப்போதெல்லாம் பிருந்தாவின் குடும்பத்தில் நானும் ஒருவனாகி விட்டேன். "உங்களைப் பார்க்காத நாளைக்கு சூரியன் உதிக்கிறதே அனாவசியம்னு படறது" ஒரு தடவை ஆபீஸ் டூர் விஷயமா ரெண்டு நாள் போன போது பிருந்தா வெளிப்படையாக இப்படிச் சொன்னது என் நினைவின் பிரதிபலிப்பா இருந்தது.

"தீர்த்தக் கரையினிலே, செண்பகத்தோட்டத்திலே காத்திருந்தேன்" அவள் மேடையில் பாடினாள். நான் அந்த இடத்துக்கே போய் விடுவேன்.

'காருலாவும், சீருலாவும் மிதிலையில் கன்னி மாடம் தன்னில்' சீதையாக அவள் காட்சி தந்தாள்.

'அந்த நாளின் சொந்தம் போல உருகுகிறார்', அவள் பாட்டாலேயே எனக்கு பதில் தருகிறாளோ?

ஐயத்தேவரின் கீத கோவிந்தங்களில் லயித்தாள். லயிக்க விட்டாள். அவள் ராதையாகலாம்! நான் கோவிந்தனுக்கு ஈடாவேனா?

ஒரு நாள் ஒரு பொழுதும் அவளின் விரல் நகத்தைக் கூட நான் ஸ்பரிசித்ததில்லை. ஆனால், மனத்தால் நெருங்கி... நெருங்கி... நெருங்கி... அங்கே இடைவெளியெ இல்லை!

அன்றைக்கு பிருந்தாவின் வீட்டிலிருந்து புறப்படும் போது செருப்பு அறுந்து விட்டது. சனியன்... கழிவு குப்பை ஒதுக்கி இருந்த இடத்தில் தூக்கி எறிந்தேன்.

மறுநாள் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்படும் சமயம் "இது சரியாயிருக்கிறதா என்று பாருங்கள்" பெட்டியிலிருந்த புதுச் செருப்புக்கள் பிருந்தா நீட்டினாள். ஒரே திகைப்பு! மலைப்பு!

இது நாள் வரை எனக்காக யாரும் எதையும் வாங்கித் தந்ததே இல்லை. என்னிடமிருந்து பற்றி கொண்டவர்கள் உண்டே தவிர இந்தா என்று தந்தவர் இல்லை!

ஆமாம், என் அளவு; நான் உபயோகிக்கும் அதே ரகம்; இதை எப்படி அவள் கண்டு பிடித்தாள்? என் ஒவ்வொரு அசைவையும் அவள் கண்காணிக்கிறாள். இருவர் கண்களிலும் ஒரே ஜலம்!

"சார், புதுச் செருப்பு வாங்கி இருக்கிறார். நன்னாயிருக்கிறது. உங்களுக்கும் இந்த மாதிரி வாங்கினால் உழைக்காது?"

ஓ, அவள் கணவன் வருகிறானோ!

"அதெல்லாம் அவருக்குத் தாங்கும். நமக்கு கட்டுமா? விலை என்ன... அம்மாடி இருநூறா?" என்று சம்பிரதாயத்துக்குப் பின் விஷயத்துக்கு வந்தான்.

"ஏன் சார்... இனி மேல் ரேட்டைக் கொஞ்சம் உசத்தினாலென்ன? அது தான் நிறையக் கச்சேரி வருதே! அந்த கல்யாணக் கச்சேரியும், சபா கச்சேரிக் காரங்களும் ஒரே டேட் கேட்கறாங்களே... சபாக்காரங்களை வேற தேதிக்கு மாத்திக்கச் சொல்லப்படாதா?" அவர் உலகமே வேற! அன்பால் தடைப்பட்டிருந்த என் நா எதையும் பேச விரும்பவில்லை. தலையை அசைத்து விட்டுப் புறப்பட்டேன்.

"அம்மா, அப்பா புதுச்செருப்பு வாங்கி இருக்காங்க, பார்த்தியா?" பொங்கலுக்கு வந்திருந்த என் மூத்த மகள் தான் கேட்டாள்.

"அதிசயமா இருக்குதே! உங்கப்பாவுக்கு ஒரு பொருளை துப்பா வாங்கத் தெரியாது. தனக்குன்னு சிகரெட் பாக்கெட்டைத் தவிர ஒண்ணு வாங்கிட்டது கிடையாது..." அவள் கண்களில் சந்தேகச் சாயல்.

இதிலே ஒரு சௌகரியம் என்னவென்றால் கதைப் பணம் எவ்வளவு என்றோ, அது எப்போ வந்தது என்றோ அவளிடம் சொல்வது இல்லை. அது என் பெர்சனல். அதனால் செருப்பு வாங்க பணம் எப்படி வந்தது என்ற கேள்வியிலிருந்து தப்பினேன்.

சொல்ல மறந்துட்டேனே! பிருந்தாவை சந்தித்த முகூர்த்தமோ என்னவோ ஆபிஸில் ஒரு பிரமோஷன். கதைகளும் கொஞ்சம் தாராளமாக வெளி வர ஆரம்பித்திருந்தது. ஒரு வேளை உண்ர்ச்சிகளுக்கு இப்போது தான் உயிர் வந்திருக்கிறதோ?

மலேயா சினேகிதன் ஒருத்தன் கூட வந்து வாங்கித்தந்ததாக சொல்லி சமாளித்தேன்.

"செருப்பு நிஜமாகவே பளபளான்னு நல்லா இருக்குப்பா. மாப்பிள்ளைக்கும், உங்களுக்கும் ஒரே அளவு தான்! அவுங்களும் இதே போல வாங்கணுமின்னு சொல்லிட்டிருந்தாங்க... நீங்க வேறே வாங்கிக்குங்களேன்! அவுங்க போட்டுக்கட்டம் இதை"

"அப்பா மாட்டேன்னா சொல்லப் போறாங்க! இதையெல்லாம் போய் கேட்டுக்கிட்டு? இவருக்கென்ன... மருமகன் தான் போட்டுக்கட்டமே" என் மனைவியின் தீர்ப்பு இது.

செருப்பின் பளபளப்பும், விலையும் இவர்கள் கண்ணில் படுகிறது! அதில் தெரியும் அன்பு, கரிசனம், விலை கொடுத்து வாங்கக் கூடியதா? தணிந்தே போய் கொண்டிருந்த எனக்கு அப்படி ஒரு ஆக்ரோஷம் எப்படி வந்தது?

"மனுஷன் ஒரு நல்ல பொருள் வைச்சிருக்கப்படாதே! கண்ணிலே உறுத்திடுமே? இதை யாரும் தொடப்படாது... மருமகப் பிள்ளைக்கு வேணாமின்னா இதுலே அம்பது ரூபா இருக்கு. வாங்கிக் கொடு" கவரை அலமாரியில் தூக்கி எறிந்தேன். அதைத் துடைத்து பெட்டியில் வைத்தேன். அது தேய்ந்து போவதா என்று நான் நினைத்தேன்.

திருவையாற்றுக் கச்சேரிக்குப் போய் வந்த பின் பிருந்தாவைப் பார்க்கவே இல்லை. இந்த மூன்று நாளும் மூன்று யுகமாக இருந்தது.

கச்சேரிகள் பண்ண மற்ற பாடகர்களின் கச்சேரிகளையும் நிறையக் கேட்க வேண்டும். பிருந்தாவின் கணவரின் அனுமதியோடு நிறைய டிக்கட்டுகளை பிருந்தாவுக்கு கொடுத்தேன். எல்லாம் ஓசி என்று அவரிடம் சொன்னாலும் உண்மை என் பிருந்தாவுக்குத் தெரியும்.

கச்சேரி ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்னாலேயே போய் விடுவோம். கச்சேரி ஆரம்பித்ததும் நாங்கள் புறப்பட்டு விடுவோம்.

என்ன பேசுவோம்... என்னவோ, போங்கள்!

வம்பில்லை...
அரசியலில்லை...
விளையாட்டில்லை...

ஆனாலும் விஷயமிருந்தது...!

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |